மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் கால்நடைகள் பெரும்பாலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்க இந்த முறைகளைப் பற்றி இங்கு காணலாம்.
மழைக்காலத்தின் போது கால்நடைகளுக்கான குடிநீர் மாசுபடாமல் ,அதிக குளிர்ச்சியாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதேபோல் அதிக குளிர்ச்சியான நீரை பருகுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் மழை மற்றும் குளிர் காலங்களில் கால்நடைகளுக்கு தக்க செரிமான சக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியமாகும் .தரமான ஈரமில்லாத உலர் தீவனம் கொடுக்க வேண்டும். அதாவது வைக்கோலை உணவாக தரலாம்.
உலர் தீவனம் சேர்க்கும்போது அதிக வெப்பம் வெளியாவதால் கால்நடைகள் தங்கள் உடல் வெப்பநிலையை சரி செய்கிறது.
மழை சாரல் அடர் தீவனங்களை ஈரப்பதம் அதிகரித்து, பூஞ்சை தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீவனங்களை ஈரமில்லாத பகுதியில் வைத்து பாதுகாத்து வழங்க வேண்டும்.
அதேபோல் கால்நடைகள் உள்ள கொட்டகையில் மழைநீர் போகாதவாறு இருக்க வேண்டும். நீர் தேங்காத உயரமான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் அவசியம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கொட்டகையில் கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும்.
இயற்கை முறையை கிருமிநாசினி தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு ஒரு கிலோவும் வேகவைத்த சுண்ணாம்பு கல்லில் 10 லிட்டர் சுடுதண்ணீரில் போட்டு பிறகு நீர் தெளிந்தவுடன் அந்த சுண்ணாம்பு நீரில் ஒரு லிட்டர் எடுத்து அதில் 50 கிராம் மஞ்சள்தூள் கலந்து கொட்டகையின் தரைப் பகுதியில் தெளிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் ஈரம் மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக கன்றுகள் மற்றும் மாடுகளுக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மூட்டு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை கட்டுப்படுத்த மாடுகள் மற்றும் கன்றுகளை படுப்பதற்கு ஈரமில்லாத வைக்கோல் அல்லது சாக்குப் பையை படுக்கையாக இடலாம்.
பனியிலும் மழையிலும் நனைந்த ஈரமான புற்களில் மாடுகளை மேய்க்க கூடாது. ஈரமான புர்களில் மேய்வதால் வயிறு உப்புசம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிக அளவில் காணப்படும் எனவே வெளியில் வந்து ஈரமான புர்களில் உள்ள நீர் காய்ந்த பிறகே மேய்க்க வேண்டும்.
அதேபோல ஈரமான தரையில் நீண்ட நேரம் மேயும் கால்நடைகளுக்கும் கால் குளம்பில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .இதற்கு துளசி ஒரு கைப்பிடி, பூண்டு 4 பல்லு குப்பைமேனி ஒரு கைப்பிடி ,மஞ்சள் தூள் 10 கிராம் ஆகியவற்றை அரைத்து 100 மில்லி நல்லெண்ணெயில் வதக்கி குளிர்ந்த உடன் குளம்பில் தடவ வேண்டும்.
மேலும் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்பை கழுவி ஈரத்தை துடைத்து விட்டு பிறகு மருந்தை தடவ வேண்டும் .மழைக்காலத்தில்ஈ மற்றும் கொசு தொல்லைகளிலிருந்து விடுபட மாலை வேளையிலும் காலை வேளையிலும் புகை மூட்டம் போடலாம்.
இதற்கு பச்சை மற்றும் பழுத்த வேப்பிலை ,நொச்சி இலை, தும்பை இலை ஆகியவற்றை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.