காளான் உற்பத்தியில் வெற்றி அடைந்த சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுதல்!

விவசாயத் துறையில் தடம் பதித்த விவசாயிகள் ஏராளம். பயிர்களை அடுத்து அனைவரும் ரசித்து உண்ணும் காளானுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. காளான் உற்பத்தியில் நிறைய பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், கலிங்கியம் என்ற கிராமத்தில் வசித்து வரும் சரவணன், கிருஷி ஜாக்ரன் நடத்தும் “Farmer The Brand” நிகழ்ச்சி மூலம், தனது காளான் உற்பத்தி மற்றும் விற்பனை அனுபவங்களை கூறினார்.

மாட்டுப் பண்ணை:
நான் ஒரு சிறு விவசாயி. ஒன்றரை ஏக்கரில் கரும்பு, வாழை மற்றும் நெற்பயிர்களை பயிரிட்டு வருகிறேன். ஆரம்ப காலகட்டத்தில், மதுரையில் மாட்டுப்பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தேன். கிட்டத்தட்ட 10 மாடுகள் வைத்திருந்தேன். தினமும் 25 லிட்டர் பால் விற்பனை செய்வேன். நான் மாடு வைத்திருந்த காலத்தில் பால் விலை ரூ. 2 முதல் ரூ. 2.50 வரை தான் என்பதால் பெரிதாக இலாபம் பார்க்க முடியாமல் போனது. கடனும் அதிகமாகிப் போனதால், மாட்டுப்பண்ணையை கைவிட்டேன். அதன் பிறகு ஒரு உத்வேகத்தோடு மாற்றுத் தொழிலைத் தேடிய போது தான், காளான் (Mushroom) உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினேன் என்றார்

ஆரம்பகால காளான் உற்பத்தியில் இலாபம்:
முதலில் நண்பர் ஒருவர் 30 காளான் விதைகளைக் கொடுத்தார். அதை வைத்து காளான் உற்பத்தி செய்தேன். உற்பத்தி அதிக அளவில் கிடைத்தது. அந்நேரத்தில், காளானின் தேவையும் அதிகரித்து வந்ததால், விற்பனையும் நன்றாக இருந்தது. படிப்படியாக உற்பத்தியும், விற்பனையும் சீராக உயர்ந்தது. அப்போது, காளான் கொடுத்த நண்பருக்கு அரசு வேலை (Government Job) கிடைத்ததும், அவரிடமிருந்து காளான் பெற முடியாமல் போனது. அதன் பிறகு சத்தியமங்கலத்தில் வெள்ளயங்கிரி (Vellayangiri)அவர்கள், எங்களுக்கு காளான் கொடுத்து உதவினார் என்றார்.

அதிலிருந்து தினமும் 30 கிலோ காளான் உற்பத்தி செய்யத் தொடங்கினோம். உள்ளூர் சந்தையில் விலை குறைவாக விற்பனை ஆனதால், என்னோட குரு வெள்ளயங்கிரி அவர்களும், நானும் சேர்ந்து கோயம்புத்தூர் (Coimbatore) சந்தையில் ஒரே கடைக்கு காளானை தலா 30கிலோ அனுப்பினோம். உற்பத்தி அதிகமாகி, இலாபம் ஈட்டி கடனை எல்லாம் அடைத்தேன். எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும் போது, வெள்ளயங்கிரிக்கு விபத்தில் அடிபட்டதும், அவர் காளான் தொழிலை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். எனக்கு திரும்பவும் விதை கிடைக்காமல் போனது. பிறகு கோயம்புத்தூரில் காளான் விதை வாங்கி உற்பத்தியை தொடர்ந்தேன்.

SS Mushrooms:
காளான் விதையின் தரம் குறைவாக இருந்ததை உணர்ந்து, நாமே காளான் விதைகளை உருவாக்க முடிவு செய்து கலசர் (Culture) செய்ய ஆரம்பித்தோம். விதை உருவாக்க வெளியில் இருந்தும் நல்ல ஆதரவு கொடுத்தார்கள். காளான் விதை உற்பத்தி செய்த பின்பு, காளான் உற்பத்தி மிக எளிதாக இருந்தது. அதன் பிறகு தான் தரமான காளானை பிராண்ட் பெயரில் விற்பனை செய்வதற்காக SS Mushrooms என்ற பிராண்டை உருவாக்கினோம். நாங்கள் உற்பத்தி செய்த காளான் தரமானதாகவும், சுவையாகவும் இருந்ததால் விற்பனையில் முன்னேற்றம் அடைந்து, எங்க பிராண்டுக்கு என்று தனிப்பெயர் கிடைத்தது.

கடந்த 20 வருடங்களாக தரமான காளானை விற்பனை செய்து வருகிறோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும், அங்கு பணிபுரிந்த Dr. கிருஷ்ணமூர்த்தியும் (Dr. Krishnamoorthy) நல்ல ஆதரவு அளித்தார்கள். மேலும், தோட்டக்கலை துறையும், KVK-வும் நல்ல ஆதரவு அளித்தார்கள். காளான் விற்பனையை அதிகரிக்க காளான் பிரியாணி, சில்லி போன்ற உணவுகளை சமைத்து உணவுத் திருவிழா நடத்தினார்கள். DR. கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனைப்படி கொங்கு காளான் உற்பத்தி சங்கத்தை உருவாக்கினோம். அதில் 55 உற்பத்தியாளர்களும், 25 விற்பனையாளர்களும் இருந்தனர் என்றார்.

வறட்சியிலும் காளானை கைவிடவில்லை:
சிலகாலம் கழித்து கடும் வறட்சியால் காளான் உற்பத்தி பாதிக்கப்ட்டு, சிலர் மாற்றுத் தொழிலுக்கு மாறினர். ஆனால் நான் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து, விற்பனையைத் தொடர்ந்தேன். எங்கள் ஊரில், வயல்கள் அதிகளவில் இருந்ததால், வைக்கோல் அதிக அளவில் கிடைத்தது. இதனால், காளான் விதையையும் SS Mushroom என்ற பிராண்டில் விற்றோம். காளான் விதைகளின் தரம் நன்றாக இருந்ததால் சேலம், நாமக்கல், தருமபுரி, திருப்பூர், திருச்செங்கோடு, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பார்சல் முறையில் விற்பனை செய்கிறோம். மாதத்திற்கு ரூ. 50,000 வரை வருமானம் கிடைக்கிறது.

காளான் விலை:
ஆரம்பத்தில் ஒரு கிலோ காளானை ரூ. 30 க்கு விற்றோம். ஓரளவு இலாபம் கிடைத்தது. காளானின் தேவை அதிகமானதால், தற்போது விற்பனை அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.

இலவசப் பயிற்சி:
காளானில் எங்களுக்கு மட்டும் இலாபம் என்றில்லாமல், மற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் இலாபம் கிடைக்க வேண்டும் என்று தரமாக உற்பத்தி செய்து விற்கிறோம். தோட்டக்கலை துறை, KVK மற்றும் சுயதொழில் அமைப்பின் மூலமாக ஒளிவு மறைவில்லாமல் உற்பத்தி மற்றும் விற்பனை நுணுக்கங்களை இலவசப் பயிற்சியாக அளிக்கிறோம் என்றார்.

காளான் அனைவரும் உண்ணக்கூடிய மிகச்சிறந்த உணவு. காளான் தொழிலை தரமாக செய்தால் எளிதில் வெற்றி அடையலாம் என்று தனது வெற்றி அனுபவங்களை கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories