மணத்தக்காளியில் இந்த முறைச் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ பெறலாம்.

பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் மணத்தக்காளியும் ஒன்று. இது சொலானம் நைக்ரம் என்ற தாவரவியல் பெயரில் சொலனேசி குடும்பத்தில் காணப்படுகிறது. மிளகு போன்று தோற்றம் அளிப்பதாலேயே மிளகுத் தக்காளி எனப்படுகிறது.

வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. எத்தியோப்பியாவில் வறட்சிக் காலங்களில் அங்கு முக்கிய உணவாக உண்ணப்படுகிறது.

பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காய வைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.

இச்செடியில் புரதம், கொழுப்பு – 1%, தாது உப்புக்கள் – 2.1%, வைட்டமின் சி, சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, மணிச்சத்து முதலியன காணப்படுகிறது.

100 கிராம் செடியில் 410மிகி சுண்ணாம்புச்சத்து, 70 மிகி மணிச்சத்து, 20.5 மிகி இரும்புச் சத்து, 20.5மிகி. வைட்டமின் சி இருக்கிறது. இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.

சாகுபடி:

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் வளரும். பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படுகிறது. தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும். 6 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம். தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்.

கன்றுகள் 30 செ.மீ. து 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ. வரை வளரும். இதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே.

அறுவடை:

செடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும். காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும். காய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும்.

ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம். தற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது

சந்தைப்படுத்துதல்:

இன்று மருந்து கம்பெனிகளுக்கு இதனுடைய தேவை அதிகமாக உள்ளது. பெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன.

கம்பெனிகளுக்கு அனுப்பும்போது பயிரிட்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தும் பெறலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories