கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக் குடிநீர் அவசியம். முட்டுகள் மற்றும் இதர உறுப்புகளின் வழவழப்புத் தன்மைக்குக் காரணம் நீர்தான். நொதிகள் மற்றும் வேதி மாற்றச் செயல்களுக்கு நீர் உதவுகிறது. உணவு செரித்த பிறகு கிடைக்கும் சத்துகள் குடல் மூலம் இரத்தத்தில் சேர்வதற்கு நீர் உதவுகிறது. இரத்தத்தின் பெரும்பகுதியும் நீர்தான். கால்நடைகளின் உடலில் நீர் 70% உள்ளது.

பாலில் 80% நீராகும். கால்நடைகள் உணவை நன்றாக அசை போட்டு விழுங்க நீர் அவசியம். ஓர் உயிரினம் தன் உடலிலுள்ள கொழுப்புச்சத்து முழுவதையும் இழந்தாலும் உயிர்வாழ முடியும். ஆனால், உடலிலுள்ள நீரில் 10% குறைந்தால் நன்கு செரிக்காது. 20% குறைந்தால் உயிரிழக்க நேரிடும்.

வாரக்கணக்கில் தீவனம் இல்லாமல் கோழிகள் வாழும். ஆனால், நீரில்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. பட்டினியாகக் கிடப்பதால் உடலிலுள்ள கொழுப்பு முழுவதும் கரைந்தாலும், 40% புரதம் குறைந்தாலும் கோழிகள் உயிருடன் இருக்கும். ஆனால், 20% நீர் உடலில் குறைந்தால் இறந்து போகும். கோழிகளின் நீர்ச்சத்தானது பெரும்பாலும் குடிநீர் மூலமே சரியாகிறது. ஒரு கோழி 50 கிராம் தீனியை உண்டால் 100 கிராம் நீரைக் குடிக்கும். கோடையில் இதன் அளவு இன்னும் கூடும். முட்டைக் கோழிகள் முட்டைகளை இட்டதும் அதிகளவில் நீரைக் குடிக்கும். இரவில் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும் மற்றும் விடிந்ததும் நிறைய நீரைக் குடிக்கும்.

கால்நடைகளுக்குக் குடிநீர்க் குறை இருக்கக் கூடாது. தொண்டை அடைப்பான், சப்பை நோய்க் கிருமிகள் நீர் மூலம் தான் பரவுகின்றன. எனவே, சுத்தமான நீரையே கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். கால்நடைகளின் குடிநீர்த் தேவைவானது, தீவனம், குடிநீர் மற்றும் திசுக்களின் ஆக்சிகரண விளைவால் சரி செய்யப்படுகிறது. குடிநீர் குறைந்தால், செரிப்பதில், சத்துகளைக் கிரகிப்பதில், கழிவுகளை வெளியேற்றுவதில் பாதிப்பு ஏற்படும். இந்நிலை பல நாட்களுக்குத் தொடர்ந்தால், இரத்தத்தின் திரவநிலை மாறும். இதனால், மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

பசுவுக்கும் எருமைக்கும் ஒரு நாளைக்கு 30 லிட்டர் குடிநீர் தேவை. இதுபோக, கறக்கும் ஒவ்வொரு அரைக்கிலோ பாலுக்கும் ஒரு லிட்டர் வீதம் கூடுதலாக நீர் தேவைப்படும். கோடையில் குடிநீரின் தேவை அதிகமாகும். வெளிவெப்பத்தைப் பொறுத்துக் குடிநீரின் தேவை மாறுபடும். கறவை மாடுகள் தங்களின் குடிநீரில் இருபங்கை பகலிலும், ஒரு பங்கை இரவிலும் எடுத்துக் கொள்ளும்.

குளிர் காலத்தில் நீர் குளிர்ச்சியாக இருப்பதால், கால்நடைகள் விரும்பிக் குடிக்காது. இந்நிலையைத் தவிர்க்க, குடிநீரைக் காய்ச்சி வெதுவெதுப்பாகத் தரலாம். கால்நடைகள் நீரைப் பருகும் போது இடையூறு செய்யக் கூடாது. தமக்குத் தேவையான நீரைக் குடித்து முடிக்கும் வரையில் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 73580 98090.

மரு.வி.இராஜேந்திரன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம் – 624 401, திண்டுக்கல் மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories