உடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை

உடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை

கறவை மாடுகள் உடல் இயக்க நிலை மாறும் சமயம் சிறப்புத் தீவன மேலாண்மை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். மாடுகளில் பால்கரம், மடிவீக்கம், கன்று ஈன்று பின்பு சினைக்கு வருவதில் தாமதம், கீடோசிஸ் நஞ்சுக்கொடி விழாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மாடுகள் உடல் இயக்க நிலைமாறும் தருணம் சரியான தீவன மேலாண்மை செய்யப்படாததும் ஒரு முக்கியக் காரணமாகும். நிலைமாறும் மாடுகளுக்கு சிறப்பு தீவன மேலாண்மை செய்யும் முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

உடல் இயக்க நிலை மாற்றம்

கறவை மாடுகள் கன்று ஈன்ற 2 – 3 வாரங்கள் முதல் கன்று ஈன்ற பின் 2 – 3 வாரங்கள் வரையிலான சமயத்தில் அவற்றின் உடல் இயக்கத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிறை சினைப் பருவம் முடிவடையும் நிலையிலிருந்து கன்று ஈனும் நிலைக்கு அவை மாறுகின்றன. இவ்விதம் பல நிலைகளுக்கு ஏற்ப  அவற்றின் உடல் இயக்க நிலை மாறுகின்றது. இந்த உடல் இயக்க நிலை மாறும் காலகட்டத்தில் அவற்றிற்கு சிறப்புத் தீவன மேலாண்மை செய்வது மிக மிக அவசியம். இச்சமயத்தில் கறவை மாடுகள் ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தும் விதம் வளர்சிதை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் மாறுதல்கள் கறவை மாடுகளின் உற்பத்தித் திறனையும் பெருமளவு பாதிக்கும். இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. உடல் இயக்க நிலை மாறும் காலங்களில் மாடுகள் உட்கொள்ளும் தீவன அளவில் பெருத்த மாற்றம் ஏற்படும்.

கன்று ஈனுவதற்கு முன்பு தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும்.

கன்று ஈனுவதற்கு முன்பு உடல் இயக்க நிலைமாறும் மாடுகள் உட்கொள்ளும் மொத்தத் தீவனத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். மாடுகளில் பால் வற்றும் சமயம் அவை உடல் எடையில் ஏறத்தாழ 2.0 – 3.0 விழுக்காடாகவும் உலர் நிலை தீவனம் உட்கொண்டிருந்தால் கன்று ஈன 8 – 10  நாட்கள் முன்பிருந்து (நிலை மாறும் காலகட்டத்தில்) 1.5 விழுக்காடு அளவிற்கு மிக அதிவேகத்தில் இது குறைந்து விடும்.

கன்று ஈன்றவுடன் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்

கன்று ஈன்றவுடன் மாடுகள் உட்கொள்ளும் மொத்தத் தீவன அளவு மிக வேகமாக ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ 2.5 கிலோ அளவு வரை அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு வேகம் முதல் ஈற்றில் கன்று ஈன்ற மாடுகளில் அதிகமாகவும் பல ஈற்றுகளில் கன்று ஈன்ற மாடுகளில் சற்று குறைவாகவும் இருக்கும். நன்கு தீவனப் பராமரிப்பு செய்யப்படும் மாடுகளில் கன்று ஈன்ற 2 வாரத்தில் அதன் தீவனம் உட்கொள்ளும் அளவு 80 – 90 விழுக்காடு வரை அதிகரிக்க வேண்டும்.

ஊட்டச்சத்துத் தேவை அதிகரிக்கும்

உடல் இயக்க மாற்றம் ஏற்படும் காலங்களில் கன்று ஈனுவதற்கு முன்பும் பின்பும் அவற்றின் ஊட்டசத்துத் தேவையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். கன்று ஈன்று 2 -3 வாரங்களில் கர்ப்பப்பையில் உள்ள கன்றின் வளர்ச்சி மற்றும் அதைச் சுற்றி உள்ள நஞ்சுக்கொடியின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இதனால் அவற்றின் ஊட்டச்சத்துத் தேவையும் அதிகரிக்கும். இதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு சினை மாட்டிற்கு வளர்சிதை மாற்றப் புரதச்சத்து சுமார் 360 கிராமும் 3.5 நிகர எரிசத்தும் தேவைப்படுகின்றன.

உடல் கொழுப்பு சத்து குறையும்

கன்று ஈனுவதற்கு முன்பு நிலைமாறும் மாடுகளின் கர்ப்பப்பையில் கன்று மற்றும் கன்றைச் சுற்றியுள்ள நஞ்சுக்கொடி போன்றவை வேகமாக வளரவும் பால் மடி பால் சுரப்பை ஆரம்பிக்கவும் பல்வேறு கனநீர் மாற்றங்கள் மாடுகளின் உடலில் ஏற்பட்டு மாடுகளில் பசியின் அளவு குறையும் இதனால் மாடுகளின் உடலில் ஏற்கனவே சேமிப்பாகப் படிந்திருக்கும் கொழுப்பு சத்து கரைந்து இரத்தத்தில் கலந்து மாடுகளின் எரிசத்து தேவைக்கு பயன்படுத்தப்படும்.

அமிலத் தன்மை ஏற்படும்

பொதுவாகவே பால் வற்றிய மாடுகள் மேய்ச்சல் மூலமே பராமரிக்கப்பட்டு நார்ச்சத்து மிக்க வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை உட்கொள்கின்றன. எனவே அவற்றின் வயிற்றில் நார்ச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிர்கள் பெருகி நார்ச்சத்தை செரிக்கும். இந்த மாடுகள் சினைப்பட்டு கன்று ஈனும் காலம் நெருங்க நெருங்க விவசாயிகள் கலப்புத் தீவனம் அளிக்க முற்படுகின்றனர். இதனால் நார்ச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்த மாடுகளின் முதல் வயிற்று சூழலானது கரையும் மாவுச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்ததாக உடனடியாக மாற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மையை ஏற்படுத்தும் லேக்டிக் அமிலம் உற்பத்தியாகும். முதலில் இந்த அமிலம் மிகச் சிறிய அளவிலும் பின்பு இந்த அமிலத்தை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் லேக்டிக் அமில உற்பத்தி கணிசமான அளவில் உயரும். இதனால் மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மை ஏற்பட்டுப் பல பிரச்சனைகளும் உருவாகும்.

தாதுச்சத்து பிரச்சனை ஏற்படும்

உடல் இயக்க நிலை மாற்றம் ஏற்படும் மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தில் சுண்ணாம்பு சத்து மணிச் சத்து சாம்பல் மற்றும் மெக்னீசியம் சத்துகளின் தேவை மாடுகளின் இயல்பான தேவையில் இருந்து மாறுபடுகிறது.

உடல் நலப் பாதிப்பு

உடல் இயக்க நிலைமாறும் பருவத்தில் மாடுகளில் கீழ்க்காணும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.

  1. எரிசத்துப் பிரச்சனைகளால் இரத்தத்தில் கீட்டோன் செறிவு நிலை மற்றும் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் ஏற்படும்.
  2. தாதுச் சத்து பிரச்சனைகளால் நஞ்சுக்கொடி விழாமை பால்சுரும் மடிவீக்கம் போன்றவை ஏற்படும்.
  3. நோய் எதிர்ப்பு சத்து குறைப்பாட்டால் மடி நோய் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

இந்த மூன்று நலக் குறைபாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும். உதாரணமாகச் சுண்ணாம்புச் சத்து குறைப்பாட்டால் பால் சுரம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து உடல் திசுக்கள் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் கன்று ஈன்ற மாடுகளின் நான்காவது வயிறான செரிமான இரைப்பை இடம்பெயரும் நிலையும் ஏற்படும். நஞ்சுக்கொடி விழாத பிரச்சனை சுமார் 11 – 18  விழுக்காடு மாடுகளில் காணப்படுகிறது.

முதிர்ந்த வயதுடைய மாடுகள் இளம் மாடுகளை விட நஞ்சுக்கொடி விழாமை பால்சுரம் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிப்படைகின்றன.

சினைக்கு வருவதில் தாமதம்

நிலைமாறும் மாடுகளில் எரிசத்துக் பற்றாக்குறை ஏற்பட்டால் கன்று ஈனுவதற்கும் முதல் முட்டை உருவாவதற்கும் உள்ள இடைவெளி அதிகமாகும். இதனால் கன்று ஈன்ற பின்பு முதல் முறையாக மாடுகள் சினைக்கு வருவதில் தாமதம் ஏற்படும்.

நிலைமாறும் மாடுகளில் கன்று ஈனுவதற்கு 2-3 வாரம் முதற்கொண்டு கருவில் வளரும் கன்றுக்கும் கன்று ஈன்ற பின்பு ஏற்படும் பால் சுரப்பிற்கும் அதிக அளவில் குளுக்கோஸ் தேவைப்படுகின்றது. கர்ப்பப்பையில் வளரும் கன்று தன் குளுக்கோஸ் தேவையில் சுமார் 46 விழுக்காட்டை தாயின் இரத்தத்தின் மூலம் பெறுகின்றது. கன்று ஈன்ற பின் தாயின் ஒவ்வொரு 10 லிட்டர் பால் சுரப்பிற்கும் நாள்தோறும் சுமார் 600 – 650 கிராம் குளுக்கோஸ் தேவைப்படுகின்றது. எனவே நிலைமாறும் காலங்களில் குறிப்பாக மாடுகளின் சினைப்பருவம் முடியும் சமயமும் பால் சுரப்பு ஆரம்பிக்கும் சமயமும் மாடுகளின் கல்லீரல் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி உடலின் பிற உள்ளுறுப்புகளின் குளுக்கோஸ் தேவையை சிக்கன நடவடிக்கைக்காக மிகவும் குறைக்க வேண்டும். இவ்விதமாக கன்று ஈன்ற பின் மாடுகள் சினைக்கு வரும் கால அளவு நீண்டு விடும்.

ஆசிரியர் : மு. முருகன் பெ. பாலச்சந்திரன்

ஆதாரம் : கால்நடைக்கதிர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories