கால்நடைகளுக்கு இந்த தவறான தீவனமுறை பாதிப்பை ஏற்படுத்தும்?…

கறவை மாடுகளுக்கு நடைமுறையில் பின்பற்றப்படும் தவறான தீவன முறைகளை மாற்றி சரி செய்து கொள்வோம்.

பொதுவாக கறவை மாடுகள் வளர்ப்போர், கறவை மாடுகளுக்கு அதிக தீவனமும் மற்ற மாடுகளுக்கு (கன்று குட்டிகள் உட்பட) குறைந்த தீவனமும் கொடுத்து வருவது நடைமுறையில் காணப்படுகிறது.

பால் கொடுக்கும் மாடுகளுக்கு காட்டும் அக்கறை மற்ற மாடுகளுக்கும் கொடுக்க வேண்டும். இன்றைய கன்று நாளைய பசு என்பதை விவசாயிகள் மறந்து விடக்கூடாது.

கன்றுகுட்டிகளுக்கும் கிடேரிகளுக்கும் சரியான தீவனம் கொடுப்பதில்லை. கிராமங்களில் பொதுவாக, கடலை பிண்ணாக்கு, கோதுமை தவிடு, மரவள்ளி பொட்டு, கலவைத் ஹ்டீவனம், குச்சித் தீவனம் மற்றும் வைக்கோல் தீவனமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தீவனங்கள் பெரும்பாலும் கறவை மாடுகளுக்கு மட்டுமே அதிகமாகக் கொடுக்கப்பட்டு மற்ற மாடுகளுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்படுகிறது.

நியாய விலைக் கடை அரிசியை வடித்துக் கொடுப்பது:

தீவனச் செலவு அதிகமாக இருப்பதினால் தற்பொழுது கிராமங்களில் பெரும்பாலும் தீவனம் எனும் பெயரில் இலவசமாகக் கிடைக்கும் நியாய விலைக் கடை அரிசியை வடித்துக் கொடுப்பது பெருகி வருகிறது. இது சரியான தீவன முறை இல்லை.

இந்த வடித்த அரிசியை பெரும்பாலும் கிடேரிகளுக்கும், கன்று குட்டிகளுக்கும் ஒரு மாட்டுக்கு ஒரு படி என்ற அளவில் கொடுக்கின்றனர். இதனால் மாடுகளின் வளர்ச்சித் திறன் மிகவும் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வடித்த அரிசியை அதிக அளவு கொடுப்பதால் மாடுகளுக்கு வயிறு உப்புசம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது மாட்டின் ஜீரண சக்தி மற்றும் மாடுகளின் வயிற்றில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளையும் அழித்துவிடும். இதனால் மாட்டின் வயிறு பெரிய காற்றடைத்த பந்து போல காட்சி அளிக்கும். கழிச்சல் மிக அதிகமாக இருக்கும் சில சமயங்களில் மாடு இறக்கக் கூட நேரிடும்.

சமயல் அறைக் கழிவுகளை (கழனி தண்ணீர்) தீவனமாகக் கொடுப்பது:

வடித்த அரிசியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கஞ்சி நீர் மற்றும் சமையல் அறையில் காய் கழுவிய நீர், மீதமுள்ள குழம்பு, சாம்பார் மற்றும் இதர கழிவுகளை, அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் இருந்தும் பெற்று, அதை மாடுகளுக்கு நீர் சத்து அளிக்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டுஇருக்கின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கன்றுகுட்டிகள்தான். இத்திவனமுறை வயிறு உப்புசத்தை ஏற்படுத்துவதோடு கன்றுகள் இறக்கக்கூட காரணமாகும்.

உணவு விடுதிக் கழிவுகளைத் தீவனமாகக் கொடுப்பது:

விவசாயிகள், தீவனச் செலவைக் குறைக்க உணவு விடுதிகளில் இருந்து கிடைக்கும் காய்கறிக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளைச் சேர்த்து மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.

பொதுவாக இந்த முறை பன்றிகளுக்கு மட்டுமே பயன்படுத்த ஏற்றது. ஆனால், தற்பொழுது மேற்கண்ட கழிவுகளை மாடுகளுக்கும் கொடுக்கின்றனர். பசுக்களின் இரைப்பை பன்றிகளைப் போல் இல்லை என்பதை மாடுவளர்ப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.

உணவு விடுதிக் கழிவுகளில் இருக்கும் வெங்காயத் தோலை மாடுகள் அதிக அளவு உட்கொண்டால் விஷமாக மாறக்கூடும். வயிறு உப்புசம் முண்டாகும். கன்றுகுட்டி மற்றும் கிடேரிகளின் வளர்ச்சித் திறன் வெகுவாக பாதிக்கப்படும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories