கால்நடைகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற

கால்நடைகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற

தற்போது நிலவிவரும் கத்தரி வெயிலால் கால்நடை, கோழிகள் வெப்ப அயற்சியின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகும்.  உற்பத்தி திறன் குறைந்து, சில சமயம் இறப்பு நேரிடும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்பநிலைக்கு ஏற்ப சீராக வைத்துக்கொள்கின்றன. ஆனால் குறிப்பிட்ட வெப்பத்திற்கு மேல் வெப்ப அயற்சி ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் சுவாசம் அதிகரித்தும், மூச்சு வாங்குதல் காணப்படும். தண்ணீர் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும். நிழலான இடத்தை நோக்கி தள்ளாடியபடி நடக்கும்.

சில சமயம் முறையாக பராமரிக்காவிடில் இறப்பு நேரிடும். கோடையில் கால்நடைகளை சூரிய ஒளியின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, வெயிலில் மேய்ச்சலை தவிர்த்து நல்ல காற்றோட்டமான கொட்டகையினுள் அல்லது மரநிழலில் இருக்கவேண்டும். கொட்டகையினுள் அதிக நெரிசலின்றி ஒரு மாட்டுக்கு 4 சதுர மீட்டர் பரப்பளவு இடம் கிடைக்க வேண்டும். கொட்டகை மேற்கூரை வழியே வெப்பம் தாக்காமல் இருக்க வேளாண் கழிவுகளை கூரையின் வெளிப்பகுதியில் பரப்பி நீர்தெளிக்கலாம்.

கொட்டகையை சுற்றி வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் இருப்பது நல்லது. கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலம் சூரிய ஒளி நேரடியாக உள்ளே வராது. கொட்டகை கூரை உச்சி 12-14 அடி உயரம் இருந்தால் நல்ல காற்றோட்டம் ஏற்படும். கொட்டகையினுள் சாணம் மற்றும் கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் தொற்றுநோய் தாக்குதல் இருக்காது.

 

அதிக வெப்பம் சுற்றுப்புறத்தில் காணப்படுவதால் கால்நடைகளின் உடல் வெப்பநிலையும் அதிகரித்து வெப்ப அயற்சி அல்லது வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆகையால் கால்நடைகளின் உடல் வெப்பநிலையை தணிப்பது மிக அவசியம். இதற்கு ஒரு நாளைக்கு 5 முறை பூவாளியில் தண்ணீர் எடுத்து பசுக்களின் உடல் மீது தெளிக்கலாம். கொட்டகையினுள் நல்ல காற்றோட்டத்தை உருவாக்கவும், உடல் சூட்டை தணிக்க மின்விசிறி பயன்படுத்துவதின் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் குறையாமல் பராமரிக்கலாம்.

குடிநீரின் அவசியம்

கால்நடைகளுக்கு துாய்மையான குளிர்ந்த நீரானது தேவையான அளவு 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வைக்கவேண்டும். வெயில் காலத்தில் குடிநீரின் தேவை இருமடங்காக உயர்வதால் போதிய அளவு குடிநீர் கிடைக்கும் வகையில் மேய்ச்சல் நிலங்களிலும் குடிநீர் தொட்டிகளை நிழலில் அமைப்பது அவசியம்.

ஒரு கறவை மாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 70 – 80 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். உடல் வெப்பத்தால் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறையும். கறவை மாடுகளுக்கு சினை பிடிக்கும் தன்மை குறையும். இதனால் அடர் தீவனத்தில் தானவாஸ் தாது உப்பு கலவையை 2 சதவீத அளவில் கலந்து பயன்படுத்தவும் அல்லது பசுவிற்கு ஒரு நாளுக்கு 40 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து அளிக்கவும். சரி விகித தீவனம் அளிப்பது மிக அவசியம். அதிக வெயிலினால் மேய்ச்சல் நேரம் குறைந்து மாலை மற்றும் இரவில் பசுந்தீவனம் மற்றும் மரத்தழைகளை அளிக்கலாம்.

அசோலா தீவனம்

அசோலா பாசியை தீவனமாக அளிப்பதன் மூலம் புரதச்சத்து தேவையை ஈடுசெய்யலாம். ஒரு நாளைக்கு 1 பசுவிற்கு 1.5 கிலோ அளவில் அளிக்கலாம். அசோலா தொட்டிகளை நேரடி சூரிய ஒளியில்படுமாறு அமைத்தால் அதிகளவில் நீர் ஆவியாகி தேவையான அளவு அசோலாவாக உற்பத்தி செய்ய இயலாது.

ஆகையால் நிழலான பகுதியில் அசோலா குடிலை அமைத்து தினமும் அசோலாவை கால்நடைக்கு அளிக்க வேண்டும்.

ஹைட்ரோபோனிக் தீவனம்

பசுந்தீவன குறைபாட்டைஈடு செய்ய மண் இன்றி, தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படும் ஹைட்ரோபோனிக் தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கலாம். இதனை உற்பத்தி செய்ய குறைவான தண்ணீரும், குறைந்த இடவசதியும் போதுமானது. அதிக நீர்ச்சத்தும் குறைவான நார்சத்தும் கால்நடைகளுக்கு கிடைக்கின்றன. மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைக்கட்டி 4 – 8 நாட்கள் வளர்ந்த பின் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

டாக்டர்கள் ஆலோசனை

அதிக வெப்ப அயற்சியின் காரணமாக கால்நடைகளின் நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது. தேவையான அளவு தீவனம் உட்கொள்ளாத போது ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் தாக்குதல் ஏற்படலாம். கால்நடை டாக்டர்களின் ஆலோசனை பெற்று கால்நடைகளை பாதுகாக்கலாம்.

வ.குமரவேல், பேராசிரியர்
வேளாண் அறிவியல் நிலையம்
குன்றக்குடி, சிவகங்கை.
9698657555

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories