மல்லிகையில் மொட்டுப் புழுக்களை எப்படி கட்டுப்படுத்தலாம்?
மல்லிகை செடியின் அருகில் உள்ள பகுதிகளை கிளறிவிட்டு செடிக்கு 500 வேப்பம் புண்ணாக்கு உரமாக இடும்போது வேர்ப்பகுதியில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறி அல்லது விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் மூலிகை பூச்சி விரட்டியை தெளித்து மல்லிகை மொட்டு புழுவை கட்டுப்படுத்தலாம்.
பாரம்பரிய நெல்லை பாதுகாப்பதில் நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களின் போது தாக்குப் பிடித்து வளரும் இயல்புடைய பாரம்பரிய நெல் ரகங்களை அழிவிலிருந்து பாதுகாக்க மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நெல் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நாம் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நிலத்தினை எப்படியெல்லாம் இயற்கை முறையில் வளப்படுத்த லாம்?
இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டுமே நிலத்தினை வளமாக்க முடியும். அந்த வகையில் ஆடு மாடுகளை கொண்டு நிலத்தில் கிடை அமைப்பதன் மூலம் நிலம் வளமாக மாறும்.
ஊட்டமேற்றிய தொழு உரம் , பண்ணைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து நிலத்தில் இடலாம்.
இயற்கையாகவே நிலத்தில் மண்புழுக்களை அதிகப்படுத்துவதன் மூலமும் மண்புழு உரத்தை இடுவதன் மூலமும் நிலத்தினை வளப்படுத்தலாம்.
தென்னந் தோப்புகளில் மழை நீரை எவ்வாறு சேமிக்கலாம்?
தென்னைமர கழிவுகளான உரிமட்டை, மட்டை தூள், உமி, மரத்தூள் இலைகள், கரும்புச்சக்கை, சருகுகள் என கிடைக்கும் அனைத்துப் பண்ணனை கழிவுகளையும் மரங்களை சுற்றிலும் இரண்டு அடுக்குகளாக விட்டு மழை நீரை சேமிக்கலாம்.
மாடுகளுக்கு ஏற்படும் தொண்டை அடைப்பான் நோய்க்கு என்ன சிகிச்சை செய்யலாம்?
வேப்பிலை, அருகம்புல் ,கருநொச்சி இலை, துளசி ஆகிய ஒவ்வொன்றிலும் நூறு கிராம் அளவு எடுத்து வெள்ளாட்டு பாலுடன் கலந்து நன்றாக அரைத்து ஒரு முறை கொடுத்தால் தொண்டை அடைப்பு சரியாகிவிடும்.