35 ஏக்கரில் ஆண்டுக்கு 17 லட்சம் ! ஒப்பில் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்…

35 ஏக்கரில் ஆண்டுக்கு 17 லட்சம் ! ஒப்பில் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்…

ஒரே ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல், பலவிதமான பயிர்களைக் கலந்து சாகுபடி செய்பவர்களும்… விவசாயத்தோடு கால்நடைகளையும் வளர்த்து வளர்பவர்களும், பெரும்பாலும் நஷ்டத்தை சந்திப்பதில்லை. இதைத்தான் விவசாய வல்லுநர்கள் பலரும் நெடுங்காலமாக சொல்லி வருகிறார்கள். இதைச் சரியாகக் கடைபிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர் உண்டு என்பதற்கு உதாரணமாக நிற்கிறார்… திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இனியவன்!

படித்தது பார்மசி… பார்ப்பது பண்ணையம் !

தென்னை, வாழை, கரும்பு… என பசுமையாக, கலந்து கட்டி இருக்கும் தன்னுடைய தோட்டத்தில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இனியவன், நம்மைக் கண்டதும், சற்றே இளைப்பாற வந்தமர்ந்தார்.

”வேலையாட்கள் கிடைக்காம, முப்பது வருஷத்துக்கு முன்னயே, 21 ஏக்கர்ல தென்னையை நட்டு விட்டுட்டார் எங்கப்பா. டி-பார்ம் முடிச்சுட்டு, அப்பா வெச்சுருந்த ரைஸ் மில் வேலையில நான் தீவிரமாயிட்டேன். கூடவே விவசாயமும். ஆரம்பத்துல… ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு தான்  பயன்படுத்தினேன். செலவுதான் அதிகமா இருந்ததே தவிர, பெருசா வருமானம் இல்லை. இதுக்குத் தீர்வைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போதான், நாலு வருஷத்துக்கு முன்னாடி ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுக்கப்பறம்தான் ஒரு நம்பிக்கை கிடைச்சுது. இயற்கை வழி விவசாயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்னுரை கொடுத்த இனியவன், தொடர்ந்தார்.

வண்டிக்கு காங்கேயம்… உரத்துக்கு உம்பளாச்சேரி !

”ஆரம்பத்துல இருந்தே கறவை மாடுகள வெச்சுருந்தோம். பசுமை விகடன் மூலமா, ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, நம்ம நாட்டு இனமான காங்கேயம் மாடுகளையும், உம்பளாச்சேரி கிடேரிக் கன்றுகளையும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். காங்கேயம் மாடுகளை வண்டியில பூட்டி… தேங்காய் ஏத்துறது, நெல்லை ஏத்துறது மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுத்திட்டுருக்கேன். மாடுகள் மூலமா கிடைக்கிற கழிவுகளை, வயலுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இதெல்லாம் போக, மாமா எழில்மாறனோட சேர்ந்து, சண்டைக்கோழி வளர்ப்பும் தனியா நடக்குது. ஆடு வளர்ப்புலயும் இறங்கியிருக்கேன்.

ஏற்கெனவே இருக்கற 21 ஏக்கர் தென்னையில, 10 ஏக்கர்ல மட்டும் ஊடுபயிரா வாழை இருக்கு. இதைத் தவிர, தனியா 3 ஏக்கர்ல வாழை, 2 ஏக்கர்ல கரும்பு, 5 ஏக்கர்ல மரவள்ளி, 2 ஏக்கர்ல தீவனப்புல் இருக்கு. ரெண்டு ஏக்கர்ல மாட்டுக் கொட்டகை, ஆட்டுப் பண்ணை, ரைஸ் மில் இருக்கு. மொத்தம் 35 ஏக்கர். இதுல 10 ஏக்கர் குத்தகை நிலம். குத்தகை நிலம்கிறதால சிலகாரணத்துக்காக கரும்புக்கும், மரவள்ளிக்கும் ரசாயனம் போட்டுத்தான் விவசாயம் செய்றேன். மத்தபடி என்னோட தோட்டத்துல முழு இயற்கை முறைதான்.

மரத்துக்கு 80 முதல் 100 காய்கள் !

இது கரிசல் மண் பூமி. 30 அடியிலேயே தண்ணியும் இருக்கு. அதனால, எல்லா சாகுபடியும் சாத்தியமாகுது. 21 ஏக்கர்ல மொத்தம் 2 ஆயிரத்து 200 தென்னை மரம் இருக்குது. எல்லாமே, 25 வயசுல இருந்து 35 வயசுள்ள மரங்கள். அதுகளைப் பராமரிக்கறது மட்டும்தான் வேலை. ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்துல மழைக்கு முன்ன… ஒவ்வொரு மரத்தில இருந்தும் இரண்டு அடி இடைவெளியில ஒண்ணரை அடி ஆரத்துல, கால் வட்டம் எடுத்து, 25 கிலோ எரு வெச்சுத் தண்ணி கட்டுவோம். வேற பராமரிப்பே கிடையாது.

ஒவ்வொரு மரத்துலயும் வருஷத்துக்கு எண்பதுல இருந்து நூறு காய்கள் வரை கிடைக்குது. ஒரு மரத்தை 125 ரூபாய்னு குத்தைகைக்கு விட்டிருக்கிறேன். அது மூலமா, 2 ஆயிரத்து 200 மரத்துக்கும் சேத்து வருஷத்துக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அதில் பராமரிப்புச் செலவு 75 ஆயிரம் ரூபாய் போக, 2 லட்சம் ரூபாய் லாபம்’’ என்ற இனியவன் வாழை சாகுபடி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வாழை இலையிலும் வருமானம் !

”தென்னைக்கு இடையில கற்பூரவல்லி வாழைய நடவு செஞ்சுருக்கேன். 13 ஏக்கர்ல மொத்தம் வருஷத்துக்கு 8 ஆயிரம் தார் கிடைக்குது. ஒரு தார், 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா, 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே… 8 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் 3 லட்சம் செலவு போக, 5 லட்ச ரூபாய் லாபம்.  வருஷம் முழுக்க இலையையும் விக்கலாம். அது மூலமா, வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது.

பாலில் மாதம் 26 ஆயிரம் !

இப்போ, 24 கறவை மாடுக இருக்கு. இதுல எப்பவும் 10 மாடுகள் கறவையில இருந்துக்கிட்டே இருக்கும். தினமும் சராசரியா 40 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 22 ரூபாய்னு பால் மூலமா தினமும் 880 ரூபாய் கிடைக்குது. மாசம் 26 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்குது. செலவு போக, 16 ஆயிரம் ரூபாய் லாபம்” என்றவரைத் தொடர்ந்து, ஆட்டுப் பண்ணை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், மாமா எழில்மாறன்.

ஆண்டுக்கு 2,40,000 ரூபாய் !

”போன வருஷம்தான் ஜமுனாபாரி, போயர் கலப்பு, நாட்டு ரக ஆடுகள்னு மொத்தம் 30 ஆடுகளோட பண்ணை ஆரம்பிச்சோம். கொட்டகை, தீவனப் புல் உற்பத்தி, ஆடுகள்னு இதுவரைக்கும் 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கோம். ஒரு வருஷத்துக்குள்ளாற 65 ஆடுகளாப் பெருகியிருக்கு. இதுவரைக்கும் ஆடுகளை விற்பனை செய்யல. இனிதான் ஆரம்பிக்கணும்.

30 தாய் ஆடுகள் மூலமா, வருஷத்துக்கு 90 குட்டிகளுக்கு குறையாம கிடைக்கும். குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து வித்தா, ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். சராசரியா வருஷத்துக்கு 80 குட்டிகளை விக்கிறதா வெச்சுக்கிட்டாலும்… வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், மருந்து, பராமரிப்புனு 80 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம்” என்றார், எழில்மாறன்.

நிறைவாகப் பேசிய இனியவன், ”சண்டைக்கோழியில் 40 பெட்டையும், 3 சேவலும் இருக்கு. இதுக மூலமா, வருஷத்துக்கு 1,600 முட்டைகள் கிடைக்கும். இந்த முட்டைக்கு மவுசு ஜாஸ்திங்கறதால… ஒரு முட்டை 20 ரூபாய்னு விலைபோகும். இப்படி 1,000 முட்டைகளை வித்துடுவேன். மீதியை இன்குபேட்டர்ல வெச்சு பொரிக்க வைக்கறதுல, எப்படியும் 500 குஞ்சுகள் கிடைச்சுடும். இதை ஒரு ஜோடி 1,000 ரூபாய்னு விக்கிறோம். முட்டை, குஞ்சு விற்பனை மூலமா மொத்தம் வருஷத்துக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. பராமரிப்பு, தீவனச் செலவு போக… எப்படியும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

2 ஏக்கர்ல ஒரு வருஷத்துக்கு கிடைக்கிற 100 டன் கரும்பு மூலமா 2 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல 80 ஆயிரம் ரூபாய் செலவு போக… 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபம். 5 ஏக்கர்ல வருஷத்துக்கு 50 டன் அளவுக்கு மரவள்ளி கிடைக்குது. டன் 3 ஆயிரம் ரூபாய்னு விக்கிறதுல, மரவள்ளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவு போக 1 லட்ச ரூபாய் லாபம். எல்லாம் சேத்து 35 ஏக்கர்ல, பத்து ஏக்கருக்கான குத்தகைத் தொகை, செலவுகள் போக, வருஷத்துக்கு 17 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது” என்றார், சந்தோஷமாக.

உற்சாக ஊடுபயிர்… வாழை!
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய இனியவன் பயன்படுத்தும் முறைகள் இவைதான்-

”தென்னைக்கு ஊடுபயிராக சாகுபடி செய்ய கற்பூரவல்லி ரக வாழைதான் ஏற்றது. நிலத்தை நன்றாக கொக்கிக் கலப்பை மூலம் குறுக்கு-நெடுக்காக 4 சால் உழவு செய்து, ஏக்கருக்கு நான்கு டிராக்டர் எருவைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். பிறகு, இரண்டு சால் ரோட்டாவேட்டர் உழவு செய்து, 9 அடிக்கு 9 அடி இடைவெளி கொடுத்து… ஒரு அடி நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அவற்றை நான்கு நாட்கள் ஆறப் போட்டு… தரமான இரண்டு மாத வயதுள்ள வாழைக் கன்றுகளை அரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 600 முதல் 650 வாழைக் கன்றுகளை நடவு செய்யலாம். விருப்பம் இருந்தால் வாழைக்கும், தென்னைக்கும் இடையில் தீவனச்சோளத்தை நடவு செய்து கொள்ளலாம். வாழை நடவு செய்த அன்று உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மாதம் ஒரு முறை வீதம், 6 மாதங்கள் வரை களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் நிழல்கட்டிக் கொள்ளும். மூன்றாவது மாதம் களை எடுத்தவுடன் மரத்துக்கு ஒரு கூடை (25 கிலோ) வீதம் எரு வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாழை மரத்தில் இருந்து ஒரு அடி இடைவெளி கொடுத்து, ஒரு அடி நீளம், அகலம், ஆழம் இருக்குமாறு குழி எடுத்து… அதில், மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை ஊற்ற வேண்டும்.

தார் தள்ளிய பிறகு முட்டு மரம் கட்ட வேண்டும். முதல் ஆண்டு 15 மாதங்கள் கழித்து, வாழை அறுவடை செய்யலாம். இரண்டாம் ஆண்டில் 12 முதல் 13 மாதங்களில் அறுவடை செய்யலாம். மூன்றாம் ஆண்டிலிருந்து 10 மாதங்களில் அறுவடை செய்யலாம்.’

தொடர்புக்கு :
இனியவன்,
செல்போன்: 94872-63606.
எழில்மாறன்,
செல்போன்: 89034-42489.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories