முருங்கையில் பயிர் சாகுபடி வகைகள்

முருங்கையில் பயிர் சாகுபடி வகைகள்

சிறந்த பயிரிடும் முறை என்பது

 • இயற்கை வளங்களை சிறப்பாக பயன்படுத்துதல்
 • நிலைத்த, நீடித்த வருமானத்தை பெறுதல்
 • சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதிக்காமல் இருத்தல் போன்றவையாகும்.

பொதுவாக பயிர் சாகுபடி முறை என்பது பின்வருமாறு இருக்க வேண்டும்.

 1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக உற்பத்தி தரக்கூடியதாகவும், இயற்கை வளங்களை சிறப்பாக பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
 2. எந்தவொரு தட்பவெப்ப சூழ்நிலையிலும், பூச்சிநோய் தாக்குதல் இல்லாமல் நிலையான உற்பத்தியை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
 3. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேணடும்.
 4. நிலத்தின் வளங்களை சமஅளவில் பிரித்து வருமானத்தை அதிகப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

முருங்கையில் ஊடுபயிர் சாகுபடி

முருங்கை ஒரு வறட்சியை தாங்கி வளரக் கூடிய பயிராதலால், மிகக் குறைந்த நீரே பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. பொதுவாக மணற்பாங்கான மற்றும் செம்புரை மண் இதற்கு உகந்தது. முருங்கையில் ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை தெரிவு செய்யும் பொழுது அவற்றிற்கு அதிக நீர்தேவை இல்லாத மாதிரியும், விரைவில் வளரக்கூடிய பயிராகவும் தெரிந்தெடுக்க வேண்டும்.

முருங்கையில் பாகல், புடலை, பீர்க்கு, கொடிவகை, பீன்ஸ் போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட்டால் முருங்கை மரம் துாணாக பயன்படுகிறது. முருங்கையில் ஊடுபயிராக நிழலை தாங்கி வளரக்கூடிய காய்கறிகளை பயிரிடலாம். செடிமுருங்கை பொதுவாக தனியாகவே சாகுபடி செய்யப்படுகிறது. முருங்கையில் ஆணிவேர் அதிகமாகவும், சல்லிவேர் குறைவாகவும் காணப்படுவதால் ஊடுபயிருடன் சத்துக்களுக்கு போட்டியிடுவதில்லை. மிகவும் வளம் குறைந்த மண்ணிலும் பயிரிட முருங்கை மரம் உகந்தது.

தென்னிந்தியாவில் முருங்கையில் வெவ்வேறு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்கிறார்கள். முருங்கையை மா, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். பெங்களூரூவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்சசி இயக்ககத்தில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் முருங்கையில் காய்கறிப் பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தவரை போன்றவற்றினை பயிரிடலாம்

தமிழ்நாட்டில் முருங்கையை நிலத்தினை சுற்றி பயிரிடுகின்றனர், மிளகாய் மற்றும் கத்தரி வயல்களில் கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்கின்றனர் (காதர் முகைதீன் மற்றும் சண்முகவேலு, 1982) /150 முதல் 200 அடி உயரமுடைய முருங்கை மரம் சுமார் 6 முதல் 10 கிலோ வரை காய்க்கும்.

முருங்கையை மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி பயிரில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதனால் களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் கீழ்க்கண்ட காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். தக்காளி, மிளகாய், பீன்ஸ், கறிவேப்பிலை, கொடி வகை காய்கறிப் பயிர்கள் மற்றும் ஏனைய இலைக் காய்கறிகள். மரம் வளர்ப்பு முறையில் தேக்கு, வேப்பிலை, சுபாபுல் போன்றவற்றினை நிலத்தின் ஒரங்களில் சாகுபடி செய்யலாம்.

இடைவெளியில் பயிர் சாகுபடி

இம்முறையில் மரங்களை குறுகிய வரிசையில் பயிரிட வேண்டும். இதனால் மரங்களுக்கிடைய நீண்ட இடைவெளி கிடைக்கும். இவற்றில் காய்கறிகளை சாகுபடி செய்யலாம். இவற்றில் நிழலினை தாங்கி வளரக்கூடிய இலைக் காய்கறிகளை பயிரிட வேண்டும். ஏனெனில் இம்முறையில் மரங்கள் உடன் வளரும் தாவரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன. முருங்கை இலைகளில் புரதச்சத்து மிகுந்து காணப்படுவதால் இடைவெளி சாகுபடியில் அதிக இலைகளை உற்பத்தியை செய்யலாம்.

இம்முறையில் சாகுபடி செய்ய முருங்கை மிகவும் உகந்த பயிராகும். இடைவெளி சாகுபடி செய்யும்போது பயிர்களை நன்கு வெட்டி விடவேண்டும்.

இலை உற்பத்திக்காக நெருக்கிய முறையில் முருங்கையை பயிரிடுதல்

உலகின் வெவ்வேறு நாடுகளில் முருங்கை இலைக்காக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவில் இது தீவனப்பயிராக பயன்படுகிறது. நெருக்கிய முறையில் 15 x 15 செ.மீ. இடைவெளியில் சாகுபடி செய்வதினால் மிக அதிக இலை உற்பத்தியாக 43 – 52 டண் / ஒரு எக்டேருக்கு கிடைக்கும்.

வேளாண்மை பயிர்கள்

முருங்கையில் மக்காச்சோளம், தீவன சோளம், கம்பு, ராகி, பயறு வகைள, எள், கடலை போன்றவற்றினை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இம்முறையில் சாகுபடி செய்வதினால் மானாவாரியில் கூட அதிக லாபம் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பயிர் வேலி

முருங்கையை வேலிப்பயிராக பயிரிட்டால் நிலங்களுக்கு வேலியாகவும் அதிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்கள் லாபகரமாகவும் விளங்குகிறது

முருங்கை பயிரிடும் முறைகள்

 • முருங்கை மரத்தினை விதையின் மூலமாகவோ அல்லது கடின தண்டு குச்சிகளின் மூலமாகவோ வளர்க்கலாம். விதைகளை நிலத்தில் நேரடி விதைப்பு செய்யலாம் அல்லது நாற்றுக்களை வளர்த்து நடவு செய்யலாம்.
 • நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் நேரடி விதைப்பு செய்து நீர்ப்பாய்ச்சலாம். மழைக்காலங்களுக்கு முன்னர் விதைப்பு செய்தால் விதை எளிதில் முளைத்து வருகிறது. நாற்று விட்டு நடவு செய்வதினால் கூலி ஆட்களின் தேவை அதிகமாகிறது ஆனால் நாற்று விட்டு நடுவதினால் நிலத்தில் செடிகளின் வளர்ச்சி ஒரே மாதிரியாக இருக்கும். முருங்கையில் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது.

நிலத்தில் நேரடி விதைப்பு

முருங்கைக்கென தயாரிக்கப்பட்ட நிலத்தில் ஒரு குழியில் 5 செ.மீ. ஆழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகளை விதைக்க வேண்டும். முதல் ஐந்து நாட்களுக்கு மிகவும் அதிகப்படியான நீர்ப்பாய்ச்சுதல் தேவையில்லை. அதிகம் நீர் தேங்குவதினால் அழுகல் நோய் ஏற்படும் மேலும் மிகவும் வறண்ட நிலையில் முளைப்புத்திறன் குறைவாக காணப்படும்.

நாற்றாங்கால் நடவுமுறைகள்

 • நாற்றுக்களை குழித்தட்டுகளிலோ, பாலித்தின் பைகளிலோ நாற்றாங்காலிலோ அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம்.
 • தனித்தனி பாலித்தின் பைகளில் நாற்றுக்களை வளர்ப்பது மிகவும் சிறந்தது. இதனால் நாற்றுக்கள் அதிகம் சேதமடைவதை தவிர்க்கலாம்
 • நாற்றுக்களை நிழல் பகுதிகளில் வளர்க்க வேண்டும்.
 • பாலித்தீன் பை சுமார் 18 செ.மீ. உயரமும் 12 செ.மீ. விட்டமும். உள்ளதாக தெரிவு செய்ய வேண்டும்.
 • பைகளில் 3 சதவீத மண் மற்றும் 1 சதவீத மணல் கலந்த கலவையினால் நிரப்ப வேண்டும்.
 • ஒவ்வொரு பையிலும் இரண்டு அல்லது மூன்று விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.
 • விதைத்த 5 முதல் 12 நாட்களில் முளைப்பு ஏற்படும். விதை முளைத்தவுடன் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தினால் நனைக்க வேண்டும்.
 • இதனால் அழுகல் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் நடுவதற்கு முன் பாலித்தின் பையிலுள்ள ஏனைய நாற்றுக்களை பிடுங்கி விட வேண்டும்.
 • நாற்று நடுவதற்கு முன் நீர்ப்பாய்ச்சுதலை தவிர்க்க வேண்டும் நாற்றுக்கள் சுமார் 60 முதல் 90 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் நிலத்தில் நடலாம்.
 • நாற்றுக்களை நடுதல் நாற்றுக்களை நிலத்தில் நடுவதற்கு முன் குழிகளில் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • மழை வரும் பருவத்தில் நடவு செய்தால் இன்னும் சிறப்பாக செடிகள் வளர்ச்சியடையும்.
 • அதிகம் மழை பெய்யும் இடங்களில் நாற்று நட்டவுடன் நாற்றுக்களை சுற்றி மேடு அமைப்பதினால் நீர் செடிகளின் அருகில் தேங்குவதைத் தவிர்க்கலாம்.
 • நாற்றுக்கள் சாய்ந்து விடாமல் இருப்பதற்கு 40 செ.மீ. உயர குச்சிகளினால் நாற்றுக்களை கட்டலாம்.

குச்சிகளின் மூலம் வளர்த்தல்

 • மிகவும் கடினமான குச்சிகளை தெரிவு செய்தால் அவைகள் எளிதில் வளரும்.
 • காய்கள் உற்பத்தி தந்தவுடன் குச்சிகளை தயாரிக்கலாம்.
 • இக்குச்சிகள் புதிய தழைகளை கொடுக்கின்றன. இவை விதை மூலம் வளர்க்கக் கூடிய செடிகளைக் காட்டிலும் விரைவில் வளர்கின்றன.
 • ஆனால் இவற்றில் வேரின் ஆழம் குறைவாகவே காணப்படும்.
 • குச்சிகளின் உயரம் 45 முதல் 180 செ.மீ நீளம் உடையதாகவும் 4 முதல் 16 செ.மீ. விட்டம் உடையதாகவும் தெரிவு செய்ய வேண்டும்.
 • குச்சிகளை நேரடியாக நிலத்தில் ஊன்றலாம் அல்லது நாற்றாங்காலில் வளர்த்து பின்னர் நடலாம். நடுவதற்கு 3 நாட்களுக்க முன்னர் குச்சிகளை தயாரித்து நிழலில் வைக்க வேண்டும்.

குச்சிகளை நிலத்தில் ஊன்றுதல்

 • ஒரு மீட்டர் ஆழமும் ஒரு மீட்டர் அகலமும் உடைய குழிகளை நிலத்தில் ஏற்படுத்த வேண்டும்.
 • குச்சிகளை இக்குழிகளில் நடுவதற்கு முன் மண், மணல் மற்றும் எரு கலந்த கலவையினால் குழியை நிரப்பி பின்னர் நடவேண்டும்.
 • குச்சியின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை நன்கு அமுக்கி விடவேண்டும். இதனால் நீர் வடிதல் சிறப்பாக இருக்கும். மண்ணின் தன்மையைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்
 • குச்சியின் மேல்புறத்தை காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தினால் தடவ வேண்டும். மிக அதிக உற்பத்திக்கு செடிக்கு செடி 3 மீட்டர் இடைவெளி விடவேண்டும். மரத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் களை வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* தைவானிலுள்ள ஆசியாவின் காய்கறி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், முருங்கை நடவிற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி பின்வரும் இடைவெளிகளை பின்பற்றலாம்.

 • காய் உற்பத்திக்கு – 2 மீட்டர் (செடிக்கு செடி) X3 முதல் 5 மீட்டர் (வரிசைக்கு)
 • இலை உற்பத்திக்கு – 60 செ.மீ. (செடிக்கு செடி) X 100 செ.மீ. (வரிசைக்கு) (சாதாரணமாக)
 • இலை உற்பத்தி – 10 முதல் 20 செ.மீ (செடிக்கு செடி) x 30 to 50 செ.மீ. (வரிசைக்கு) (அயர் நடவு)

குறைந்த அளவு உற்பத்திக்கு

நகர் புறங்களில் குறுகிய இடங்களில் அதிகப்படியான முருங்கை இலை உற்பத்திக்கு 0.75 மீட்டர் x 1 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்வது மிகச் சிறந்ததாகும். மிகக் குறுகிய இடைவெளியில் நடவு செய்வது அதிக உற்பத்தியை கொடுத்தாலும் விதைப்பதற்கு அதிக அளவு விதைகள் தேவைப்படும். மேற்கூறிய இடைவெளியல் சாகுபடி செய்யும்போது கணிசமான அளவு காய் உற்பத்தியும் கிடைக்கும்.

வேளாண் – வனவியல்

முருங்கையை இரண்டு மரங்களின் இடைவெளியில் பயிரிடலாம். இரண்டு மரங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 2 முதல் 4 மீட்டர் இடைவெளியும் பின்பு கிழக்கு மேற்காகவும் அமைந்தால் ஊடுபயிர்கள் அதிக அளவு சூரிய ஒளியைப் பெரும்.

அதிக தழைச்சத்து தேவைப்படும் மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை முருங்கையினுள் ஊடுபயிராக பயிரிடுவதற்கு முன் நிலத்திற்கு அதிக அளவில் சத்துக்களை அளிக்க வேண்டும். சோளம் மற்றும் சிறு தானியங்களை முருங்கையினுள் ஊடுபயிராக சாகுபடி செய்தால் சூரிய ஒளிக்கு போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. எனவே பயறு வகைப்பயிர்கள் மற்றும் நிலக்கடலையை முருங்கையினுள் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். விதை உற்பத்திக்கு சற்று அதிக இடைவெளியில் (3 x 3 மீ) விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி இடைவெளியை ஒரே சீராக அமைப்பதற்காக கயறு மற்றும் அளவு குச்சிகளை பயன்படுத்தி இடைவெளியை நேராக்க வேண்டும். இதனால் செடி வளர்ந்தவுடன் ஒரே மாதிரியாக இருக்கும்.

கேள்வி பதில்கள்

செடி முருங்கையில் உள்ள இரகங்களை கூறவும்?

பிகேஎம்-1 & 2

நான் ஒரு எக்டர் செடிமுருங்கை சாகுபடி செய்ய விரும்புகின்றேன். அதற்கு எவ்வளவு விதை தேவை?

500 கிராம்

எனது முருங்கை பயிரில் அதிக அளவில் கம்பளி புழுக்களில் தாக்குதல் உள்ளது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?

குளோரிபைரிபாஸ் (அ) குயினால்பாஸ் 2மிலி/லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்

 

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories