ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் இருந்தார் .அவர் எதைக் கூறினாலும் பழமொழியை மட்டும்தான் கூறுவார் .முழுமையாக எதையும் கூற மாட்டார்.
ஒருநாள் அவர் வீட்டின் அருகில் ஒருவர் நிலத்தை உழுது விவசாயப் பணியை செய்து கொண்டிருந்தார்.
அதை உற்று கவனித்துக் கொண்டிருந்த முதியவர் அவரிடம் சென்று அதைப் பற்றி விசாரித்தார் .அதாவது என்ன நடவு செய்யப் போகிறீர்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டார்.
அதற்கு அந்த நபர் முதியவரிடம் வாழையை நடவு செய்வதாக தெரிவித்தார். மேலும் செலவு உள்ளிட்ட பல தகவல்களையும் அவரிடம் கூறினார். இறுதியாக அந்த நபரிடம் நீங்கள் வசதியானவர என முதியவர் கேட்டார்.
அதற்கு அந்த நபர் இல்லை என்றார்.பிறகு ஏன் வாழையை நடவு செய்கிறீர்கள் என்றார்.
வசதிக்கும் வாழைக்கும் என்ன சம்பந்தம் என அந்த நபர் முதியவரிடம் கேட்டார்.
அதற்கு அந்த முதியவர் வழக்கமாக கூறுவதைப் போல் “வலுத்தவனுக்கு வாழை இளைச்சவனுக்கு எள்ளு ”
எனக் கூறிவிட்டு, நீங்கள் எள்ளை நடவு செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
அதைக் கேட்ட நபர் ஏன் இவ்வாறு அந்த முதியவர் கூறினார் என சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் வயதானவர்அதனால் தான் கூறுகிறார் என அதை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.
சில காலம் சென்று விட்டது. வாழை மரங்களும் நன்கு வளர்ந்து பலன் தரும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் பலத்த காற்று, மழை பெய்தது.
அதில் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் அந்த நபருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுவிட்டது அதனை அவரால் ஈடுகட்ட முடியவில்லை.
அந்த கவலையுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
அங்கு ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவனிடம் சென்று அந்த நபர் என்ன படித்துக் கொண்டிருக்கிறாய் எனக்கேட்டார். எங்கள் பள்ளிக்கூடத்தில் பழமொழிகள் மற்றும் அவற்றின் விளக்கங்களைப் பற்றி தேர்வு நடக்க உள்ளது. அதை தான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.
அப்போது சிறுவன் “வலுத்தவனுக்கு வாழை இளைச்சவனுக்கு எள்ளு ”
அதைக் கேட்ட நபர் இது என்ன அந்த முதியவர் கூறியது போல இருக்கிறது என்று எண்ணி அந்த சிறுவனிடம் இது என்ன பழமொழியா? எனக்கேட்டார். ஆமாம் என்றான் சிறுவன்.
அப்படி என்றால் இந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் விவசாயத்தை மேற்கொள்ளும் போதும், பயிரிடும் பயிர் நமது பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
பயிர் செய்ய பணம் இருப்போர் வாழையை பயிர் செய்யலாம். அவ்வாறு பயிர் செய்யும் போது சில சமயம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களால் தாங்கிக் கொள்ளவும் ஈடுகட்ட முடியும். அதேபோல் வசதி இல்லாதவர்கள் செலவு குறைந்த பயிரான எள்ளை பயிர் செய்தால் அத்தகைய பாதிப்பு ஏற்படாது இதனை தான் அந்த பழமொழி உணர்த்துகிறது என்று கூறினார் .
ஒரு வரிக்கு எவ்வளவு அர்த்தம் உள்ளதா? இதைத்தான் அந்த முதியவரும் அன்றைக்கு என்னிடம் கூறினார் என நினைக்கிறேன். நான்தான் அதை கண்டுகொள்ளவில்லை. இதை நான் அன்றே அறிந்திருந்தால் இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு இருக்காது என வருந்தினார்.