கால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள்

கால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள்

மடிநோய் (அனைத்து வகை)

தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை – 250 கிராம், மஞ்சள் 50 கிராம் (கிழங்கு (அ) பொடி), கால்சியம் ஹைட்ராக்சைடு (சுண்ணாம்பு) – 15 கிராம், எலுமிச்சை -2, வெல்லம் – 100 கிராம்

தயாரிப்பு முறை:

முதல் மூன்று பொருட்களையும் சேர்த்து சிவப்பு பசையாக அரைக்கவும். இரண்டு எலுமிச்சையையும் இரண்டாக நறுக்கவும்

பயன்படுத்தும் முறை:

  • அரைத்த கலவையில் ஒரு கையளவு எடுத்து, அதனுடன் 150-200 மிலி தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்
  • மடியை கழுவி சுத்தம் செய்து, மடி முழுவதும் கலவையை தடவவும்
  • மீண்டும் இதே முறையை ஒரு நாளுக்கு 10 தடவை, 5 நாட்களுக்கு செய்ய வேண்டும் (தினமும் இரண்டு எலுமிச்சையை ஒரு நாளுக்கு இருமுறை 3 நாட்கள் கொடுக்கவும்)

குறிப்பு: பாலில் இரத்தம் வந்தால், மேற்கண்டவற்றுடன், இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வெல்லம் இரண்டையும் பசையாக அரைத்து, வாய் வழியாக ஒரு நாளுக்கு இரண்டுமுறை, நிலைமை சீரடையும் வரை கொடுக்கவும்

மடிக்காம்பு அடைப்பு

தேவையான பொருட்கள்: புதிதாக பறித்த சுத்தமான வேப்ப இலை காம்பு – 1, மஞ்சள் பொடி, வெண்ணெய் (அ) நெய்

தயாரிப்பு முறை: மடிக்காம்பின் நீளத்திற்கு ஏற்ப, வேப்ப இலை காம்பை தேவையான நீளத்திற்கு கிள்ளி எடுத்துக் கொள்ளவும். மஞ்சள்பொடி & வெண்ணெய் / நெய் கலவையை வேப்ப இலைகாம்பு முழுவதும் நன்றாக பூசவும்.

பயன்படுத்தும் முறை: பாதிக்கப்பட்ட மடிக்காம்புக்குள் வேப்ப இலை காம்பை கடிகார எதிர் திசையில் நுழைக்கவும். ஒவ்வொரு முறை பால் கறந்த பிறகும் புதிய வேப்ப இலைக்காம்பை பயன்படுத்தவும்

சினை மாட்டில் மடியில் நீர் கோர்த்தல்

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் (அ) கடுகு எண்ணெய் -200 மி.லி; மஞ்சள்பொடி – ஒரு கையளவு; பூண்டு – 2 பல்.

தயாரிப்பு முறை: எண்ணெயை சூடு செய்து, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். நன்கு கலக்கி, வாசனை வரும்போது, அடுப்பில் இருந்து இறக்கவும் (கொதிக்க வைக்கத் தேவை இல்லை). ஆற விடவும்

பயன்படுத்தும் முறை: மடியின் நீர் கோர்த்த பகுதி மற்றும் மடியின் மேல் வட்ட வடிவில் அழுத்தி தடவவும். ஒரு நாளுக்கு 4 முறை 3 நாட்களுக்கு தடவவேண்டும்.

குறிப்பு: இந்த கலவையை உபயோகிக்கும் முன் மடி வீக்க நோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நஞ்சுக்கொடிபோடாமல் இருத்தல்

தேவையான பொருட்கள்: வெள்ளை முள்ளங்கி – 1 முழுகிழங்கு, வெண்டைக்காய் – 1.5 கிலோ, வெல்லம் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

தயாரிப்பு முறை: வெண்டைக்காய்களை இரண்டாக நறுக்கவும்.

பயன்படுத்தும் முறை:

  • கன்று போட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு முழு வெள்ளை முள்ளங்கியை உண்பதற்கு கொடுக்கவும்.
  • கன்று போட்ட 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி வெளியேறாமல் இருந்தால் 1.5 கிலோ வெண்டைக்காயை வெல்லம் மற்றும் உப்புடன் உண்பதற்கு கொடுக்கவும்.
  • கன்று போட்டு 12 மணி நேரம் கழித்தும், நஞ்சுக்கொடி வெளியேறாமல் இருந்தால், அடிப்பாகத்திற்கு அருகில் ஒரு முடிச்சு போட்டு, அதன் கீழ் இரண்டு இன்ச் விட்டு வெட்டவும். முடிச்சு உள் சென்று விடும்
  • உள்ளே தங்கி இருக்கும் நஞ்சுக்கொடியை கையால் வெளியேற்ற முயலக் கூடாது
  • ஒரு முழு முள்ளங்கியை ஒரு வாரத்திற்கு ஒரு முறை நான்கு வாரங்களுக்கு கொடுக்கவும்

பருவத்துக்கு வந்தும் மாடுகள் சினைபிடிக்காமை

தேவையான பொருட்கள்: முள்ளங்கி, சோற்றுக்கற்றாழை, பிரண்டை, முருங்கை, கருவேப்பிலை, உப்பு, வெல்லம், மஞ்சள்

பயன்படுத்தும் முறை:

பருவத்துக்கு வந்த முதல் (அ) இரண்டாவது நாளில் சிகிச்சையை தொடங்கவும். ஒரு நாளுக்கு ஒருமுறை வெல்லம் மற்றும் உப்புடன் புதிதாகப் பறித்த கீழ்க்கண்டவற்றை கீழே கொடுத்துள்ளவரிசைப்படிவாய் வழியாக கொடுக்கவும்

(a) தினமும் 1 வெள்ளை முள்ளங்கி 5 நாட்களுக்கு

(b) தினமும் 1 சோற்றுக்கற்றாழை மடல் 4 நாட்களுக்கு

(c) 4 கையளவு முருங்கையிலை 4 நாட்களுக்கு

(d) 4 கையளவு பிரண்டை தண்டு 4 நாட்களுக்கு

(e) 4 கையளவு கருவேப்பிலை மஞ்சளுடன் சேர்த்து 4 நாட்களுக்கு

கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்

தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை கூழ் ஒரு முழு மடல் / இலையில் இருந்து, மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, தொட்டாற்சிணுங்கி இலை – 2 கையளவு

தயாரிப்பு முறை: ஒரு முழு இலையில் இருந்து கூழை எடுக்கவும். கூழின் பிசுபிசுப்புத் தன்மை குறையும் வரை பல முறை கழுவவும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து அளவு பாதியாக ஆகும் வரை கொதிக்க வைத்து ஆற விடவும். தொட்டாற்சிணுங்கி இலையை விழுதாக அரைத்து எடுக்கவும்.

பயன்படுத்தும் முறை: வெளித் தள்ளப்பட்ட கருப்பை திரளை சுத்தம் செய்யவும். வெளித்தள்ளப்பட்ட கருப்பை திரள் மீது கூழை தெளிக்கவும். கூழ் உலர்ந்தவுடன், தொட்டாற்சிணுங்கி இலை அரைத்த விழுதை தடவவும். நிலைமை குணமாகும் வரை சிகிச்சையை தொடரவும்

கோமாரி நோய் வாய்ப்புண்

தேவையான பொருட்கள்: சீரகம் – 10 கிராம், வெந்தயம் – 10 கிராம், மிளகு – 10 கிராம், மஞ்சள் பொடி -10 கிராம், பூண்டு – 4 பல், தேங்காய்-1, வெல்லம் – 120 கிராம்

தயாரிப்பு முறை: சீரகம், வெந்தயம் மற்றும் மிளகை தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும். ஒரு முழு தேங்காயை துருவி, அரைத்த கலவையுடன் சேர்த்து கையால் கலக்கவும். ஒவ்வொரு முறையும் புதிதாய் தயாரித்து பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை: வாய், நாக்கு மற்றும் கடைவாயின் உள்புறம் தடவவும். தயாரித்த கலவையை ஒரு நாளுக்கு மூன்று முறை 3-5 நாட்களுக்கு கொடுக்கவும்

கோமாரி நோய் குளம்பு புண்காயம்

தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலை – ஒரு கையளவு, பூண்டு – 10 பல், வேப்ப இலை – ஒரு கையளவு, தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் – 250 மிலி, மஞ்சள் பொடி – 20 கிராம், மருதாணி இலை ஒரு கையளவு, துளசி இலை – ஒரு கையளவு

தயாரிப்பு முறை: அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும். அரைத்த கலவையுடன் 250 மிலி தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் கலந்து கொதிக்க வைத்து ஆற வைக்கவும்

பயன்படுத்தும் முறை: புண்ணை சுத்தப்படுத்தி நேரடியாக தடவவும் (அ) பேன்டேஜ் துணியில் தடவி கட்டுப் போடவும். புண்களில் புழுக்கள் இருந்தால், முதல் நாள் மட்டும், சிறிது தேங்காய் எண்ணெயில் ஒரு கற்பூரத்தை சேர்த்து அல்லது சீதாப்பழ இலை அரைத்த விழுதை போடவும்

காய்ச்சல்

தேவையான பொருட்கள்: பூண்டு – 2 பல், கொத்தமல்லி விதை – 10 கிராம், சீரகம் – 10 கிராம், துளசி – 1 கையளவு, பிரியாணி இலை பொடி – 10 கிராம், மிளகு – 10 கிராம், வெற்றிலை – 5, சின்னவெங்காயம் – 2, மஞ்சள்பொடி – 10 கிராம், நிலவேம்பு இலை பொடி – 20 கிராம், திருநீர்பச்சை இலை – 1 கையளவு, வேப்பிலை – 1 கையளவு, வெல்லம் – 100 கிராம்

தயாரிப்பு முறை: சீரகம், மிளகு மற்றும் கொத்தமல்லி விதையை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு பசையாக அரைத்துக் கொள்ளவும்

பயன்படுத்தும் முறை: அரைத்த கலவையை சிறிய உருண்டைகளாக பிரித்து வாய் வழியாக காலை மற்றும் மாலையில் கொடுக்கவும்.

கழிச்சல் / வயிற்றுப்போக்கு

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 10 கிராம், வெங்காயம் – 1, பூண்டு – 1 பல், சீரகம் – 10 கிராம், மஞ்சள் – 10 கிராம், கருவேப்பிலை – 1 கையளவு, கசகசா – 5 கிராம், மிளகு – 10 கிராம், வெல்லம் – 100 கிராம், பெருங்காயம் – 5 கிராம்

தயாரிப்பு முறை: சீரகம், பெருங்காயம், கசகசா மற்றும் வெந்தயத்தை வாசனை வரும் வரை வரலாக (எண்ணெய் இல்லாமல்) வறுக்கவும். வறுத்தவற்றை, ஆற வைத்து பொடி செய்யவும். பொடியை மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பயன்படுத்தும் முறை: அரைத்த விழுதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சிறிய பாகங்களாக பிரித்து, ஒரு நாளைக்கு ஒரு முறை 1 – 3 நாட்களுக்கு குணமாகும் வரை கொடுக்கவும்

வயிறு உப்பிசம்

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம், பூண்டு – 10 பல், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – 10 கிராம், மஞ்சள்பொடி – 10 கிராம், வெல்லம் – 100 கிராம், மிளகு – 10 கிராம், வெற்றிலை 10, இஞ்சி – 100 கிராம்

தயாரிப்பு முறை: மிளகு மற்றும் சீரகத்தை 30 நிமிடம் ஊறவைக்கவும். மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்

பயன்படுத்தும் முறை: அரைத்த விழுதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உப்புடன் சேர்த்து சிறிய பாகங்களாக பிரித்து, ஒருநாளைக்கு 3-4 முறை மூன்று நாட்களுக்கு கொடுக்கவும்

குடல்புழுக்கள்

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1, பூண்டு – 5 பல், கடுகு 10 கிராம், வேப்ப இலை – 1 கையளவு, சீரகம் – 10 கிராம், பாகல்காய் – 50 கிராம், மஞ்சள் – 5 கிராம், மிளகு – 5 கிராம், வாழைத்தண்டு – 100 கிராம், தும்பை – ஒருகையளவு, வெல்லம் – 100 கிராம்

தயாரிப்பு முறை: மிளகு, சீரகம் மற்றும் கடுகை 30 நிமிடம் ஊறவைக்கவும். மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்

பயன்படுத்தும் முறை: அரைத்த விழுதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உப்புடன் சேர்த்து சிறிய பாகங்களாக பிரித்து, ஒரு நாளைக்கு ஒருமுறை மூன்று நாட்களுக்கு கொடுக்கவும்

உண்ணிவெளிப்புற ஒட்டுண்ணி

தேவையான பொருட்கள்: பூண்டு – 10 பல், வேப்பிலை – 1 கையளவு, வேப்பம்பழம் – 1 கையளவு, வசம்பு – 10 கிராம், மஞ்சள் பொடி – 20 கிராம், உண்ணி செடி / அரிசிமலர் – 1 கையளவு, துளசி இலை – 1 கையளவு

தயாரிப்பு முறை: அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும். 1 லிட்டர் சுத்தமான தண்ணீர் சேர்க்கவும். மஸ்லின் துணி அல்லது வடிகட்டி கொண்டு வடிக்கவும். தெளிப்பானுடன் இணைந்த பாட்டிலில் ஊற்றவும்

பயன்படுத்தும் முறை: மாட்டின் உடல் முழுவதும் தெளிக்கவும். மாட்டுக் கொட்டகையில் உள்ள இடுக்குகள் மற்றும் பிளவுகள் மேல் தெளிக்கவும்.  தெளிப்பதற்கு பதில், வடிகட்டிய நீரில் துணியை நனைத்து கூட மாட்டின் உடல் மீது தடவலாம். சிகிச்சையை, வாரம் ஒரு முறை – குணமாகும் வரை தொடர வேண்டும். இந்த சிகிச்சையை வெயில் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

அம்மை / மருகு வெடிப்பு

தேவையான பொருட்கள் : பூண்டு – 5 பல், மஞ்சள் பொடி – 10 கிராம், சீரகம் – 15 கிராம், திருநீர்பச்சை இலை – ஒரு கையளவு, வேப்பிலை ஒரு கையளவு, வெண்ணெய் (உகந்தது) நெய் – 50 கிராம்

தயாரிப்பு முறை : சீரகத்தை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும். வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பயன்படுத்தும் முறை: பாதிக்கப்பட்ட பாகங்களில் பாதிப்பு சரியாகும் வரை, முடிந்த வரை பல முறை தடவவும். தோலின் மேற்பரப்பை உலர்த்திய பிறகு தடவவும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories