நல்ல இலாபம் கிடைக்கும் ஆந்திரா எலுமிச்சை!

தச்சபட்டி மலையடிவாரத்தில் தரிசாக கிடந்த இடத்தை வாங்கி இயற்கை வழி விவசாயம் செய்து சாதித்து காட்டுகிறேன் என ராதாகிருஷ்ணன் கூறிய போது அந்த பகுதி விவசாயிகள் அவரை ஒரு மாதிரியாக தான் பார்த்தனர் என்றார் .

நான்கே ஆண்டுகளில் பத்து நாட்டு மாடுகளுக்கான கொட்டம், அதன் கழிவுகளை கொண்டு இயற்கை உரங்கள், இரண்டு ஏக்கரில் 400 எலுமிச்சை மரங்கள், இதில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பயிரிட்ட செடிகள் தற்போது செடிக்கு 100 முதல் 150 திரட்சியான காய்களுடன் இருப்பதை பார்த்து, அந்த பகுதி விவசாயிகள் ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.

 

ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகளில் ஒருவன் நான். விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும், தொழிலாளர்கள் அதிகம் சம்பளம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தேன்.

பாச்சலுார் அருகே இயற்கை வழியில் எலுமிச்சை பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் ஏக்கருக்கு 7 லட்சம் முதல் எட்டு லட்சம் ரூபாய் வரையில் லாபம் பார்க்கிறார். அதே போல நாமும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல இடங்களில் மலையடிவார இடம் கிடைக்குமா என தேடியபோது இந்த இடம் கிடைத்தது என்றார் .

நான் இடம் தேர்வு செய்தபோது மழைக்காலம் என்பதால் மிகச் செழுமையாக காட்சியளித்த இந்த இடம் போகப்போக மழை இல்லாமல் வறண்டது. போர்களில் குறைந்த அளவே தண்ணீர் கிடைத்தது என்றார் .

ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிட ஏற்பாடு செய்தேன். ஆந்திராவிற்கு சென்று ரங்கபுரி பாலாஜி ரக எலுமிச்சம் கன்றுகள் வாங்கி வந்து, 12க்கு 12 இடைவெளியில் ஒரு செடி, ஆறு வரிசைக்கு இடையில் வாகனங்கள் சென்று வரும் அளவிற்கான பாதை என 200 செடிகள், பாதையில் மரங்கள், செடிக்கு அருகில் இலையுதிர் மரங்கள் (தற்போது முருங்கை) என நடவு செய்தேன். அனைத்து செடிகளுக்கும் சொட்டு நீர், களையெடுக்காமல் செடிகளை சுற்றிலும் செடிசெத்தைகள் கொண்ட மூடாக்கு அமைத்துள்ளோம்.

மூடாக்கு தரும் நிழலில் தங்கும் நுண்ணுயிரிகள், தண்ணீர் கிடைத்தவுடன் அங்கேயே வாழ ஆரம்பிக்கும். அவற்றின் மூலம் இயற்கையாக நைட்ரஜன், பொட்டாசியம் போன்ற சத்துகள் மண்ணுக்கும், செடிக்கும் கிடைக்கும். 10 நாட்டு மாடுகள் கொண்ட கொட்டத்தில் வெளியேறும் கழிவுகளை சேகரித்து வெல்லம், பயத்தமாவு கலந்து தொட்டிகளில் புளிக்க வைத்து கிடைக்கும் ஏராளமான நுண்ணுயிரிகள் கொண்ட கழிவு நீரை பண்ணைக்குட்டையில் செலுத்தி, அங்கிருந்து அரை எச்.பி., மோட்டார் மூலம் செடிகளுக்கு பாய்ச்சுகிறோம்.

குருத்து விடும் பகுதி சில பூச்சிகளுக்கு சுவையான உணவாக அமையும். அதன் மீது இயற்கையாக தயாரித்துள்ள பூச்சிவிரட்டியை தெளித்து விட்டால் அதன் சுவை மாறிவிடும். பூச்சிகளும் வேறு உணவுகளை தேடி சென்று விடும். பாதையின் வழியாக மருந்து தெளித்தால் இந்த பக்கம் மூன்று செடிகளுக்கும், மறுபக்க பாதை மூலமாக மூன்று செடிகளுக்கும் தெளிக்க ஏதுவாக அமையும். இரண்டாவது ஆண்டிலேயே செடிகளில் 100 –150 வரை காய்கள் திரட்சியாக காய்க்க துவங்கியுள்ளன.

ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்னரை லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு வருமானம் கிடைக்கும் வழி ஏற்பட்டுள்ளது. மரங்களின் வளர்ச்சிக்கேற்ப இது 200 – 500 காய்கள் வரையில் காய்க்கும் பக்குவம் வரும். 20 ஆண்டுகளுக்கு லாபம் அதிகரித்தபடி வரும். பலர் அதிக ஆழத்திற்கு போர் போட்டு நெல், கரும்பு போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை பயிரிட்டு அவர்களும் லாபம் சம்பாதிக்காமல், மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரையும் வீணாக்கி வருகின்றனர்.

இயற்கை விவசாயி நம்மாழ்வார் கூறியது போல நம்பகுதி மண்ணில் விளையும் மரங்களை நட்டு விவசாயம் செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். சுற்றுப் பகுதி விவசாயிகளும் என்னிடம் ஆலோசனை கேட்டு இயற்கை விவசாயத்திற்கும், லாபம் தரும் விவசாய பணிகளுக்கும் மாறி வருகின்றனர். ஆர்வமுள்ள விவசாயிகள் 09842793970 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் ஆலோசனை வழங்குகிறேன் என்றார்.

–மதிவாணன், உசிலம்பட்டி.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories