நிலையான வேளாண்மையின் அவசியம்

“இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து, மண் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப்படுத்தும் முறை நிலையான வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை மூலம் இயற்கை வளம் மேம்படுத்தப்படுகிறது ” என்கிறார் திருநாவலூர் வேளாண்மை உதவி இயக்குநர் கே.ரவீந்திரன்.

நிலையான வேளாண்மைக்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பங்கள் உதவி புரிகின்றன

தொழு உரம் மற்றும் பண்ணைக் கழிவு இடுதல்: சாணம், எரு போன்ற விலங்குகளின் கழிவுகள் தொழு உரம் எனப்படுகிறது. இவற்றை குழிகளில் இட்டு மக்கச் செய்து பயிருக்கு இடுவதால், மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப்படுகிறது.கால்நடை இல்லாதவர்கள் பண்ணைக் கழிவு தொழு உரத்தை பயன்படுத்தலாம். இலைகள், அழுகிய காய்கறிகள், சோளத்தட்டு, ராகித்தட்டு, கடலை ஓடு போன்றவைகளை குழிகளில் இட்டு மக்கச் செய்து, நிலத்தில் இடுவதன் மூலம் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை, மண்வளம், நுண்ணுயிர் செயல்பாடு அதிகரித்து மகசூல் கூடுகிறது என்றார் .

ஊட்டமேற்றிய தொழு உரம் இடுதல்: ஒரு ஏக்கருக்கு தேவையான 350 கிலோ தொழு உரம், தேவையான சூப்பர் பாஸ்பேட், தேவையான பொட்டாஷ் போன்றவற்றை 5 சம பாகங்களாக பிரித்து, 5 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலமுள்ள மேடான இடத்தில் ஒவ்வொரு பாகமாக சமமாக பரப்பி, முடிவில் களிமண் அல்லது செம்மண் கொண்டு காற்று புகாமல் மூடி பூச வேண்டும். ஒருமாதம் கழித்து கடைசி உழவுக்கு முன்பு சீராக இட வேண்டும். இப்படி இடும்போது பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சீராக கிடைக்கின்றன என்றார் .

பயிர் சுழற்சி முறைகளை கடைப்பிடித்தல்: ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடாமல் மாற்றுப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்துக்கு பயிர் சுழற்சி கொடுப்பதோடு, மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பூச்சி, நோய் தாக்குதல் குறைகிறது. பயிர் சுழற்சி செய்யும் போது, ஆண்டுக்கு ஒரு முறை பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, காராமணி, கொள்ளு போன்றவற்றை தனிப் பயிராகவோ அல்லது கலப்புப் பயிராகவோ பயிரிடுதல் நல்லது.

மண் பரிசோதனைப்படி உரம் இடுதல்: மண்ணில் உள்ள சத்துக்களின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும், பயிருக்கு அளிக்க வேண்டிய சத்துக்களை அறிந்து கொள்வதற்கும், மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகிறது. மண் பரிசோதனை முடிவின்படி செயல்படும்போது உரச் செலவு குறைவதுடன், மகசூலை அதிகப்படுத்த முடியும் என்றார் .

ஒருங்கிணைந்த பண்ணைய முறை: வேளாண்மையுடன் கால்நடை வளர்ப்பு, கோழிப் பண்ணை, மீன் பண்ணை, காளான் வளர்ப்பு, பட்டுப்புழு, தேனீ வளர்ப்பு, வேளாண் காடுகள், வீட்டு காய்கறித் தோட்டம், பழ மரங்கள், தீவன மரங்கள், தீவனப் பயிர் போன்றவற்றை ஒருங்கிணைத்து செய்யப்படும் பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணைய முறை எனப்படுகிறது. இந்த முறை மூலம் கூடுதல் வருவாய் பெறுவதுடன், பண்ணை கழிவுகளை முறைப்படி உபயோகிக்க முடிகிறது.

பயிருக்கு மூடாக்கு இடுதல்: மூடாக்கு என்பது மண்ணை மூடி பாதுகாப்பது. மூடாக்கு இடுவதன் மூலம் நிலத்தின் ஈரம் காக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண் புழுக்கள் காக்கப்படுகின்றன.

இதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைப்பதுடன், சுற்றுச் சூழலும், இயற்கை வளமும் காக்கப்படுகின்றன என்றார் ரவீந்திரன்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories