இயற்கை வேளாண்மையில் இரண்டு மடங்கு விளைச்சல் எடுக்கும் விவசாயி…

நிலமெல்லாம் காய்ந்து வெடித்து, மக்கள் நீருக்காக அல்லாடுவதைப் பார்க்கிறோமே. ரயிலில் வரும் நீரை நம்பித்தானே மக்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் லாத்தூரின் நிலைமை.

அந்த மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற அவசர அவசரமாக ஆழ்துளைக் கிணறுகளுக்குத் துளைகளைப் போட்டு நீரை உறிஞ்ச முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாகக் கடன் வலையிலும் வீழ்ந்துவிடுகிறார்கள்.

“என் நிலத்தில் போர்வெல் கிடையாது. அப்புறம் மற்றவர்களைப் போல நான் கரும்பைப் பயிரிடவும் இல்லை” என்கிறார் சந்தீபன் பட்கிரே. அப்புறம் அவருடைய நிலத்திலிருந்து என்னதான் கிடைக்கிறது? அதுதான் விஷயமே.

சந்தீபன் பட்கிரே ஒரு இயற்கை உழவர். பல்வேறு இயற்கை உழவர்களைப் போலப் பலபயிர் சாகுபடியில் நம்பிக்கை கொண்டவர். பலபயிர் சாகுபடியில் விளைச்சலுக்கு நிச்சயமான உத்தரவாதம் உண்டு.

1988-ல் சந்தீபனுக்கு 35 வயதானபோது, அவருடைய தந்தையின் 5 ஹெக்டேர் நிலத்தில் விவசாய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது லாத்தூரில் இயற்கை வேளாண்மை தொடர்பாக எந்தத் தகவலும் பரவலாகவில்லை.

எல்லா விவசாயிகளையும் போலவே வேதி விவசாயம், உரம், பூச்சிக் கொல்லியையே சந்தீபனும் நம்ப ஆரம்பித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வேதி விவசாயத்தில் ஈடுபட்டாலும், காலப்போக்கில் விளைச்சல் சரிவதையும், பூச்சிக்கொல்லிக்கான செலவு அதிகரிப்பதையும் சந்தீபன் உணர்ந்தார்.

புனேயில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டங்களில் பங்கேற்றதுடன், இயற்கை வேளாண்மை தொடர்பாகவும் கூடுதலாக அறிந்த பிறகு அந்த முறையைக் கடைப்பிடிக்க அவர் முடிவு செய்தார்.

கிடைத்த குறைந்த தகவல்களை வைத்துக்கொண்டு 1993-ல் இருந்து 2000 வரை மானாவாரி விவசாயத்தையும் இயற்கை வேளாண்மையையும் பரிசோதித்துப் பார்த்தார். அவருக்குக் கிடைத்தது என்னவோ நஷ்டம்தான். இருந்தாலும் அதிலிருந்து அவர் விலகி நகர்ந்துவிட வில்லை.

2000-க்குப் பிறகு விஷயங்கள் மாற ஆரம்பித்தன. ஏழு ஆண்டு அவர் பாடுபட்டதற்குப் பலன் இருந்தது, நிலத்தின் உயிர் வளம் மேம்பட்டிருந்தது. அதற்குப் பிறகு சந்தீபன் ஓரடிகூட பின்னோக்கி நகரவில்லை.

என்னுடைய நிலத்தின் ஆரோக்கியம் குறைந்துவிடாமல் பாதுகாக்க ஊடுபயிர், பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றுகிறேன். மூன்று ஏக்கரில் துவரம் பருப்பு, இன்னொரு மூன்று ஏக்கரில் இருங்கு சோளம், மற்றொரு மூன்று ஏக்கரில் பச்சைப் பயறு ஆகியவற்றையும், இரண்டு முதல் மூன்று ஏக்கர்வரை சோயாபீன்ஸும் பயிரிட்டிருக்கிறேன்.

வேதி விவசாயத்தில் விளைச்சலில் நிச்சயமான சரிவு இருக்கும். ஆனால், என்னுடைய விளைச்சல் எப்போதும் சரிவதில்லை, அதிகமாகவே இருக்கிறது. நிலத்தின் வளத்தைக் கூட்டுவதற்குச் சாண உரத்தையும், பயிர்களுக்கான பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கக் கோமியத்தையும் பயன்படுத்துகிறேன்” என்கிறார் பட்கிரே.

அத்துடன் ஓரளவு வறண்ட பகுதியான மாரத்வாடா பகுதிக்கு உகந்த புளிய மரம், கருவேல மரங்களைத் தன்னுடைய நிலத்தில் அவர் வளர்த்து வருகிறார்.

இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக, இந்த மாவட்டத்தின் பெரும்பாலான உழவர்கள் கடந்த இரண்டு பருவங்களாகப் பயிரிடவே இல்லை, பயிரிட்ட சிலரும் பயிரை இழந்துவிட்டனர்.

சந்தீபனுக்குப் பக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிக்குச் சோள அறுவடை பொய்த்துவிட்டது. அதேநேரம் வறட்சியையும் தாண்டி, ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 100 கிலோ சோளம் விளைச்சலை நான் எடுத்திருக்கிறேன்.

வேதி விவசாயத்தில் கிடைக்கும் வெள்ளை கொண்டைக்கடலை அறுவடையைப் போல, இயற்கை வேளாண்மையில் நான் எடுக்கும் விளைச்சல் இரண்டு மடங்கு” என்று பெருமையோடு சொல்கிறார் சந்தீபன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories