மழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு :

மழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு :

 
1. கால்நடை வளர்ப்பு
2. யூரியா சத்தூட்ட வைக்கோல்
3. நன்மைகள்
4. அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்
 
கால்நடை வளர்ப்பு :
 
கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.
 
பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில் வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும்.
 
எனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.
 
பண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.
 
யூரியா சத்தூட்ட வைக்கோல் :
 
* அதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும்.
* இதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.
 
நன்மைகள் :
 
* யூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது.
 
* மழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.
 
* மழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.
 
* குறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும்.
 
* இத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும்.
 
* அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்
பால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும்.
 
* தீவனங்களின் மீது ஈரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும்.
 
* அடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.
 
* மழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும்.
 
ஆதாரம் : கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories