அதிக லாபம் தரும் நெல்லி

 
வறட்சியைத்தாங்கி வளரக்கூடிய பயிர்களில் முக்கியமானது, நெல்லி. சில ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யாத சூழ்நிலையிலும், உயிர் பிடித்து நின்று, ஒரு மழை கிடைத்தவுடனேயே தளதளவென வளரும் ஆற்றல் கொண்ட பயிர் இது. அதனால்தான் தண்ணீர் பற்றாக்குறையுள்ள விவசாயிகள் பலரும் நெல்லியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் அளித்து வருகிறது, நெல்லி. அந்த வகையில், 17 ஏக்கர் பரப்பில் நெல்லிச் சாகுபடி செய்து வருகிறார், கரூரைச் சேர்ந்த பெரியசுவாமி. இவர் வடுகபட்டி அடுத்துள்ள புத்தாம்பூர் கிராமத்தில் இயற்கை முறையில் நெல்லிச் சாகுபடி செய்து வருகிறார்.
 
வெளியே வரலாமா, வேண்டாமா என யோசித்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் பெரியசுவாமியின் தோட்டத்துக்குள் நுழைந்தோம். வரிசை கட்டி நிற்கும் நெல்லி மரங்கள். அவற்றின் கிளைகளில் சரஞ்சரமாகத் தொங்கும் நெல்லிக்காய்கள். அவற்றுக்கு இடையே ஊடுபயிராகப் பூவும் பிஞ்சுமாகக் காட்சி தரும் மாஞ்செடிகள். ஆனந்தமான அந்தக் காலைப்பொழுதில், நெல்லிக்காய்களைப் பெட்டிகளில் நிரப்பும் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார், பெரியசுவாமி. அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.
 
“எனக்குச் சொந்த ஊர் கரூர். தாத்தா, அப்பா எல்லோரும் விவசாயம்தான் செஞ்சாங்க. நான் 17 வயசுலயே ஒரு நிதி நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்துட்டேன். அங்க சில வருஷம் வேலை பார்த்த அனுபவத்துல, சொந்தமா ஒரு நிதி நிறுவனம் ஆரம்பிச்சு நடத்திட்டுருக்கேன். அதோட ரியல் எஸ்டேட் தொழிலும் செஞ்சுட்டுருக்கேன். அதுக்காக, இந்த 28 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டேன். தொழில் சம்பந்தமா ‘நெல்லி விவசாயி’ ராஜேந்திரன், என்னை அடிக்கடிப் பார்க்க வருவார். அவர்கிட்ட பேசிட்டுருக்கும்போது, 28 ஏக்கர் தரிசு நிலம் வாங்கியிருக்கேன்னு சொன்னேன். அவர்தான், ‘தரிசு நெலத்தை விவசாய நெலமா மாத்தி இயற்கை முறையில நெல்லிச் சாகுபடி செய்யலாம். நான்கூட 150 ஏக்கர் தரிசு நெலத்தைத் திருத்தி நெல்லி விளையும் சோலையா மாத்தியிருக்கேன். நீங்களும் நெல்லி நடவு செஞ்சா நல்ல வருமானம் பார்க்கலாம்’னு சொன்னார். அதுக்கப்புறம் சில நெல்லி விவசாயிகளையும் சந்திச்சேன். எல்லோருமே நம்பிக்கை கொடுக்கவும் நெல்லிச் சாகுபடியில இறங்கலாம்னு முடிவு பண்ணி நிலத்துல ஒரு ‘போர்வெல்’ அமைச்சு, மின்சார இணைப்பு வாங்கினேன்.
 
நாற்பது வருஷம் உழவே செய்யாத நிலமா இருந்துச்சு. வருஷக்கணக்குல ஆடு, மாடுக மேய்ஞ்சு எரு போட்டதால மண் வளமா மாறி இருந்துச்சு. இயற்கை விவசாயத்துக்குத் தோதான இடமாவும் இருந்துச்சு. 17 ஏக்கர்ல மட்டும் நெல்லி விவசாயம் செய்யலாம்னு முடிவு செஞ்சு, மேடு பள்ளமா இருந்த நிலத்தைச் சமப்படுத்தி, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில நெல்லி நடவு செஞ்சேன். ஒவ்வொரு 9 நெல்லிச்செடிகளுக்கும் இடையில ஒரு மாங்கன்னை நடவு செஞ்சு சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தியிருக்கேன். நெல்லி மட்டும் இப்போ காய்ப்புல இருக்கு” என்று முன்கதை சொன்ன பெரியசுவாமி தொடர்ந்தார். “என்.ஏ-7, 10, கிருஷ்ணா, காஞ்சனா, ஏந்தல் கோல்டுனு நாலு நெல்லி ரகங்களைக் கலந்து நடவு செஞ்சுருக்கேன். இப்படிப் பல ரகங்கள் இருந்தாத்தான் வருஷம் முழுசும் காய்ப்பு இருக்கும். 28 ஏக்கர் நிலத்தைச் சுத்தி முள்கம்பி வேலி இருக்கு. 25 செம்மறி ஆடுகளை உள்ளே வளர்க்குறேன். நெல்லி வயல்ல களை எடுத்து உரம் போடும் வேலையைச் செம்மறி ஆடுங்க சரியா செஞ்சுடுது. வாரம் ஒருதடவை பாசனம். ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அமுதக்கரைசல்னு கொடுக்குறதுல, நெல்லி செழிப்பா வளருது. நெல்லி நடவு செஞ்சு மூணரை வருஷமாச்சு. ரெண்டு வருஷமா காய் கிடைச்சுட்டுருக்கு. இங்க இயற்கையில விளையுற நெல்லிக்காய்கள், நல்ல தரமா இருக்குறதால, கடைக்காரங்க தேடி வந்து வாங்குறாங்க. தினமும் காலையில ஆறு மணிக்கு இங்க வந்துடுவேன். எட்டரை மணி வரைக்கும் இருந்துட்டு… செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிட்டுக் கிளம்புவேன். அதுக்கப்புறம்தான் மத்த வேலைகளைப் பார்ப்பேன்” என்ற பெரியசுவாமி நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
 
“இந்த வருஷம் திடீர்னு பேஞ்ச மழையில பூவெல்லாம் உதிர்ந்துடுச்சு. ஆனாலும் மொத்தமா 20 டன் அளவுக்கு நெல்லிக்காய் கிடைச்சது. ஒரு கிலோ 30 ரூபாய்னு ஏவாரம் செஞ்சதுல 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்த வருஷம் 40 டன் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இன்னும் 10 வருஷம் கழிச்சு வருஷத்துக்கு 100 டன் நெல்லிக்காய் எடுத்துடுவேன். அடுத்ததா நெல்லிக்காய் மதிப்புக்கூட்டல் தொழிற் சாலையையும் அமைக்கலாம்னு இருக்கேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார், பெரியசுவாமி.
 
இலைக்கரைசல் :
 
பப்பாளி, ஆமணக்கு, ஊமத்தன், எருக்கன், வேம்பு ஆகிய செடிகளில் தலா 5 கிலோ இலைகளை எடுத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் போட்டு… இலை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு 5 கிலோ சாணம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு வாரம் ஊற வைத்தால் இலைக்கரைசல் தயார்.
 
இப்படித்தான் சாகுபடி செய்யணும்..
 
நெல்லிச்சாகுபடி செய்யும் விதம் குறித்துப் பெரியசுவாமி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…
 
நிலத்தை உழுது சமப்படுத்தி ஒன்றரை அடி உயரத்துக்கு வரப்பு அமைக்க வேண்டும். வரப்பு அமைப்பதால், மழைநீர் நிலத்தில் தங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தில் நன்கு கோடை உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். ஏக்கருக்கு 20 டன் அளவு வண்டல் மண்ணைக் கொட்டிப்பரப்பி, ஓர் உழவு செய்ய வேண்டும். 15 அடி இடைவெளியில் 4 அடி ஆழம், 4 அடி சதுரத்தில் குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் தலா 10 கிலோ தொழுவுரத்தைக் கொட்டி 4 மாதங்கள் குழிகளை ஆறவிட வேண்டும். பிறகு, குழிகளுக்குள் முளைத்துள்ள புல், பூண்டுகளைப் பிடுங்கிவிட்டு, குழி வெட்டும்போது எடுத்த மேல் மண்ணைக்கொட்டி குழியை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குழிக்குள்ளும் 5 கிலோ தொழுவுரத்தோடு 50 கிராம் உயிர் உரத்தைக் கலந்து இட வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, அதில் நெல்லி நாற்றுகளின் வேர் பகுதிகளை நனைத்து எடுத்துக் குழிக்குள் நடவு செய்து, ஒவ்வொரு குழிக்குள்ளும் கைப்பிடி அளவு வேப்பங்கொட்டை தூளைத் கொட்டிக் குழிகளை மூட வேண்டும். நடவு செய்து ஓர் ஆண்டு வரை, 15 நாள்களுக்கு ஒருமுறை சொட்டுநீர் வழியாக ஏக்கருக்கு 200 லிட்டர் இலைக்கரைசலைக் கொடுத்து வரவேண்டும்.
 
நெல்லிச் செடிகளைச் சுற்றி வட்டப்பாத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் மாதம் ஒருமுறை 10 கிலோ ஆட்டு எருவை வட்டப்பாத்தியில் இட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்துச் செய்தால்தான் அதிகக்கிளைகள் உருவாகும். நெல்லிச்செடிகளில் எறும்புகள் தென்பட்டால் மாவுப்பூச்சிகள் தாக்க உள்ளன என்று அர்த்தம். உடனடியாக இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் தெளிக்க வேண்டும்.
 
பஞ்சகவ்யா தயாரிப்பு!
 
இதற்கு ஒன்பது பொருள்கள் தேவைப்படும், நாட்டு மாடு, கலப்பின மாடு என எந்த வகையான மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
 
இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் :
 
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா 1 கிலோ எடுத்துச் சந்தனம்போல அரைத்து, அந்த விழுதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதோடு, 250 கிராம் காதி சோப்பைக் கலந்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும்.
 
தொடர்புக்கு :
பி.பெரியசுவாமி,
செல்போன்: 96003 47777

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories