பருவ மாற்றத்தினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள் :

 
1. காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் நேரடி விளைவு
2. காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் மறைமுக விளைவு
3. காலநிலை மாற்றத்தால் கால்நடைகளின் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு
4. காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் இனப்பெருக்கத்தில் ஏற்படும் பாதிப்பு
5. காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் தகவமைத்துக் கொள்ளும் திறனில் ஏற்படும் விளைவு
6. காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்
7. காலநிலை மாற்றத்தின் போது கால்நடைகளில் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்
8. பண்ணை மேலாண்மை
9. இனப்பெருக்க மேலாண்மை
 
இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் வேளாண் உற்பத்தியில் கால்நடையானது முக்கிய அங்கம் வகிக்கின்றது. மொத்த வேளாண் உற்பத்தியில் கால்நடையின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. கால்நடைகளின் உற்பத்தியான இறைச்சி, பால், முட்டை போன்றவற்றின் தேவை நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே இவற்றை மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்வது மிகவும் அவசியமாகின்றது. கால்நடையானது வானிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. பருவநிலை மாற்றத்தினால் மழையளவு குறைந்து மேய்ச்சல் நிலம் அளவு மற்றும் தரம் குறைவதால் கால்நடைகளின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கச் செயல்திறன் குறைய வழிவகை செய்கின்றது. இவ்வாறு காலநிலை மாற்றம் என்பது உலகளவில் உள்ள கால்நடைகளைப் பாதிக்கும் அச்சுறுத்தலோடு உள்ளது. இதனால் கால்நடைகள் புதிய மாறுபடும் காலநிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் அவற்றின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் அதிகத் தாக்கத்தைச் சந்திக்கின்றன. உலக வெப்பநிலையானது இப்போது இருப்பதைவிட வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் கால்நடையானது அதிகப்படியான சூரியக் கதிரியக்கம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவற்றினால் பெறும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதிகப்படியான வெப்பநிலையில் உற்பத்தி குறைவதோடு மட்டுமில்லாமல் இறக்கவும் நேரிடும். எனவே தான் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகின்றது.
காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் நேரடி விளைவு :
 
காலநிலை மாற்றத்தினால் கால்நடையானது வெப்ப அயர்ச்சிக்கு உட்பட்டு அவற்றின் உற்பத்தித் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. வெப்ப அயர்ச்சியின் விளைவாகக் கால்நடைகளின் பால், இறைச்சி, முட்டை போன்றவற்றின் உற்பத்தி, இனப்பெருக்கத் தன்மை, கால்நடைகளின் உடல்நலம் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்திப் பண்ணை வருமானத்தைக் குறைப்பதால் கால்நடை வளப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவையும் கால்நடைகளை நேரடியாகதி தாக்குவதால் அவற்றின் உற்பத்தியானது குறைய வாய்ப்புள்ளது.
 
காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் மறைமுக விளைவு :
 
பெரும்பாலும் கால்நடைகளின் உற்பத்தியானது மறைமுகத் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம்மற்றும் நீரின் அளவு குறைவதாலோ அல்லது வறட்சியினால் தீவனப் பற்றாக்குறையினாலோ கால்நடையின் உற்பத்தியானது மறைமுகத் தாக்கங்களை எதிர்கொள்கின்றன. பருவநிலை மாற்றத்தால் தீவன உற்பத்தியின் அளவு மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்டுத் தீவனப் பற்றாக்குறையினால் கால்நடைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறாகப் பருவநிலை மாற்றமானது தீவன உற்பத்தியை மட்டுமல்லாமல் மற்ற மேய்ச்சல் நிலங்களையும் பாதிக்கின்றது. இதனால் கால்நடைத் தீவன உற்பத்தியானது பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
 
காலநிலை மாற்றத்தால் கால்நடைகளின் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு :
 
கால்நடைகள் வெப்ப அயர்ச்சியினால் பாதிக்கப்படும்போது தீவனம் உட்கொள்ளும் திறன் குறைகின்றது. மாறாக நீர் அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் உற்பத்தியானது பாதியாகக் குறைகின்றது. கறவைப் பசுக்களின் பால் உற்பத்தி, பாலின் தரம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. வெப்ப அயர்ச்சியின் விளைவாகப் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பற்ற திடப்பொருள், லேக்டோஸ் என்கிற பாலில் சர்க்கரை போன்றவை குறைந்து பாமிட்டிக் மற்றும் ஸ்ட்டியாரிக் அமிலங்களின் அளவு பாலில் அதிகரிக்கின்றன. இவை பெரும்பாலும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பசுக்களையே அதிகமாகப் பாதிக்கின்றன. இவ்வாறாகக் கால்நடையின் உற்பத்தியில் உடல் எடை, தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு போன்றவை காலநிலை மாற்றத்தினால் குறைகின்றன.
 
காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் இனப்பெருக்கத்தில் ஏற்படும் பாதிப்பு :
 
வெப்ப அயர்ச்சியின் விளைவாக இனப்பெருக்கச் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வெப்ப அயர்ச்சியில் உள்ள பசுக்களில் வளர்ச்சி அடைந்த கருமுட்டைகளிலிருந்து ஈஸ்ட்ரடியாலின் சுரப்பு குறைவதினால் பசுவானது மிகக் குறைந்த அளவு சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவேதான் கோடைக்காலங்களில் சினைப்பருவ அறிகுறிகள் கண்டறிவது சற்று சிரமமாக உள்ளது. மேலும் இக்காலங்களில் பொதுவாக 20 முதல் 27 விழுக்காடு அளவில் மட்டுமே சினைபிடிக்கின்றன. வெப்ப அயர்ச்சியின் விளைவாகக் கருப்பையின் செயல்பாடு, கருமுட்டையின் வளர்ச்சி போன்றவை பாதிக்கப்பட்டுக் குறைந்த அளவே கருவுருதல் நடைபெறுகின்றது. எனவே வெப்ப அயர்ச்சியால் உள்ள பசுக்களின் இனப்பெருக்கத் திறமையானது சற்றே குறைந்து காணப்படுகின்றது. மேலும் இவ்வகைப் பசுக்களில் புரோஜெஸ்டிரோன் லியூடினைசிங், சுரப்பி நீர், கருப்பை இயக்கவியல் ஹார்மோன் போன்றவற்றின் சுரப்பு மாறுவதன் விளைவாகக் கருவளர்ச்சி பாதிக்கப்பட்டுக் கரு இழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் காளைமாடுகளின் விந்தணுக்களின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
 
 
காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் தகவமைத்துக் கொள்ளும் திறனில் ஏற்படும் விளைவு :
 
வெப்பத்தினால் பரவலான இடங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் இடத்திற்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்வதில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றன. இதனால் மறைமுகமாக அவற்றின் உற்பத்தியானது குறைய வாய்ப்புள்ளது. மேலும் இவ்வகைச் சூழ்நிலைகளில் உள்ள கால்நடைகளின் சுவாசத்தின் அளவு, உடலின் வெப்பநிலை, கார்டிசோல் மற்றும் வெப்ப அயர்ச்சிப் புரதம், நீர் எடுத்துக் கொள்ளும் அளவு போன்றவை அதிகரிக்கும் தைராய்டு சுரப்பு நீர் உற்பத்தி வெகுவாகக் குறைந்தும் காணப்படுகின்றன.
 
காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் :
 
வெப்ப நிலை, மழையின் அளவு போன்ற மிக முக்கியமான காலநிலை மாறுபாட்டின் மூலம் கால்நடைகளில் நோய்த் தொற்று ஏற்படக் காரணமாகின்றது. அதிக வெப்பமான அல்லது குளிரான வானிலையானது கால்நடைகளின் நோய்தி தாக்கத்திற்கு உகந்து கணப்படுகிறது. ஏனெனில் இக்காலங்களில் தான் நோய் பரப்பும் காரணிகளான ஈக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவை ஆண்டு முழுவதும் உயிர் வாழ்ந்து கால்நடைகளில் நோயினைப் பரப்பி உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இக்காலங்களில் நோய் பரப்பும் காரணிகளால் முக்கியமாக உண்ணிக்காய்ச்சல், தெய்லீரியோசிஸ் (நிணநீர் கட்டி நோய்), ஆட்டு அம்மை, கோமாரி நோய், நீலநாக்கு நோய் போன்று இன்னும் பல நோய்களினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதினால் இறக்க நேரிடுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
 
காலநிலை மாற்றத்தின் போது கால்நடைகளில் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் :
 
உலக வெப்பமயமாதலின் விளைவாக வேளாண்மை மற்றும் கால்நடைகளுக்கு நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்துகின்றது. எனவே காலநிலை மாற்றத்தினை நாம் சமாளிப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் சாலச் சிறந்தது. பண்ணைகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் புதிய இனப்பெருக்கச் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்குத் தீவனம் அதிகமுள்ள காலகட்டங்களில் அவற்றைப் பாதுகாத்து வைத்துப் பதப்படுத்தி உலர் தீவனமாகவோ அல்லது ஊறுகாய்ப் புல் தாயாரித்து வைப்பதன் மூலமோ தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.
 
பண்ணை மேலாண்மை :
 
1. பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்களை அமைக்க வேண்டும்.
 
2. கால்நடைகளுகு போதுமான குடிநீர் அளித்தல் வேண்டும்.
 
3. வெப்பம் மிகுதியான காலங்களில் கால்நடைகளைக் குளிக்க வைக்க வேண்டும்.
 
4. கால்நடைகளுக்குப் போதுமான இட வசதி கொடுக்க வேண்டும்.
 
5. வெப்பநிலையைக் கட்டுப்படுத்த நல்ல காற்றோட்டமான முறையில் பண்ணைகளை அமைத்தல் வேண்டும்.
 
இனப்பெருக்க மேலாண்மை :
 
1. கோடைக் காலங்களில் சினைப்பெருக்கத்தினைக் கண்டறிவது சற்று சிரமமாக இருப்பதால் சினைப்பெருக்கத்தினை ஒருங்கிணைத்தல் போன்ற தொழில்நுட்பத்தினைச் செயல்படுத்துதல் சாலச் சிறந்தது.
 
2. கோடைக்காலங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட், பீட்டா-கரோட்டின் மற்றும் மெலோடேனின் போன்றவற்றை அளிப்பதன் மூலம் சினையுறும் திறனை அளிக்கலாம்.
 
3. வெப்பநிலைக்கு ஏற்பக் கால்நடைகளைத் தேர்வு செய்தல் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைப்படி நவீன இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories