“கம்பளி புழு பயிர் தெம்பினை வாங்கும்”
விவசாயத்தில் புழு,பூச்சிகள் தாக்காதவாறு பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை கையாள வேண்டும். இல்லையென்றால் பயிர்கள் முழுவதையும் அழிக்கும் வரை அவை ஓயாது .இதனால் மகசூல் மற்றும் பொருளாதார இழப்பு பெருமளவில் ஏற்படும். அந்த வகையில் இன்றைய வேளாண் பழமொழியை இங்கு காணலாம்.
பிரகதீஷ் என்பவருக்கு தனது வயலில் செடி முருங்கை சாகுபடி செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்தது. அதன்படி அதன் சாகுபடி பற்றிய அனுபவம் உள்ள தனது பக்கத்து நிலத்தை சேர்ந்த கமலேஷ் வந்தவரிடம் கேட்கச் சென்றிருந்தார்.
அங்கு சென்று எனது வயலில் செடி முருங்கை நடவு செய்யலாம் என்று நினைத்துள்ளேன் அதன் சாகுபடி குறித்த விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என வந்துள்ளேன் என்றார்.
அதற்கு கமலேஷ் செடிமுருங்கை சாகுபடி செய்வது எளிது தான். செடி வகைகளில் பிகேஎம் 1 பிகேஎம் 2 என்ற இரு முக்கிய ரகங்கள் உண்டு. பொதுவாக அனைத்து மண் வகைகளிலும் வளரும். நமது மண்ணும் ஏற்றதுதான் .ஜூன்- ஜூலை நவம்பர்- டிசம்பர் ஆகிய பருவங்கள் நடவு செய்ய மிக உகந்தவை.
உழுது சமன் செய்த நிலத்தில் 2.5 மீ x2.5 மீட்டர் இடைவெளியில் 45x45x45 சென்டி மீட்டர் நீளம், அகலம், ஆழமுள்ள குழி எடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் ,மேல் மண் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து நிரப்பி குழிகளின் மத்தியில் விதைகளை விதைக்க வேண்டும் .ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகள் போதுமானது 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைத்து விடும் என்றார்.
சரி நீர் பாசனம் எவ்வாறு செய்ய வேண்டும் .அதிக நீர் தேவைப்படுமா? என்றார் பிரகதீஷ்
அதற்கு கமலேஷ், முருங்கைக்கு குறைவான நீர் அளவு இருந்தால் போதும் .விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தை கலையின்றி பராமரிக்க வேண்டும் .மண்ணின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது களையெடுத்து சுற்றி கொத்தி செடிக்கு இரண்டு கிலோ மண்புழு உரம் இட்டால் போதும் செடிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும் என்றார்.
செடி முருங்கையில் பூச்சித்தாக்குதல் என்றால் வேறு என்ன கம்பளிப்புழு தான். “கம்பளிப்புழு பயிர் தெம்பினை வாங்கும்” என்றார்.
கம்பளிப்பூச்சி முருங்கையின் இலை முழுவதும் அழித்து , ஒளிச்சேர்க்கை செய்யாவிட்டால் செடியின் விளைச்சலை முழுவதும் பாதித்துவிடும் .இதனால்தான் “கம்பளி புழு பயிர் தெம்பினை வாங்கும்”
என்று சொன்னேன் என்றார்.
இதை எவ்வாறு தடுக்கலாம் என்றார். குளிர்காலத்தில் கம்பளி பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் .அந்த நேரத்தில் பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய் 200 கிராம் வசம்பு பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கப்பட்ட இலைகளை கம்பளிப் புழுக்கள் தொடர்ந்து உண்பதால் அவற்றை எளிதாக கட்டுப்படுத்த முடியும். மற்ற பூச்சிகளும் தாக்காது .விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு கிடைக்கும் என்றார்.