அசோலா உற்பத்தி முறை!

அசோலா உற்பத்தி முறை!

 

அசோலா உற்பத்தி முறை!

கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிகச் செலவைப் பிடிப்பதும் தீவனம் தான். மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றில் இலாபமடைய வேண்டுமெனில், தீவனச் செலவைக் குறைக்க வேண்டும். குறைந்த செலவில் மாற்றுத் தீவனங்களை உற்பத்தி செய்தால் தான் இது சாத்தியப்படும். இத்தகைய மாற்றுத் தீவனமாக, சத்து மிகுந்த, எளிதில் உற்பத்தி செய்யக் கூடிய அசோலா உள்ளது.

அசோலாவிலுள்ள சத்துகள்

நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்த  அசோலாவில் 25-30% புரதச்சத்து, 14-15% நார்ச்சத்து, 3% கொழுப்புச்சத்து, 45-50% மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுப்புகள் மற்றும் பல நுண் சத்துகள் உள்ளன. பொதுவாக, தாவர இலைகளில் மிகுந்துள்ள டானின் என்னும் நச்சு, அசோலாவில் மிகவும் குறைவாக இருப்பதால், சிறந்த கால்நடைத் தீவனமாகத் திகழ்கிறது.

வளர்ப்பு முறை

அசோலாவைத் தொட்டிகளில், வயல்களில் வளர்க்கலாம். தொட்டியின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் வயல் மண்ணை இட்டு நிரப்ப வேண்டும். பிறகு 10 செ.மீ. அளவில் நீரை நிரப்பி, சதுர அடிக்கு 5 கிராம் வீதம் சூப்பர் பாஸ்பேட், 250 கிராம் பசுஞ்சாணம் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு 200 கிராம் அசோலாவைத் தொட்டியில் இட வேண்டும். இரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து மூன்று கிலோ வரை கிடைக்கும். தொட்டியில் அசோலா வளர வளர, தினசரி ஒரு பகுதியை எடுத்துத் தீவனமாக இடலாம். ஒரு ஏக்கரில் 10 டன் மகசூல் கிடைக்கும்.

கால்நடைத் தீவனம்

கலப்புத் தீவனத்துடன் அசோலாவைக் கலந்து கால்நடைகளுக்குத் தரலாம். கோழி, வான்கோழி, வாத்து போன்றவை அசோலாவை மிகவும் விரும்பி உண்ணும். வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் கோழிக்கு 100-300 கிராம் வீதம் அசோலாவைக் கொடுக்கிறார்கள். கோழிக்குஞ்சுத் தீவனத்தில் 20% அசோலாவைக் கலந்து கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையை அடையும். மீன்களும் மற்ற நீர்த் தாவரங்களை விட அசோலாவை விரும்பி உண்ணும்.

பச்சை அசோலாவைத் தினமும் ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1-2 கிலோ கொடுக்கலாம். கறவை மாடுகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலுற்பத்தி 15-20% அதிகரிக்கும். பாலின் கொழுப்புச்சத்து 10% வரை உயரும். மொத்தத்தில் பாலுற்பத்திச் செலவு குறைந்து இலாபம் கூடும்.

மிகக் குறைந்த உற்பத்திச் செலவில் கிடைக்கக் கூடிய உயிர் உரம் அசோலா. இது நீலப்பச்சைப் பாசியுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து விரைந்து வளர்ந்து பெருகி, அதிக மகசூலைக் கொடுக்கிறது. அசோலா தனது எடையை 2-3 நாட்களில் இரண்டு மடங்காக்கி விடும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அசோலாவை விவசாயிகள் அனைவரும் வளர்த்துப் பயனடையலாம்.

முனைவர் ஆ.இராஜேஸ்குமார், முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories