ஆடு மாடு கோழி மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

 
1. நோக்கம்
 
2. கால்நடைத் தீவனம் (Cattle Feed)
(i) அடர் தீவனம்
(ii) பசுந்தீவனம்
(iii) உலர் தீவனம்
 
3. கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் (Methods to Improve Cattle Production)
 
4. மாடு மற்றும் எருமையினங்கள்
(i) மாட்டினங்கள்
(ii) எருமையினங்கள்
(iii) பால் பற்றிய அறிவியில் (Milk Science)
(iv) பாஸ்ச்சுரைசேசன் (Pasteurisation)
 
5. ஆடுகள்
(i) வளர்ப்பு முறைகள்
(ii) ஆடு இனங்கள்
 
6. கோழிகள்
(i) கோழி இனங்கள்
(ii) முட்டைப் பற்றிய அறிவியல் (Egg Science)
 
7. மீன்கள்
(i) மீன் இனங்கள் (Fish Breeds)
(ii) மீன்களின் உணவு (Fish Food)
(iii) கடல்வாழ் உயிரிகளின் பயன்கள் (Benefits of Sea Living Organisms)
 
நோக்கம் :
 
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாகும். உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்த தொழில்களாகும். கால்நடை வளர்ப்பு விவசாயக் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வீட்டு வருமானத்தையும் அதிகரிக்கிறது. பண்ணை மற்றும் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவதால் பால் உற்பத்தி செலவு குறையும். கால்நடைகள், மனிதனுக்கு உணவு, எரிபொருட்கள், உரம், தோல் மற்றும் இழுவை சக்தி போன்றவற்றை வழங்குகின்றன.
 
தமிழகம் கால்நடை வளர்ப்பு மற்றும் உற்பத்தியில் மற்ற மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது. இந்திய கால்நடைகளின் எண்ணிக்கையில் ஏழு சதமும், கோழிகளின் எண்ணிக்கையில் மூன்று சதமும் கொண்டுள்ள தமிழகம், பால் உற்பத்தியில் ஐந்தாம் இடத்தையும், முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. கால்நடை வளர்ப்பு குறித்த அறிவியல் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உழவர் பயிற்சி நிலையங்கள் மற்றும் அறிவியல் நிலையங்கள் தமிழகத்தில் 27 இடங்களில் உள்ளன.
 
கால்நடைத் தீவனம் (Cattle Feed) :
 
அடர் தீவனம் :
 
கறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கு தேவையான எரிசக்தி, புரதம், தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய தீவனம் அடர் தீவனம் எனப்படும். இதில் தானியம், பிண்ணாக்கு, பயறு வகை, குருணை, தவிடு, தாது உப்பு, சாப்பாட்டு உப்பு போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றின் அன்றாட உடல் பராமரிப்பிற்கு தேவையான 1.5 கிலோ அடர் தீவனத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் பால் கறப்பதற்கு முன் கொடுக்க வேண்டும். உற்பத்தி மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பு இல்லாத திடப்பொருள் (Solids not fat SNF) என்பதற்கு ஏற்ப பால் கறவைக்கு, கறவை ஒன்றிற்கு 400 கிராம் முதல் 500 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.
 
பசுந்தீவனம் :
 
மாடு மற்றும் எருமைகளுக்கு வைட்டமின் A சத்தைக் கொடுப்பவை பசுந்தீவனமாகும். இச்சத்து சினை பிடிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே நாள் ஒன்றுக்கு கால்நடையின் உடல் எடையில் எட்டு முதல் பத்து சதம் அளவிற்கு பசுந்தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம், கொழுக்கட்டைப் புல், கம்பு நேப்பியர் புல், எருமைப்புல் முதலிய பயறுவகை அல்லாத புல் வகைகளும், அகத்தி, சூபாபுல், குதிரைமசால், வேலிமசால் போன்ற பயறுவகை தீவனப்பயிர்களும் பசுந்தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
உலர் தீவனம் :
 
உலர் தீவனம் கொடுப்பதால் மாடு மற்றும் எருமை இனங்கள் உணவு உட்கொண்ட திருப்தியை அடையும். நாளொன்றுக்கு அதன் உடல் எடையில் ஒரு சதம் உலர் தீவனமாகிய வைக்கோல் மற்றும் உலர்ந்த சோளத்தட்டு போன்றவற்றை அளிக்கலாம். 15.4.2 ஆடு இனங்கள் : ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகள் அதன் உடல் எடையில் சுமார் 5-8 சத அளவு உலர் தீவனத்தை உட்கொள்ளும். பசுந்தீவனப்பயிர்களில் வீரிய ஒட்டு தீவனப்புல் வகைகள், பயறு வகைத் தீவனப்பயிர்கள் மற்றும் மர வகைத்தீவனப்பயிர்கள் அடங்கும். உலர் தீவனமாக நிலக்கடலை உலர்ந்த செடிகள், பயறு வகைகளின் மேல் தோல் ஆகியவை அளிக்கப்படுகிறது. கலப்புத்தீவனம் சரிவிகித உணவாக தயார் செய்யப்பட்டு தீவன கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் (Methods to Improve Cattle Production) :
 
தரமான கலப்பு இனங்களை தேர்ந்தெடுத்துப் பராமரிக்க வேண்டும். சரியான இருப்பிட வசதி, முறையான சத்துள்ள தீவனமளித்தல் ஆகியவற்றின் மூலம் கால்நடைப் பண்ணைகளை சிறப்பாக நிர்வாகம் செய்ய வேண்டும். கால்நடைகளின் செயல்பாடுகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தவிர்க்க வேண்டும். உற்பத்திக்கேற்ற சரியான விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
கால்நடைகளின் முக்கிய இனங்கள் (Important Breeds of Cattle) :
 
மாடு மற்றும் எருமையினங்கள் :
 
கறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கான தீவனம் ஊட்டச்சத்து மிகுந்த அடர்தீவனம், நார்ச்சத்து மிகுந்த பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் என பாகுபடுத்தப்படுகிறது. பசு மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தீவனங்களையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும்.
 
மாடுகளுக்கான இருப்பிடம் கொட்டகை என்று அழைக்கப்படுகிறது. மாடுகளின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கொட்டகை அமைக்க வேண்டும். இதனால் மாடுகளின் முழு உற்பத்தித் திறனைப் பெறமுடியும். மாட்டுக்கொட்டகையில் மாடுகள் இரண்டு முறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
 
1) ஒரு வரிசை முறை
 
2) இரு வரிசைமுறை.
 
பதினைந்து மாடுகள் வரை உள்ள பண்ணைகளுக்கு ஒரு வரிசை முறை ஏற்றதாகும். இரண்டு வரிசை முறையில் பதினைந்துக்கும் அதிகமான மாடுகளின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. இம்முறையில் வாலுக்கு வால் முறை மற்றும் முகத்திற்கு முகம் முறை என இரண்டு விதமான கொட்டகை அமைப்பு உள்ளது.
 
மாட்டினங்கள் :
 
மனிதனின் தேவைக்கான மாட்டு இனங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
 
இந்திய இனங்கள் :
 
* கறவை இனம் : சிவப்பு சிந்தி (Red Sindhi), சாஹிவால் (Sahiwal), கிர் (Gir), தியோனி (Deoni)
 
* வேலை : காங்கேயம் (Kangeyam), உம்பளாச்சேரி (Umbalacheri)
 
* கறவை மற்றும் வேலை : அரியானா (Haryana), ஓங்கோல் (Ongole), தார்பார்க்கர் (Tharparkar)
 
* கறவை இனம்
 
* சிவப்பு சிந்தி
 
சிவப்பு சிந்தி மாட்டினம் பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாநிலத்தில் தோன்றியதாகும். இது நமது நாட்டின் பெருமை மிக்க கறவை இனமாகும். சிந்தி இனமாடுகளின் காளைகள் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் நாட்டு பசுக்களின் தரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த இனம் 300 நாட்களில் சுமார் 2000 கிலோ வரை பால் கொடுக்கும் தன்மையுடையது. மிக அதிக பட்சமாக 5000 கிலோ வரை பால் கறக்கும் மாடுகளும் உள்ளன. வேலைக்குப் பயன்படும் மாடுகள்
 
காங்கேயம் :
 
இதன் பிறப்பிடம் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் ஆகும். தமிழ்நாட்டிலேயே வேலைக்கு உகந்த மிகச்சிறப்பான பெருமைமிக்க மாட்டினம் காங்கேய மாட்டினம். உழவு செய்தல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல் போன்ற வலுவான வேலைகளுக்கு பயன்படுகிறது.
 
உம்பளாச்சேரி :
 
இதன் பிறப்பிடம் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலைஞாயிறு மற்றும் உம்பளாச்சேரி ஆகிய இடங்களாகும். சதுப்புநிலப் பிரதேசங்களில் இந்த இனம் உழவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
 
வேலை மற்றும் பாலுக்கு உதவும் மாட்டினம் :
 
தார்பார்க்கர் :
 
தார்பார்க்கர் மாடுகளை வெள்ளை சிந்தி என்று குறிப்பிடுவார்கள். தார்பார்க்கர் இன எருதுகள் உழவுக்கும், வண்டி இழுவைக்கும் சிறந்தவை.
 
அயல்நாட்டு இனங்கள் :
 
* ஜெர்சி (Jersey),
* ஹோல்ஸ்டைன் பிரீசியன் (Holstein Friesian)
* இறைச்சி – ஹெர்போர்ட் (Herford)
 
ஜெர்சி :
 
ஜெர்சி இன மாடுகள் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஜெர்சி தீவில் தோன்றியவை. தற்போது தமிழ்நாட்டில் கலப்பின பெருக்கத்திற்கும் மற்றும் தரம் உயர்த்துவதற்கும் ஜெர்ஸி காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
ஹோல்ஸ்டேன் பிரீசியன் :
 
ஹாலந்து நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. கலப்பினப் பெருக்கத்திற்காக தமிழ்நாட்டில் இந்த இனக் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
எருமையினங்கள் :
 
நமது நாட்டின் பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது எருமையினம்தான். எருமைப் பாலில் 7 சதம் வரை கொழுப்பு உள்ளது. ஆகையால் பால் பொருட்கள் தயாரிப்பதற்கு எருமைப்பால் பயன்படுகிறது. உலகளவில் சில நாடுகளில் மட்டுமே எருமைகள் பராமரிக்கப்படுகின்றன. நமது நாட்டில் எருமைகள் அதிகம் இருப்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் ஆகும்.
 
எருமையினத்தில் முர்ரா (Murrah) சுர்த்தி (Surti) போன்றவை மிக முக்கியமானவைகளாகும்.
 
முர்ரா :
 
டெல்லிக்கு அருகில் உள்ள ரோதக், அரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார், தற்போது டெல்லி, தெற்கு பஞ்சாப், கர்ணால் ஆகிய இடங்களில் முர்ரா வகை எருமைகள் அதிகமாக பராமரிக்கப்படுகின்றன. 300 நாட்களில் 1700 கிலோ பால் உற்பத்தி திறன் கொண்டவை. தனிப்பட்ட எருமைகள் தினசரி 22 முதல் 27.5 கிலோ பால் அளித்து உள்ளன. பாலில் கொழுப்பின் அளவு சுமார் 7 சதம். நமது நாட்டு கிராமத்து எருமைகளை தரம் உயர்த்த முர்ரா இன எருமை கிடாக்கள் பயன்படுத்தப்படுவது இதன் சிறப்பாகும்.
 
சுர்த்தி :
 
இதன் பிறப்பிடம் குஜராத் மாநிலத்திலுள்ள சபர்மதி மற்றும் மாஹி ந்திக்கும் இடையேயுள்ள சமவெளிப்பிரதேசமாகும். தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த இன எருமைகள் காணப்படுகின்றன. இதன் பால் உற்பத்தி சுமார் 1200 கிலோ மற்றும் பாலில் உள்ள கொழுப்பின் அளவு 9 சதவீதம் ஆகும்.
 
பால் பற்றிய அறிவியில் (Milk Science) :
 
பால் என்பது மாடுகளின் மடியிலிருந்து சுரக்கும் திரவமாகும். பசு அல்லது எருமையிலிருந்து கன்று ஈன்ற 72 மணி நேரத்திற்கு பிறகு (அல்லது) சீம்பால் மாறிய பிறகு கிடைக்கும் திரவப்பொருள் பால் எனப்படும். பால் ஒரு ஒளி ஊடுருவாத திரவம், கொழுப்பு இரண்டறக் கலந்திருக்கும். புரதம் மற்றும் தாதுஉப்புக்கள் கூழ்ம திரட்டாகவும், லாக்டோஸ் எனப்படும் சர்க்கரையோடு சில தாது உப்புக்கள், கரையக்கூடிய புரதங்கள் ஆகியன சேர்ந்து ஒரு தூய கரைசலாக இருக்கும்.
 
பாலின் சராசரி சத்துக்கள் (சதம்) (Average Constituents of Milk in Percentage) :
 
* பசு
* எருமை
* தண்ணீர் கொழுப்பு புரதம்
* கொழுப்பில்லாத திடப்பொருள் (SNF)
* லேக்டோஸ் சாம்பல்
 
பாஸ்ச்சுரைசேசன் (Pasteurisation) :
 
பாலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பாலின் சேமிப்பு காலத்தை கூட்டும் செயலுக்கு பாஸ்ச்சுரைசேசன் என்று பெயர். பால் மற்றும் பால் பொருட்களை வடிவமைக்கப்பட்ட கொல்கலனில் இட்டு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதை குறிப்பிட்ட நேரம் வரை நிலையாக வைத்திருந்து, உடனடியாக குளிர்வித்தல் மூலம் பாஸ்ச்சுரைசேசன் மேற்கொள்ளப்படுகிறது. பேஸ்ச்சுரைசேசன் இரண்டு வகைப்படும்.
 
* குறைந்த வெப்பம், கூடுதல் நேரம் – Low Temperature Long Time (LT LT)
* அதிக வெப்பம் குறைந்த நேரம் – High Temperature Short Time (HT ST)
 
பாஸ்ச்சுரைசேசன் செய்யப்படுவதன் முக்கியத்துவம் (Importance of Pasteurisation) :
 
பாலை மடியிலிருந்து கறக்கும்போதே சில நுண்கிருமிகள் இருக்கும். பாலைக் கையாளும்போது இந்த நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சாதாரணமாக பால் நுண்கிருமிகள் 20°C முதல் 40°C வெப்ப நிலையில் அதிக எண்ணிக்கையில் பெருகுகின்றன. இதனால் பாலின் அமிலத்தன்மை அதிகரித்து பாலின் விற்பனைத்தரம் குறைந்து விடுகிறது. மேலும் காசநோய்க் (Tuberculosis-TB) கிருமிகள் பாலின் மூலம் பரவுவதை பாஸ்ச்சுரைசேசன் செய்வதன் மூலம் தடுக்கலாம்.
 
 
ஆடுகள் :
 
ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகள் அதன் உடல் எடையில் சுமார் 5-8 சத அளவு உலர் தீவனத்தை உட்கொள்ளும்.
 
பசுந்தீவனப்பயிர்களில் வீரிய ஒட்டு தீவனப்புல் வகைகள், பயறு வகைத் தீவனப்பயிர்கள் மற்றும் மர வகைத்தீவனப்பயிர்கள் அடங்கும். உலர் தீவனமாக நிலக்கடலை உலர்ந்த செடிகள், பயறு வகைகளின் மேல் தோல் ஆகியவை அளிக்கப்படுகிறது. கலப்புத்தீவனம் சரிவிகித உணவாக தயார் செய்யப்பட்டு தீவன கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
 
வளர்ப்பு முறைகள் :
 
ஆடுகள் இரண்டு முறைகளில் வளர்க்கப்படுகின்றன.
 
நாடோடி வளர்ப்பு முறை :
 
இம்முறையில் மேயவிடுதல், மேய்ச்சல் மற்றும் ஆட்டுப் பட்டியில் அடைத்தல் ஆகிய இருவேறு முறைகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. அதனால் கிராமப்புற பகுதிகளுக்குப் பொருத்தமான முறையாக இது விளங்குகிறது.
 
நிலையான வளர்ப்பு முறை :
 
குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை கட்டி வைத்து வளர்த்தல் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வளர்த்தல் ஆகியவை இம்முறையில் அடங்கும். ஆடுகள் தேவைப்படும்போது பயிர் செய்யப்பட்ட தீவனங்களை மேய்தல் மற்றும் கூடுதலாக அறுவடை செய்த அடர்தீவனத்தை வழங்குவது ஆகியன இந்த முறையின் சிறப்பம்சமாகும்.
 
ஆடு இனங்கள் :
 
ஆடுகளில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளாடுகள் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. எனவே இது ‘ஏழைகளின் பசு’ என்று அழைக்கப்படுகிறது. வறட்சியான பகுதிகளில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகளில் இருந்து கம்பளி மற்றும் உரோமப்பொருட்கள் பெறப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இறைச்சிக்காகவும் பயன்படுகின்றன.
 
செம்மறியாடுகள் (Sheep) :
 
* மேச்சேரி,
* கோவை குரும்பை,
* நீலகிரி,
* இராமநாதபுரம் வெள்ளை,
* இராமநாதபுரம் கீழக்கரிசல்,
* வெம்பூர்,
* சென்னை சிவப்பு,
* திருச்சி கருப்பு மற்றும் கச்சை கட்டி கருப்பு
 
என வெவ்வேறு செம்மறியாடுகள் தமிழகத்தில் உள்ளன.
 
மேய்ச்சலில் நன்கு வளரக்கூடியது. அறுவடைக்கு பின்பு நிலங்களிலுல் மீதியுள்ள பயிர்களை உட்கொள்ளும். வறட்சியான சூழ்நிலையையும் செம்மறியாடுகள் தாங்கி வளரக்கூடியவை. கம்பளி மற்றும் ரோமத்திற்காக செம்மறியாடுகள் வளர்க்கப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இறைச்சிக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.
 
வெள்ளாட்டு இனங்கள் (Lamb) :
 
கொடியாடு, போரையாடு, கன்னி ஆடு, சேலம் கருப்பு, பள்ளையாடு மற்றும் மோளையாடுகள் என பலவகையான வெள்ளாட்டு இனங்கள் தமிழகத்தில் உள்ளன.
 
இளம் தளிர்களையும், இலைகளையும் உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டது. அதிக தீவனத்தை உட்கொள்ளும். அதிக நார்ப்பொருள் உள்ள தீவனங்களையும் செரிக்க வல்லது. உயரத்தில் உள்ள தீவனங்கள் உட்கொள்ளும் பொருட்டு நன்றாக வளைந்து எடுத்துக் கொள்ளும் வகையில் நாக்கு அமைந்துள்ளது. மேலும் மேலுதடுகள் அசைவுத் தன்மை கொண்டவை.
 
கோழிகள் :
 
தரமான தீவனப்பராமரிப்பு இருந்தால்தான் கோழிகளின் உடல் எடை மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க முடியும். கோழிகளுக்குப் பெரும்பாலும் அடர் தீவனமே வழங்கப்படுகிறது. கோழித்தீவனத்தில் மக்காச்சோளம் பெரும்பங்கு (சுமார் 50 சதம்) வகிக்கிறது. மேலும் கடலைப்பிண்ணாக்கு, கோதுமைத் தவிடு, மீன்தூள், சோயா பொருட்கள், தாதுஉப்பு, வைட்டமின் கலவை மற்றும் ஊட்டப்பொருட்கள் ஆகியவையும் இத்தீவனத்தில் இருக்கும். இத்துடன் பைபுரான் என்ற ரசாயன மருந்தையும் (100 கிலோ தீவனத்திற்கு 50 கிராம்) தீவனத்துடன் சேர்த்து இரத்தக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்த கொடுக்க வேண்டும். தீவனம் நன்றாக உலர்ந்த நிலையில் இல்லையென்றால் அப்ளோடாக்சின் (Aflotoxin) நச்சு உருவாகி கோழிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
 
உலகக் கோழி எண்ணிக்கையில் 4 சதம் கோழிகள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாடு கோழிமுட்டை உற்பத்தியில் நம் நாட்டில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள நாமக்கல் பகுதியில் முட்டைக் கோழிகள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.
 
கோழி இனங்கள் :
 
கோழியினங்கள் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கோழிகள் அடைக்கப்பட்ட தனித்தனி கூண்டுகளில் பராமரிக்கப்படுகின்றன. இதன் உற்பத்தித் திறன் வருடத்திற்கு சுமார் 180 முதல் 300 முட்டை என கோழியின் இனத்திற்கேற்ப வேறுபடும். இறைச்சிக் கோழி இனங்கள் 6 முதல் 8 வாரங்களில் 2 கிலோ உடல் எடையை அடையும் வகையில் வளர்க்கப்படுகின்றன.
 
கோழியினங்கள் மூன்று வகைகளில் பராமரிக்கப்படுகின்றன.
 
புழக்கடை கோழி வளர்ப்பு :
 
இம்முறையில் கிராமங்களில் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இக்கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக இயற்கை முறையில் பராமரிக்கப்படுகின்றன.
 
பகுதி தீவிர முறை கோழி வளர்ப்பு :
 
இம்முறை கோழிகளுக்கு கூண்டு மற்றும் உலாவுவதற்கு இடம் ஆகியவை அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இம்முறையில் வளர்க்கப்படுகின்றன.
 
தீவிர முறை கோழி வளர்ப்பு :
 
இது ஆழ்கூள முறை மற்றும் கூண்டு முறை என இரண்டு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆழ்கூள முறையில் தென்னை நார்க் கழிவு, நெல் உமி, மரத்தூள், நிலக்கடலை மேல் தோல், வைக்கோல், காகிதக் கழிவுகள் ஆகிய பொருட்களை நிலத்தின் மேல் பரப்பி கோழிகளை வளர்ப்பதாகும். கூளங்கள் ஈரத்தை உறிஞ்சி வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்துவதுடன், படுக்கையாகவும் செயல்படுகின்றன. கூண்டு முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிகள் குறைந்த அளவு இடத்தில் வளர்க்கப்படுகின்றன. தண்ணீர் மற்றும் தீவனம் கொடுக்கப்பட்டு இம்முறையில் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
 
கோழி இனங்கள் கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
 
இந்திய இனம் :
 
* அசீல் (Aseel)
* சிட்டகாங் (Chittagong)
* இந்தியன் கேம் (Indian game)
 
அமெரிக்க இனம் :
 
* பிளைமௌத்ராக் (Plymouth-rock)
* ரோடு ஐலண்ட் ரெட் (Road Island Red)
* நியூ ஹேம்ப்ஸயர் (New Hampshire)
 
ஆசிய இனம் :
 
* பிரம்மா (Brahma)
* கொச்சின் (Cochin)
* லாங்ஷான் (Langshan)
 
ஆங்கில இனம் :
 
* ரெட்கேப் (Red cap)
* டார்க்கிங் (Dorking)
* கார்னிஷ் (Cornish)
 
மத்திய தரைக்கடல் இனம் :
 
* வெள்ளை லெகார்ன் (White leghorn)
* மைனார்க்கா (Minorca)
* அன்கோனா (Anocona)
 
வீரிய இன முட்டைக்கோழி –
 
* பேப்காப் (Babcob)
* டெல்காப் (Delcob)
* போவன்ஸ் (Bovans)
 
கலப்பின இறைச்சிக்கோழி –
 
* வென்காப் (Vencob)
* இந்தியன் ரிவர் ராஷ் (Indian River Rosh)
* பிட்டர்சன் (Pitter Son)
 
தமிழ்நாட்டில் உள்ள முட்டைக்கோழி இனங்களில் பேப்காக் வருடத்திற்கு முந்நூறுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். இறைச்சிக் கோழி இனங்களில் வெண்காப் 6-8 வாரங்களில் 2 கிலோ உடல் எடையை அடையக்கூடியது.
 
முட்டைப் பற்றிய அறிவியல் (Egg Science) :
 
முட்டை என்பது பருவமடைந்த கோழிகள் இனப்பெருக்கத்திற்காக சாதாரண உடல் இயக்கத் தன்மையில் உருவாக்கும் ஒரு செல் பொருளாகும். இம்முட்டை கருவாக மாறும்போது கரு வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் இதில் அடங்கி இருக்கும்.
 
முட்டை பற்றிய விபரம் :
 
* முட்டையின் எடை சராசரி 50 முதல் 60 கிராம்
* மஞ்சள் நிற பகுதி 30 சதம்
* வெள்ளை நிற புரதச்சத்து வாய்ந்த பகுதி 58 சதம்
* கோழி ஓட்டின் உள், வெளி சவ்வு மற்றும் முட்டை ஓடு ஆகியன 12 சதம்
 
முட்டையிலுள்ள சத்துக்கள் விவரம் :
 
* 12 சதம் கொழுப்புச்சத்து
* 11 சதம் தாது உப்புக்கள்
* 12 சதம் தண்ணீர்
* 65 சதம் 100 கிராம் எடையுள்ள முட்டைகளிலிருந்து பெறப்படும் எரிசக்தி 148 கலோரிகள்
 
 
மீன்கள் :
 
உலகின் தொன்மையான உணவு உற்பத்தித் தொழில்களுள் மீன் உற்பத்தியும் ஒன்றாகும். மீன் வளர்ப்பு நீர் வளம் மிகுந்த இடங்களில் அதிக வருவாய் கிடைக்கவும், நீலப்புரட்சியைத் தீவிரப்படுத்தவும் வழிவகை செய்கிறது. புரதம் மிகுந்த சத்தான உணவை மீன்கள் அளிக்கின்றன. மீன் மாமிசத்தில் தாது உப்புக்களும், மீன் எண்ணெயில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘பி’ சத்துக்களும் உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் மீன்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
 
மீன் இனங்கள் (Fish Breeds) :
 
இந்தியாவில் ஆழ்கடல், உள்நாடு, ஆறு, கழிமுகம், நீர்த்தேக்கம் மற்றும் குட்டை ஆகிய இடங்களில் மீன் பிடித்தல் தொழில் நடைபெறுகிறது. மீன் இனங்களில் குமுளா, நாக்குமீன், வாவல், வஞ்சிரம், சுறா, திருக்கை, நெத்திலி, மடவை, விலாங்கு, இறால், நண்டு போன்றவை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெற்றவையாகும்.
 
தமிழ்நாட்டில் அணைக்கட்டு, தடுப்பணைகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், தாழ்நிலை கடற்கரை பகுதி, கழிமுகம் ஆகியவை முக்கியமான மீன்பிடி பகுதிகளாகும். இப்பகுதிகளில் விலாங்கு, கெளுத்தி, காரை, வாவல், குமுளா, வஞ்சிரம், சூரை, தட்டைமீன்கள், இறால் மற்றும் நண்டுகள் பிடிக்கப்படுகின்றன. மீன் இனங்களான கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, கெளுத்தி, விரால் போன்றவை நன்னீரில் வளர்க்கப்படுகின்றன.
 
மீன்களின் உணவு (Fish Food) :
 
* கட்லா, வெள்ளிக் கெண்டை இன மீன்கள் மேல்மட்டத்திலுள்ள தாவர, விலங்கின மிதவைகளை உணவாக உண்ணும்.
 
* இடைமட்டத்தில் உள்ள நீர்வாழ் பாசிகள், நீர் வாழ் தாவரங்கள், அழுகிய நிலையிலுள்ள நீர்வாழ் தாவரங்கள் மற்றும் செயற்கை உணவாகிய பிண்ணாக்கு தவிடு போன்றவற்றையும் ரோகு இனமீன்கள் உண்ணும்.
 
* மீர்கால், சாதாக்கெண்டை இனமீன்கள் அடிமட்டத்திலுள்ள அழுகும் பொருட்களை உண்ணும். புல்கெண்டை, சேல் கெண்டை இனமீன்கள் முழுமையான தாவர உண்ணியாகும்.
 
* இவை நீரில் வாழும் பெரிய தாவரங்களான ஹைட்ரில்லா, லெம்னா ஆகிய நீர்வாழ் களைகளை உணவாக உண்பதால் களைக்கட்டுப்பாட்டில் பயன்படுகின்றன.
 
* கெளுத்தி மீன்கள் புலால் உண்ணிகளாகும். அவை பூச்சிகள், மெல்லுடலிகள் மற்றும் சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும்.
 
கடல்வாழ் உயிரிகளின் பயன்கள் (Benefits of Sea Living Organisms) :
 
* மீன்கள் புரதம், தாது உப்புக்கள், வைட்டமின் ஏ மற்றும் பி ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.
 
* மீனின் நீந்தும்பை (காற்றுப்பை) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐசிங்கிளாஸ் (lcing Glass) தயாரிக்கப் பயன்படுகிறது.
 
* சுறாமீன் துடுப்புகள் ரசம் (Soup) செய்வதற்காக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
* விளையாட்டு மற்றும் பொழுது போக்கிற்காக மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
 
* சில வகை மீன்கள் உயிர்காட்சி சாலைகளில் (Aquarium) அழகிற்காக வளர்க்கப்படுகின்றன.
 
* மீன் எண்ணெய், மீன் உடல் எண்ணெய், ஈரல் எண்ணெய் ஆகியவை வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
* முத்துச்சிப்பிகளில் உள்ள முத்துக்கள் ஆபரணங்கள் செய்யப் பயன்படுகின்றன.
 
* இறால் மீன்கள் சதைக் கூழ் எடுக்கப்பட்டு, உலர வைத்து, உலர் பதனம் செய்து பதனிட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories