: சாணத்தை விட மூன்று மடங்கு பலன் :
சேலத்தில் பட்டுப்புழு கழிவில் இருந்து விவசாயி சமையல் எரிவாயு தயாரித்து பயன்படுத்தி வருகிறார். இது சாண எரிவாயுவை காட்டிலும் மூன்று மடங்கு பலன் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்திய அரசு மாற்று எரிசக்திகளை மக்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சூரிய சக்தி, சாண எரிவாயு, காற்றாலை என மாற்று எரி சக்தி பயன்படுத்துபவர்களுக்கு மானிய கடனுதவிகளை அரசு வழங்கி வருகிறது. சாண எரிவாயு பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், பட்டுக்கூடு விவசாயி, தான் வளர்க்கும் பட்டுப்புழுக்களின் கழிவுகளை கொண்டு எரிவாயு தயாரித்து, வீட்டு சமையல் அடுப்புக்கு பயன்படுத்தி வருகிறார்.
மல்பெரி விவசாயம் :
இதுகுறித்து சேலம் டி.பெருமாபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது :
கடந்த 40 ஆண்டுகளாக மல்பெரி விவசாயம் செய்து, பட்டுக்கூடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். சாண எரிவாயுக்கு வங்கி கடனுதவி வழங்கும் வங்கிகள், பட்டுப்புழு கழிவு மூலம் எரிவாயு கலன் அமைக்க உதவிட முன் வரவில்லை. எனவே, சொந்த செலவில் எரிவாயு கலன் அமைத்து கொண்டேன்.
இதற்காக 12 அடி ஆழமும், 8 அடி விட்டத்தில் சுற்றுசுவர் எழுப்பி, நடுவில் குறுக்கு சுவர் 8 அடி உயரத்துக்கு எழுப்பினேன். இந்த கலனில் பட்டுப்புழு கழிவுகளை ஒரு புறத்தில் கொட்டியதும், அக்கழிவு எரிவாயுவை உற்பத்தி செய்து, முடித்து வெளியே வர 48 நாட்களாகிறது. 5 பேர் வசிக்கும் ஒரு வீட்டுக்கு ஐந்து கிலோ பட்டுப்புழு கழிவு இருந்தால், தேவையான எரிவாயு கிடைத்து விடுகிறது. இதுவே சாணமாக இருந்தால் 20 கிலோ தேவைப்படும். சாண எரிவாயுவை காட்டிலும் இக்கழிவு மூன்று மடங்கு பலனை அளிக்கிறது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், பட்டுப்புழு கழிவு எரிவாயு கலன் அமைத்து நல்ல பலனை பெறலாம்.
தமிழகத்தில் முதல் முறையாக :
இதுகுறித்து மத்திய பட்டுவாரிய விஞ்ஞானிகள் சக்திவேல், தாகீராபீவி ஆகியோர் கூறியதாவது :
டி.பெருமா பாளையம் விவசாயி சண்முகம் தமிழகத்தில் முதல் முறையாக பட்டுப்புழு கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் கலன் அமைத்துள்ளார். மாட்டு பண்ணை வைத்துள்ளவர்கள் சாண எரிவாயு பயன்படுத்துவது போல, பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் குறைந்த செலவில் எரிவாயு கலன் அமைப்பதன் மூலம் வீட்டுக்கு தேவையான எரிவாயுவை பெறலாம். இதன் மூலம் மாதம் ரூ.650 சமையல் எரிவாயு செலவும் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.6,500 வரை சேமிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.