புளிச்சக்கீரை புளிப்பு சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று. புளிச்சக்கீரை வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்பு பூ புளிச்சை என இரு வகை உள்ளது. சிவப்பு புளிச்சகீரை யானது வெள்ளைப்பூ புளிச்ச கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக இருக்கும் .இந்த புளிச்சக்கீரையை சாகுபடி பற்றி இங்கு காணலாம்.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன் படுத்தி பிறகு பாத்திகள் அமைத்து விதைப்பு செய்ய வேண்டும்.
விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இதனால் கீரையின் வளர்ச்சி சீராக இருக்கும். பிறகு முக்கியமானது களை மேலாண்மை .அதற்கு விதைத்த 10 முதல் 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும் .10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லிகரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
நன்கு முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்துவிட வேண்டும். கீரையை ஐந்து சென்டிமீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் அறுவடை செய்யலாம்.