வணிக நோக்கில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

வணிக நோக்கில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

வணிக நோக்கில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

கிராமங்களில் வீட்டுத் தேவைக்காகப் புறக்கடையில் வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழிகள், தற்போது நகரங்களில் இலாப நோக்கில் வளர்க்கப்படுகின்றன. சரிவிகித உணவை அளித்து, நோயற்ற நிலையில் இவற்றை வளர்த்தால் தான் போதுமான இலாபத்தை அடைய முடியும்.

நோய்த் தடுப்பு

நாட்டுக் கோழிகளைத் தாக்கும் முக்கிய நோய் வெள்ளைக் கழிச்சல். இது நச்சுயிரியால் ஏற்படுவதாகும். முன்பு, இதைக் கட்டுப்படுத்த, 56 ஆம் நாள் ஆர்.டி.வி-கே என்னும் தடுப்பூசி போடப்பட்டது. இப்போது, முதல் வாரத்தில் ஆர்.டி.வி-எஃப் மருந்தில் ஒரு சொட்டை, மூக்கில் அல்லது கண்ணில் விட வேண்டும். 28 ஆம் நாள் ஆர்.டி.வி- லசோட்டாவைக் குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும். 56 ஆம் நாள் ஏற்கெனவே கொடுத்த ஆர்.டி.வி-கே. மருந்தை, இறக்கையில் தோலுக்கு அடியில் கால்நடை மருத்துவர் மூலம் இட வேண்டும்.

உணவு மேலாண்மை

பொதுவாக நாட்டுக் கோழிகளின் வளர்திறன் மிகவும் குறைவு. அதனால், இவற்றை விட, கிராமப்பிரியா, வனராஜா, கிரிராஜா போன்ற கலப்பின நாட்டுக்கோழிகள் சிறப்பாக வளர்கின்றன. முறையான தீவன மேலாண்மை மூலம் அவற்றின் உண்மையான வளர்திறனை முழுமையாகப் பெற முடியும். குஞ்சு நிலையிலிருந்து இரு மாதங்கள் வரை குஞ்சுத் தீவனத்தையும், ஏழு மாதங்கள் வரை வளர்கோழித் தீவனத்தையும், பிறகு முட்டைக்கோழித் தீவனத்தையும் அளிக்க வேண்டும்.

தற்போது முறைப்படியான நாட்டுக்கோழித் தீவனமும் கடைகளில் கிடைக்கிறது. ஆனால், சிறு பண்ணையாளர்கள் இதைப் பெரும்பாலும் வாங்குவதில்லை. தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களையே கொடுக்கின்றனர். போதிய வளர்ச்சிக்குத் தீவனமே ஆதாரம் என்பதால், சிறிய பண்ணையாளர்கள் குழுவாக இணைந்து தங்களுக்குத் தேவையான தீவனத்தைத் தயாரிக்கலாம்.

இதற்குச் சிறிய அரவை இயந்திரமும் கலப்பானும் இருந்தால் போதும். குஞ்சுத் தீவனம், கோழித் தீவனம், முட்டைக்கோழித் தீவனம் ஆகியவற்றைத் தயாரிக்கும் முறைகளை அறிய எங்களை அணுகலாம். சிறியளவில் கோழித் தீவனத்தைத் தயாரிப்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

அமினோ அமிலங்கள்

லைசின், மெத்தியோனின் ஆகிய அமினோ அமிலங்களைத் தேவையான அளவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். நன்மை தரும் நுண்ணுயிரிகளைத் தீனவத்தில் சேர்த்தால், குடலில் தீமை பயக்கும் நுண்ணுயிரிகளைக் குறைத்து அதிக எடையைப் பெறலாம். இவை, புரோபயாடிக் அல்லது உணவிலேயே நன்மை தரும் பொருள்களுடன் கலந்த சின்பயாடிக் என்னும் பெயரில் கடைகளில் கிடைக்கும். இதை ஒரு டன் தீவனத்துக்கு 250 கிராம் சேர்க்க வேண்டும்.

பூஞ்சைத் தாக்கம்

சில சமயம் தீவன மூலப்பொருள்களில் பூஞ்சைத் தாக்கம் இருந்தால் நச்சுத் தன்மை ஏற்படும். குறிப்பாக அஃப்ளா என்னும் நஞ்சு உற்பத்தித் திறனைக் குறைப்பதுடன் கோழிகளில் இறப்பையும் ஏற்படுத்தும். எனவே, தீவனத்தில் டாக்சின் பைண்டர் என்னும் நச்சுப் பிணைப்பானைச் சேர்த்தால், அது குடலிலிருந்து வெளியேறும் போது அங்குள்ள நஞ்சையும் வெளியேற்றி விடும். இதை ஒரு டன் தீவனத்தில் 250 கிராம் சேர்க்க வேண்டும்.

உயிர்ச் சத்துகள்

சில பருவ நிலைகளில் தீவனத் தயாரிப்பில் எண்ணெய்யை நிறையச் சேர்க்கும் போது, அந்த எண்ணெய் கெட்டுப் போகலாம். இதைத் தவிர்க்க, ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களான ஏ,இ,சி,ஈ ஆகிய உயிர்ச் சத்துகளைக் கலக்கலாம். அல்லது பியூட்டா ஹைட்டிராக்ஸி டொலுவின், பியூட்டா ஹைட்டிராக்ஸி அனிசோல் அல்லது எத்தாக்ஸிகுயினைக் கலக்கலாம். இவற்றை ஒரு டன் தீவனத்தில் 20-40 கிராம் சேர்க்க வேண்டும்.

இந்தப் பொருள்களின் அளவு மிகவும் குறைவு என்பதால், ஒவ்வொரு பிடி தீவனத்திலும் இவை சரியான அளவில் இருக்கும் வகையில் முறையாகக் கலக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 94451 47863.

முனைவர் கரு.பசுபதி, மையத் தீவனத் தொழில் நுட்பப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories