உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

 

உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

சோலா பெரணிவகை நீர்த்தாவரம் ஆகும். மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களையும், ரைசோம்களையும் கொண்டது. பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது முக்கோணம் மற்றும் பலகோண வடிவத்திலும் இருக்கும். நீர்நிலைகளில் நன்றாக வளரும். அசோலா இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் அனபீனா அசோலா உள்ளது. இந்த நீலப்பச்சைப் பாசி, தழைச்சத்தை நிலை நிறுத்தும்.

அசோலாவும் அனபீனாவும் சேர்ந்து கூட்டு வாழ்க்கை நடத்துவதன் மூலம், அசோலா தன் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்தை, அனபீனா அசோலாவில் இருந்து பெறுகிறது. அசோலா பின்னேட்டா நமது வயல்களில் அதிகமாக உள்ளது. அசோலாவில் தழைச்சத்து, சாம்பல் சத்து, கரிமச்சத்து அதிகமாக இருப்பதுடன், இது மண்ணில் விரைவாக மட்கி, பயிர்களுக்குப் பயன்படும் தழைச்சத்தைக் கொடுக்கிறது.

அசோலா மிதமான தட்ப வெப்பத்தில் நன்றாக வளரும். இதைச் சம்பா நெல்லுக்கு ஏற்ற உரமாகப் பயன்படுத்தலாம். நடவு முடிந்து 10-15 நாட்களில் ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவைப் பயன்படுத்தலாம்.

நாற்றங்காலில் அசோலா உற்பத்தி

முதலில் நிலத்தைப் பண்படுத்தி, 20×2 மீட்டர் பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். பின்பு பாசனம் செய்ய வாய்க்காலை அமைக்க வேண்டும். பிறகு 10 செ.மீ. அளவில் நீரைக் கட்ட வேண்டும். இந்த நீரின் அளவு குறையக் கூடாது. ஒரு பாத்தியில் 20 லிட்டர் வீதம் சாணக் கலவையை இட வேண்டும். ஒரு பங்கு சாணமும் இரு பங்கு நீரும் கொண்டு சாணக் கரைசலைத் தயாரிக்கலாம். அந்தக் கரைசலை ஒரு சென்ட் பாத்தியில் தெளித்துவிட வேண்டும். மண்ணில் மணிச்சத்துக் குறைவாக இருந்தால், 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை மூன்றாகப் பிரித்து நான்கு நாட்கள் இடைவெளியில் இட வேண்டும். பிறகு, 8 கிலோ அசோலவைப் பாத்தியில் இட வேண்டும். இந்தப் பாத்தியில் பூச்சிகள் இருந்தால் 25 கிராம் பியூரிடான் குருணையை இட வேண்டும். இப்படிச் செய்தால் 15-21 நாட்கள் கழித்து 100-150 கிலோ அசோலா கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை

நாற்று விட்டு 10-15 நாட்கள் கழித்து இந்த அசோலாவை நெல் வயலில் இட வேண்டும். இது 21 நாட்களில் வயலில் வளர்ந்து 10 டன் அசோலாவாக மாறும். இது வளரும் போது களைகள் வளர்வதைத் தடுக்கும். இந்த அசோலாவை நிலத்தில் மிதித்துவிட வேண்டும். இது மண்ணில் நன்கு மட்கி, நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தை உரிய நேரத்தில் கொடுத்து விளைச்சலைக் கூட்டும். இது ஆடு மாடு, கோழி, மீனுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலாவின் பங்கு முக்கியமானது.

முனைவர் ச.பொற்பாவை, மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம், தஞ்சாவூர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories