உடனடி பலன் கொடுக்கும் ஆடு வளர்ப்பு……

மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை உண்டு.

அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள்.

ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி… ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.

இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு.

சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

இரண்டு முறைகளில் ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை.

கிடாக்களை வாங்கி வளர்த்து விற்றால் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம்.

சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து விற்கலாம்.

தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமாக இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தாம் அதிககிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமாக வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளை வளர்ப்பதும் இலாபமே.

“கிடாக்களை வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செலவில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.

புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்துகளைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக்கொட்டகையில் வைத்திருக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.

கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில் தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக்காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக 5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடானல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம்,கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்.

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், “30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். ‘கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1750 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்காலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories