கலப்பினக் கரும்பு ஒரு புதிய முயற்சி……

நவீன இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் பங்குண்டு. சர்க்கரை ஆலைகளின் இடுபொருளான கரும்பு இந்தியாவில் விளைந்தபோதும், அதன் இனிப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே ஜாவா போன்ற தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து கரும்பு, சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்த்து.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்று முயன்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா. இந்திய கரும்பு ரகங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளைத் துவங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதை ஏற்று, சி.ஏ.பார்பர், டி.எஸ்.வெங்கட்ராமன் ஆகிய இரு விஞ்ஞானிகள் கரும்பு ஆராய்ச்சியைத் துவக்கினர்.

தமிழகத்தின் கோயம்புத்தூரில், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தைத் துவங்கிய அவர்கள், பல்வேறு வீரிய ஒட்டுரகக் கரும்பினங்களை உருவாக்கினர். அதன் காரணமாக இந்தியாவில் கரும்பு விளைச்சல் ஐந்தாண்டுகளில் இரு மடங்காகியது. அதன் சர்க்கரை பிழிதிறனும் அதிகரித்தது.

இந்தப் பணியில் விஞ்ஞானிகள் வெங்கட்ராமன், பார்பருடன் இணைந்து பணியாற்றி, இந்திய கரும்பினங்களின் இனிப்பு சுவை, பிழிதிறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள். சிறந்த தாவரவியல் விஞ்ஞானியான அவர், உயிர்க்கல மரபியல் (cytogenetics), தொகுதிப் புவியியல் (phytogeography) துறைகளில் முன்னோடியாவார்.

கேரளத்தின் தலச்சேரியில், 1897, நவ. 4-இல் பிறந்தார் ஜானகி. அவரது தந்தை எட்வலேத் கக்கத் கிருஷ்ணன், சென்னை மாகாணத்தில் நீதித்துறை நடுவராகப் பணிபுரிந்தார். தாழ்த்தப்பட்ட தீயா சமூகத்தில், ஆறு சகோதரர்களுடனும் ஐந்து சகோதரிகளுடனும் பிறந்த ஜானகிக்கு படிப்பில் அதீத ஆர்வம். அவரது குடும்பமும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.

இளமையிலேயே தாவரவியலில் ஈடுபாடு கொண்ட ஜானகி, தலச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் ஹானர்ஸ் பட்டமும் பெற்றார். மாநிலக் கல்லூரியில் பயின்றபோது அங்கிருந்த பேராசிரியர்களின் தாக்கத்தால் உயிர்க்கல மரபியலில் ஆர்வம் கொண்டார்.

படிப்பை முடித்தவுடன் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி கற்பித்தார். இடையே, அமெரிக்காவின் மிக்ஸிகன் பலகலைக்கழகம் சென்ற அவர், அங்கு முதுநிலைப் பட்டம் பெற்று (1925) நாடு திரும்பி, மீண்டும் கல்விப்பணியைத் தொடர்ந்தார்.

பிறகு கிழக்கு நாடுகளுக்கான பார்பர் நினைவு உதவித்தொகையை முதலாவதாகப் பெற்ற அவர், மிக்ஸிகன் பல்கலைக்கழகம் சென்று ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து, 1931-இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். வெளிநாடு சென்று ஆய்வியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அவர்தான். அதன் பின் நாடு திரும்பிய ஜானகி, 1932 முதல் 1934 வரை, திருவனந்தபுரத்தில் உள்ள மஹாராஜா அறிவியல் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு கோவையில் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தில் மரபியலாளராக விஞ்ஞானி பார்பருடன் இணைந்து பணியாற்றினார். அப்போது சச்சாரம் ஸ்பான்டேனியம் என்ற (Saccharum spontaneum) காட்டினக் கரும்பு ரகத்தின் மரபியலை அவர் ஆராய்ந்தார். அதன் விளைவாக, அங்கு பல உள்நாட்டுக் கலப்பு மரபின கரும்பு ரகங்களை உருவாக்கினார்.

கரும்பு சார்ந்த உயிர்க்கலவியல் ஆய்வுகளில், கரும்பில் பல சிறப்பினக் கலப்பு, மரபினக்கலப்பு வகைகளை, கரும்பையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும் மூங்கில் போன்ற புல் பேரினங்களையும் இணைத்து உருவாக்க வழிவகுத்தது ஜானகியின் ஆராய்ச்சி. உள்நாட்டு கலப்பினக் கரும்பு ரகங்களான Saccharum x Zea, Saccharum x Erianthus, Saccharum x Imperata, Saccharum x Sorghum ஆகியவை அப்போது உருவாக்கப்பட்டன. ஆயினும் அங்கு ஜாதிரீயான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட ஜானகி, அங்கிருந்து வெளியேறினார்.

அதையடுத்து, லண்டன் சென்ற அவர், அங்கு 1940 முதல் 1945 வரை, ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை உயிர்க்கலவியல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அடுத்து, விஸ்லேயிலுள்ள அரசு தோட்டக்கலைக் கழகத்தில் 1945 முதல் 1951 வரை, உயிர்க்கலவியல் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார்.

அவர் பிரிட்டனில் இருந்த காலம் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலமாகும். ஜெர்மானிய விமானங்களின் குண்டுவீச்சுப் புகை நடுவே அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-இல் நாடு திரும்பிய ஜானகி, Botanical Survey of India- (BSI)- இன் சிறப்பு அலுவலராக 1952-இல் பொறுப்பேற்றார். அப்போது அவரது முயற்சியால், பிஎஸ்ஐ நான்கு பிராந்திய மையங்களில் இயங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. கோவை (1955), புனா (1955) ஷில்லாங் (1955), டேராடூன் (1956) ஆகிய மையங்கலிலும் கொல்கத்தாவில் தலைமையகமும் கொண்டதாக பிஎஸ்ஐ மேம்படுத்தப்பட்டது. அதன் தலைவராகவும் அவர் உயர்ந்தார்.

அலாகாபாத்திலுள்ள மத்திய தாவரவியல் ஆய்வகத்தின் தலைவராகவும், ஜம்முவிலுள்ள பிராந்திய ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலராகவும், அரசுப் பணியில் ஜானகி பணியாற்றினார். டிராம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும் சிறிதுகாலம் அவர் பணி புரிந்தார்.

இறுதியாக 1970-இல் சென்னை திரும்பிய அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மையத்தில் மதிப்புறு விஞ்ஞானியாகச் செயல்பட்டார். அப்போது மதுரவாயலில் உள்ள மத்திய கள ஆய்வகத்தில் 1984 வரை பணியாற்றினார்.

இந்திய அறிவியல் அகாதெமி (1935), இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (1957) ஆகியவற்றில் உறுப்பினராக ஜானகி அம்மாள் இருந்தார். அவருக்கு 1977-இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சாகுபடிப் பயிரினங்களின் குரோமசோம் வரைபடங்கள் என்ற நூலை விஞ்ஞானி சி.டி.டார்லிங்கனுடன் இணைந்து (1945) எழுதி வெளியிட்டார் ஜானகி. தாவரங்களும் மனிதர்களும் (1974) என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார்.

ஓய்வுக்காலத்தில் மூலிகைத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளிலும் (ethnobotany)அவர் ஈடுபட்டார். கேரள மழைக்காடுகளிலுள்ள அரிய மூலிகைகளின் மாதிரிகள் சேகரித்த அவர் அவற்றை முறைப்படி பட்டியலிட்டார்.
திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் தாவரவியல் ஆராய்ச்சிக்கே செலவிட்ட ஜானகி அம்மாள், 1984, பிப். 7-இல் மறைந்தார்.

உயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த ஆய்வு மாணவர்களை உருவாக்கும் நோக்கில், வனத்துறை அமைச்சகம் சார்பில் இ.கே.ஜானகி அம்மாள் தேசிய விருது 1999 முதல் விலங்கியல், தாவரவியல் பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories