பிறந்த கன்றுகளின் உடனடி பராமரிப்பு

பிறந்த கன்றுகளின் உடனடி பராமரிப்பு

அறிமுகம்

“இன்றைய கன்று நாளைய பசு” என்பது பழமொழி. கன்றுகளின் வளர்ச்சியும் கவனிப்பும் அவை தாய் வயிற்றில் இருக்கும் போதே ஆரம்பமாகின்றன. சினை மாடுகளை நன்கு பராமரிக்கவிட்டால் பிறக்கும் கன்றுகளின் எடை குறைந்து, உடல் மெலிந்து, வலுவற்றதாகவும் காணப்படும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்துவிடுகிறது. ஆகவே சினை மாடுகளுக்கு 7 மாதம் முதல் அதன் உடல் நிலைக்கும் பால் உற்பத்திக்கு கலப்புத் தீவனத்துடன் 1 முதல் 1.5 கிலோ அதிகமாக கொடுக்க வேண்டும். சினைக்காலத்தில் 15 முதல் 20 கிலோ பசுந்தீவனமும் 30 கிராம் தாது உப்பும் கொடுக்க வேண்டும். கன்று பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு சினை மாட்டினை கன்று ஈனும் கொட்டகைக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது கன்று ஈனுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் செய்ய வேண்டும். கன்று ஈனும் தருணத்தில் சினை மாடுகளை தனியாக தொழுவத்தில் கட்ட வேண்டும். மாட்டு தொழுவத்தில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றுக்கும் எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை

கன்று போட்டவுடன் தாய் பசு கன்றுகளை நக்கி சுத்தம் செய்துவிடும். அவ்வாறு செய்யாவிடில் ஈரமற்ற துணி அல்லது சணல்பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றுக்கு சீரான சுவாசம் கிடைக்க செய்ய வேண்டும். அல்லது வைக்கோலை சுருட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். கன்றுகளுக்கு மூச்சுத்திணறும் போது மூக்கில் உள்ள சளியை எடுத்துவிட்டு மார்பகத்தை சற்று அழுத்தினால் மூச்சு திரும்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பிடித்துவிடும். பின்பு கன்றின் தொப்புள் கொடியை வயிற்றிலிருந்து 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இருக்கமாக கட்ட வேண்டும். பின்பு 1 செ.மீ விட்டு சுத்தமான கத்திரிக் கோல் கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் புண் ஆகாமல் இருக்கவும், கொசு, ஈ போன்றவை தொல்லை கொடுக்காமல் இருக்க அந்த இடத்தில் அயோடின் டிஞ்சர், மஞ்சள் தூள், சேவிங் லோசன், டெட்டால் போன்றவை தடவிவிடலாம். இல்லையென்றால் இதன் மூலம் நுண்கிருமிகள் உள்ளே சென்று கன்றுகளின் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும்.

கன்று தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அறுந்த முடியவில்லை எனில் அதை தூக்கிவிட்டு அருந்த உதவி செய்ய வேண்டும். கன்று பிறந்த 30-45 நிமிடத்தில் தாய்ப்பால் குடிக்க செய்ய வேண்டும். காலம் கடத்தினால் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்புப் பொருள் வயிற்றிலிருந்து உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். ஆகவே, உடனடியாக சீம்பால் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பின்பு 6 மணி நேரத்திற்கு ஒரு முறை சீம்பால் குடிக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது பசு மாட்டின் கர்பப்பை சுருங்கி, நஞ்சுக் கொடி சீக்கரம் வெளியேறுவதற்கு உதவியாக அமையும். பிறந்த கன்றுக்கு சீம்பாலை கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் பாலில் உள்ள சத்துக்களும் கிடைக்கும். கன்று குட்டின் எடையானது தாயின் எடையிலிருந்து 10 % இருக்க வேண்டடும். கன்றின் எடையை அளவிட வேண்டும்.   தாய் மாட்டின் பால் காம்பினை நீரினால் நன்கு சுத்தம் செய்த பின்பு கன்றுக்கு பால் குடிக்க விட வேண்டும். பசு மாட்டில் கன்று ஈனும் போது வெளியே வரும் திரவங்களை கொட்டகைலிருந்து உடனே சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் இதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படும்.

சீம்பாலின் முக்கியத்துவம்

  • சீம்பாலில் அதிக அளவு இம்யுனோகுளோபின் ஏ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சீம்பால் செரித்தலை துரிதப்படுத்துகிறது.
  • கன்று தனது முதல் சாணத்தை வெளியேற்ற உதவுகிறது.
  • சீம்பாலில் 3 மடங்கு புரதமும், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளது. சதாரண பாலை விட 5-15 மடங்கு வைட்டடமின் ஏ சீம்பாலில் உள்ளது. இது பசு மாட்டிற்கு சினை பருவத்தில் அளித்த உணவை வைத்து மாறுபடும்.
  • சீம்பாலில் ரிபோஃபிளோவின், கிளோரின் தையமின் மற்றும் பேன்டோதெனிக் அமிலம் ஆகியவையும் காணப்படுகிறது. இது கன்று வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

சீம்பால் அளிக்க வேண்டிய அளவு

கன்று பிறந்தவுடன் முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், அடுத்த 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் குடிக்க விட வேண்டும். அதாவது கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும். கன்று ஒன்றுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2.5 கிலோ சீம்பால் கொடுக்க வேண்டும். இதை 3 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய் பசு இறந்து விட்டாலோ அல்லது மடிவீக்கம் போன்ற நோய்கள் ஏற்பட்டாலோ கன்றுகளுக்கு சீம்பால் கிடைக்காத நிலையில் பிற மாட்டுக்களின் சீம்பாலை கொடுக்கலாம். அப்படியும் கிடைக்க வில்லை எனில் கீழ்கண்ட பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்க வேண்டும்.

முட்டை   – 1 (55-60 கிராம்)

தண்ணீர்   – 300 மிலி

விளக்கெண்ணெய் – 1 அல்லது 2 தேக்கரண்டி

பால் – 500 கிராம்

வைட்ட மீன் ஏ – 10,000 IU

கன்றுகளின் எடை மற்றும் தீவன மேலாண்மை

கன்றுகளின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு பால் கொடுக்க வேண்டும். கன்றுகளின் எடைக்கு ஏற்றாற்போல் தேவையான பாலை 1 முதல் 10 நாட்களுக்குத் தினம் 3 முறை வீதம், பின்பு 2 முறையும் கொடுக்க வேண்டும். கொடுக்கும் போது கொஞ்சம் வெதுவெதுப்பாக (37 டிகிரி செல்சியஸ்) கொடுத்தல் அவசியம். கன்றுகள் பிறந்த போது இருந்த எடையைப்போல் 2 மாதங்களில் இரு மடங்காகவும், 6 மாதங்களில் 4 மடங்காகவும் பெருக வேண்டும்.

மேற்குறிய வழி முறைகளை கன்று பிறந்தவுடன் கடைப்பிடிப்பதன் மூலம் கன்றினை ஆரோக்கியமான முறையில் வளர்த்திடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories