ஊறுகாய்ப்புல் தயாரிப்பு!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு!

ருவமழை பெய்யும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பசுந்தீவனம் ஓரளவில் கிடைக்கும். ஆனால், கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை. மேலும், பருவமழை பொய்த்து விட்டால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை இருக்கும். எனவே, பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் போது, அதைச் சரியான முறையில் பதப்படுத்தினால், கோடையில் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தலாம். அப்படிப் பதப்படுத்தப்படும் பசுந்தீவனம் ஊறுகாய்ப்புல் எனப்படும்.

ஊறுகாய்ப் புல்லின் நன்மைகள்

பல ஆண்டுகள் கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதால் தேவையான போது பயன்படுத்தலாம். உலர் தீவனத்தைச் சேமிக்கத் தேவைப்படும் இடத்தைவிட ஊறுகாய்ப்புல்லைச் சேமித்து வைக்கக் குறைவான இடமே தேவைப்படும். தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்து விடும். ஊறுகாய்ப்புல்லை மாடுகள் விரும்பி உண்ணும். தடித்த தண்டுள்ள தீவனப்பயிர்கள் மற்றும் முற்றிய தீவனப் பயிர்களை இம்முறையில் பதப்படுத்தினால் அவற்றை வீணாக்காமல் கால்நடைகள் உண்ணும். பசுந்தீவனத்தைச் சத்துகள் அழியாமல் பாதுகாக்கலாம். ஊறுகாய்ப் புல்லில், பசுந்தீவனத்தில் உள்ள சத்துகளில் 85% இருக்கும்.

சைலோ

ஊறுகாய்ப்புல்லை மூடிப் பாதுகாத்து வைக்கும் பதனக்குழி சைலோ எனப்படும். மேட்டுப் பகுதியில், மழைநீர் மற்றும் காற்றுப்புகா முறையில் இக்குழியை அமைக்க வேண்டும். இது மாட்டுக் கொட்டகையிலிருந்து குறைந்தது 6 அடி தொலைவில் இருக்க வேண்டும். உபரியாக உள்ள பசுந்தீவனத்தின் அளவு மற்றும் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து, பதனக்குழியின் வகை மற்றும் அளவு வேறுபடும். 1x1x1 மீட்டர் அளவுள்ள குழியில் 500 கிலோ தீவனத்தைப் பதப்படுத்தலாம்.

சைலோவின் வகைகள்

குழி சைலோ: தரையிலிருந்து நன்கு உயரமான அல்லது மேட்டுப்பாங்கான நீர் புகாத பகுதியில் குழி சைலோவை அமைக்கலாம். இதில் குழியின் ஆழம் அதன் விட்டத்தைப் போல் இரு மடங்கு இருக்க வேண்டும்.

சிமெண்ட் உறை சைலோ: சிமெண்ட் உறைகளைக் கொண்டு இந்தக் குழியை அமைக்கலாம். சிமெண்ட் வளையங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கித் தரை மட்டத்துக்கு மேலே குதிரைப் போல் அமைக்கலாம். இந்த வளையங்களில் உள்ள துளைகள், நீர் மற்றும் அமிலக் கரைசல் வெளியேற உதவியாக இருக்கும்.

குதிர் சைலோ: மண் குதிர்களைப் பயன்படுத்திக் குதிர் சைலோவை அமைக்கலாம். வீடுகளில் தானியத்தைச் சேமிக்க உதவும் மண் குதிர்கள் மூலம் இந்த சைலோ அமைக்கப்படும். குதிர்களில் உள்ள நுண்ணிய துளைகளை வெளிப்புறத்தில் சாணம் அல்லது களிமண்ணால் மெழுகிப் பயன்படுத்தலாம்.

பாலித்தீன் பை சைலோ: சுமார் 90 செ.மீ. அகலம், 1 மீட்டர் உயரம் மற்றும் 600 கேஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளை சைலோவாகப் பயன்படுத்தலாம். இதன் கொள்ளளவு சுமார் 12.5 கிலோ ஆகும். பாலித்தீன் உரப் பைகளையும் இதற்காகப் பயன்படுத்தலாம். கரும்புத்தோகை, கம்பு, மக்காச்சோளம், சோளம், கோ-3, கோ-4 போன்றவை ஊறுகாய்ப்புல் தயாரிக்க ஏற்றவையாகும்.

அறுவடைப் பருவம்

ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்க உதவும் வீரிய ஒட்டுப்புல் வகைகளைப் பூக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். பயறுவகைத் தீவனங்களை, 25-30% பூக்கும் நிலையிலும், சோளம், கம்பை, பால் பிடிக்கும் போதும், மக்காச்சோளத்தை, பால் பிடித்த பிறகும் அறுவடை செய்ய வேண்டும்.

செய்முறை

முதலில் பசுந்தீவனத்தை 5-6 மணி நேரம் நிழலில் உலர்த்தி, ஈரப்பதத்தை 60% அளவில் குறைத்து அப்படியே பயன்படுத்தலாம். அல்லது துண்டுகளாக நறுக்கியும் பயன்படுத்தலாம். பசுந்தீவனத்தை 2-3 அங்குலத் துண்டுகளாக நறுக்கிப் பயன்படுத்துவது நல்லது. ஒரு டன் பசுந்தீவனத்துக்கு 1 கிலோ யூரியா, 2 கிலோ தாதுப்பு, 1 கிலோ சாதாரண உப்பு, 1 லிட்டர் வே, அதாவது, பாலைக் காய்ச்சி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, கொதிக்கும் போது மேலே மிதக்கும் திரவம் போன்றவற்றை 20 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு சதச் சுண்ணாம்பையும் இக்கரைசலில் சேர்க்கலாம். அல்லது  ஒரு லிட்டர் மொலாஸஸை மூன்று லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். நறுக்கிய பசுந்தீவனத்தை ஒரு அடி உயரத்துக்கு அடுக்க வேண்டும். பிறகு தீவனத்தை நன்கு அழுத்தி இடையிலுள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். பிறகு மேற்கண்ட கரைசலைப் பசுந்தீவனத்தில் தெளிக்க வேண்டும். மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்கி இதே போன்று தெளிக்க வேண்டும். தீவனத்தை, பதனக்குழியின் மேல் மட்டத்தை விட 3-5 அடி உயரம் வரை நிரப்பலாம்.

அதன் மேற்பகுதியில் காற்று மற்றும் நீர் புகாத வகையில் பாலித்தீன் பையால் மூடி, அதன் மீது வைக்கோல் மற்றும் ஈர மண்ணைப் பூசி மூட வேண்டும். இப்படிச் செய்தால் 50-60 நாட்களில் ஊறுகாய்ப்புல் உருவாகி விடும். சைலோவை ஓர் ஓரத்தில் சிறியளவில் திறக்க வேண்டும். தரமான புல் பச்சையாக ஈரப்பதம் கலந்து நறுமணத்துடனும் காணப்படும். பூசணத்தால் பாதிக்கப்பட்டு நாற்றமடிக்கும் புல்லைப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு நாளைக்குத் தேவையான ஊறுகாய்ப்புல்லை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் குழியை அடைத்துவிட வேண்டும். பதனக்குழியைத் திறந்த பின், அதிலுள்ள புல்லை ஒரு மாதத்தில் பயன்படுத்திவிட வேண்டும். இதை மாடுகளுக்குத் தினமும் கொடுக்கலாம். வளர்ந்த கன்றுக்கு 4-5 கிலோ, அளவிலும், கிடேரிக்கு 5-8 கிலோ, கறவை மாட்டுக்கு 15-20 கிலோ அளவில் தினமும் கொடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94887 09436.

முனைவர் ச.மனோகரன், உதவிப் பேராசிரியர், காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம், சத்தியமங்கலம், ஈரோடு – 638 402.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories