கறவை மாடு வளர்ப்பில் அதிகமாக பால் கறக்கும் கலப்பின மாடுகளில் உள்ள முக்கியமான பிரச்சனை பால்சுரப்பு காய்ச்சல் என்பதாகும் .இந்த நோய் மாடுகளுக்கு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் கட்டுப்படுத்துவது பற்றியும் இங்கு காணலாம்.
கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. சில மாடுகளில் கன்று ஈனுவதற்கு முன்பே கூட இந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக பால் இல்லாத காலங்களில் மாடுகளின் தேவைக்கும் வயிற்றில் வளரும் கன்றின் தேவைக்கும் நாள் ஒன்றுக்கு 30 கிராம் கால்சியம் சத்து தேவைப்படும். ஆனால் கன்று ஈன்ற பிறகு அதிக அளவு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. கன்று ஈன்ற மாடுகளில் உடனடியாக வளர்சிதை மாற்றம் மூலமாக எலும்பிலுள்ள கால்சியத்தை உறிஞ்சும் மாடுகளின் உடல் எடையை பராமரிக்க இயலாததால் இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்து பால் சுரப்பு காய்ச்சல் ஏற்படுகிறது. கன்று ஈன்ற மாடுகளுக்கு மூன்று முதல் ஏழு கன்று என்று மா டுகளுக்கும் இந்த நோய் அதிகம் ஏற்படும். வயதான மாடுகளுக்கும் தீவனத்தில் அளிக்கப்படும் சுண்ணாம்பு சத்தை உடற்பகுதியில் இருந்து உறிஞ்சும் திறன் குறைவதாலும் பால் சுரப்பு காய்ச்சல் ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள் மூன்று நிலைகளில் ஏற்படுகிறது. முதல் நிலை மாடுகள் நிற்பதற்கு மிகவும் சிரமப்படும்,. மிகவும் சோர்வாகவும்,பசி இன்றி காணப்படும். இரண்டாம் நிலையில் மாடுகள் உட்கார்ந்த நிலையில் படுத்துக் கொண்டு கழுத்தை வயிற்றுப் பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளும். மாடுகள் சிறுநீர் கழிக்காமல் சாணம் போடாமல் வயிறு உப்பி காணப்படும். இந்த இரு நிலைகளில் சிகிச்சை அளிக்காமல் விட்டால் மூன்றாம் நிலையில் தொடு உணர்ச்சி அற்ற நிலை ஏற்படும் இதில் சிகிச்சை அளிக்கவில்லை எனில் மாடுகள் இறந்து விடும்.
கன்று ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இருந்து சுண்ணாம்பு சத்து குறைவாக அளித்தும் கன்று ஈன்றவுடன் 10 முதல் 15 நாட்களுக்கு அதிக சுண்ணாம்பு சத்து உள்ள தீவனத்தை அளிப்பதன் மூலம் பால் சுரப்பு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.