வருமானத்தைத் கொட்டித் தரும் காங்கிரீஜ் இன பசுக்கள்- பராமரித்தல்!

மாடுகளுக்கே உள்ள கம்பீரம், பார்ப்பதற்கு பயங்கரமாகவும், சற்று முரட்டுத்தனமாகவும் காட்சியளிக்கும் காங்கிரீஜ் இன மாடுகள், பழகினால் மிகவும் பாசமானவை. அன்புக்கு கட்டுப்படும் இவ்வகை பசுக்கள், நாள் ஒன்றுக்கு 14லிட்டர் வரை பால் கறக்கும். இந்தியாவில் அதிக பால் தரும் பசு இனங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இனமே காங்கிரீஜ்தான்.

பூர்வீகம்
இந்த நாட்டு பசுக்கள் குஜராத் மாநிலம் பனாஸ்காண்டா மாவட்டம் மற்றும், மும்பையின் மேற்கு கடற்கரையில உள்ள பாரத் பகுதியை பூர்வீகமாக‍க் கொண்டவை.

தோற்றம்
பன்னாய், நாகர், வாட்தாத் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த இனமாடுகள், வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன. காங்கிரீஜ் மாடுகள், உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் சிறப்பாகப் பயன்படுகின்றன.

தோளில் திமிலுடன் இருக்கும் இந்த மாடுகள் வெப்பத்தை தாங்க‍க்கூடியதாகவும் பூச்சி எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன. தமிழகத்தின் சீதோஷணநிலைக்கு ஏற்றவையாக உள்ள இவ்வகை மாடுகளுக்கு, தீவனம் மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால் போதும், நன்றாக பால் வளம் பெருக்கலாம்.

பால்
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 8 லிட்டர் வரை பால் தரும். நல்ல காளையுடன் இனவிருத்தி செய்யப்பட்ட மாடாக இருந்தால், அதிகபட்சம் 12 முதல் 14 லிட்டர் வரை பால் கறக்கும்.

தாய்ப்பாலுக்கு நிகரான அத்தனை சத்துக்களும், கொண்டது இந்த மாடுகளின் பால். அதனால்தான் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும், இவ்வினப் பசுக்களின் பாலை விரும்பி வாங்கிப் பருகுகின்றனர்.

தீவனம்
நாட்டு பசுக்களுக்கு அளிக்கக்கூடிய தீவனமே இவற்றும் பொருந்தும். கறவை மாடுகளாக இருந்தால், ஒரு லிட்டர் பாலுக்கு அரை கிலோ வீதம் அடர்த்தீவனம் அவசியம். அத்துடன் உடல் எடைப் பராமரிப்பிற்கு 4கிலோ தீவனமும் தேவை என்றார்.

நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் பால் கறக்கும் கான்கிரீஜ் இன மாடாக இருந்தால், 5 கிலோ அடர்த்தீவனமும், உடல் எடைப் பராமரிப்பிற்கு 4 கிலோ தீவனமும் சேர்த்து, மொத்தம் 9 கிலோ அளிக்கப்பட வேண்டும். பசுந்தீவனம் 3 வேளையும், வரத்தீவனம் ஒரு வேளையும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

பசுந்தீவனம்
கோ 4, எஃப்எஸ் 29, அகத்தி, மல்பெரி, மக்காச்சோளத் தட்டு போன்வற்றை பசுந்தீவனமாக வழங்கலாம்.

வரத்தீவனம்
சோளத்தட்டு, வைக்கோல், ராய்தால் ஆகியவை

அடர்த்தீவனம்
கோதுமைப்பொட்டு, துவரம்பொட்டு, உளுந்துப்பொட்டு (வாசனைக்கு) கலந்துகொடுக்கலாம். கோடைக்காலமாக இருந்தால், கோதுமைப்பொட்டுவின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

வேலிமசால், குதிரைமசால், முயல் மசால், சோளத்தட்டு, பிண்ணாக்கு ,தேங்காய் பிண்ணாக்கு போன்றவற்றை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீவனத்தை மாற்றி மாற்றி தந்தால், ருசித்து சாப்பிடும். புட்டு மாதிரியாக் கெட்டியாக் கொடுக்காமல், தயிர்சாதம் மாதிரி இழக்கலாகக் கொடுப்பது நல்லது.

ரசாயனத் தீவனத்தை தவிர்ப்போம்
ரசாயன தீவனத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், நாம் கொடுக்கும் ரசாயனத் தீவனத்தால், பாலில் ரசாயனம் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் பால், இதனை அருந்துவோரின் உடலுக்கும் தீமைப் பயக்கலாம்.

எப்போது தீவனம் கொடுக்கலாம்?
பொதுவாக பால் கறப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகத் தீவனம் கொடுக்க வேண்டும். பால் கறக்கும் நேரத்தைப் பொருத்தவரை அனைத்துநாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நேரம் மாறிக் கறந்தால், பால் அளவு குறைந்துவிடும். காலையில் கறப்பதைவிட, மாலையில் அரை லிட்டராவது குறையும்.

பிறகு பகலில் 12 மணியளவில் தண்ணீர் கொடுக்கும்போது, 20 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வீதம் தாதுப்புகள் கலந்துகொடுக்க வேண்டும். இதனால், மாட்டின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எந்த நோயும் இந்த இன மாடுகளை எளிதில் தாக்காது.

கட்டிப்போடக்கூடாது
காங்கிரீஜ் இனப் பசுக்களைக் கட்டிப்போடக்கூடாது. பால் கறந்த பின்பு அவை சுதந்திரமாக அங்கும் இங்கும் செல்ல அனுமதிக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல், கட்டிப்போட்டால் அவற்றின் கால் மறத்துவிடும். எனவே நீங்கள் கயிற்றைக் கழற்றும்போது, பசு தப்பி ஓடிவிடும். பின்னர் தாமாகவே வந்துவிடும்.

இனவிருத்தி
இந்த இன கிடேரி கன்றுகளை, காளைக் கன்றுகளுடன சேர்த்து இனச்சேர்க்கை செய்தால், நன்கு பால் தரக்கூடிய சந்ததியை உருவாக்க முடியும்.

இதுகுறித்து இயற்கை விவசாயி வெங்கடேஸ்வரன் கூறுகையில், நம் நாட்டிலேயே இந்த இனத்தைப் பெருக்கிக்கொள்வது அவசியம். கன்றுக்குட்டிகளை இயற்கையான முறையில், காளைகளுடன் இனப்பெருக்கம் செய்வதால், சினை பிடிக்க வைக்க முடியும். அமாவாசைக்கு 2 நாட்களுக்கு முன்பும், பௌர்ணமிக்கு ஒரு நாள் முன்பும் சரியான சுழற்சி முறையில் சிணை பிடிக்க வைக்கலாம். நாம் தண்ணீரில் தாதுப்புகளைச் சேர்ப்பதைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தால், சினை அடைவதில் சிக்கல் ஏதும் இருக்காது.

அதைவிட்டுவிட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் ஊசிகளைப் பயன்படுத்தி சினைபிடிக்க வைப்பது, 100 சதவீதம் வெற்றியடைய வாய்ப்பு இல்லை என்றார். எனவே தமிழகத்தில் வளர்க்கச் சிறந்த நாட்டு மாடு என்றால், அது காங்கிரீஜ்தான் எனவும் அவர் கூறினார்.

விலை
குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு கூட தினமும் 6 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய காங்கிரீஜ் இன மாடுகள் கிடைக்கின்றன. கிராமங்களில் சிறிய அளவிலான பண்ணை வைப்பவர்கள், 4 காங்கிரீஜ் மாடுகளை வளர்த்தால், அவற்றுடன் ஒரு காளை மாட்டையும் வளர்ப்பது நல்லது. பால் விற்பனை செய்யும் தொழில் நுட்பத்தை கற்றால் போதும், இரட்டிப்பு வருவாய் ஈட்டலாம். மேலும் பால் அதிகமான உள்ள காலங்களில் மதிப்புக் கூட்டுப் பொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்யலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories