இரு மடங்கு வருமானம் பெருக்கும் கரும்பு சாகுபடி……

கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் பாசனத்தில் இரு மடங்கு வருவாய் பெற நீடித்த – நிலையான சாகுபடி முறையை (எஸ்.எஸ்.ஐ) விவசாயிகள் பின்பற்றலாம்.

இயல்பான கரும்பு சாகுபடி முறையில், 7 முதல் 9 மாத வயதுடைய 3 பருவ விதைக் கரணைகளை ஹெக்டேருக்கு 16 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் விவசாயிகள் பயன்படுத்துவர்.

பாருக்கு பார் இரண்டரை முதல் 3 அடி இடைவெளி விட்டு விதைக் கரணைகளை நடுவர். வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படும். பாய்ச்சலும், காய்ச்சலும் ஏற்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைகிறது. களை பிரச்சனையும் அதிகம் ஏற்படுகிறது. இயல்பான முறை சாகுபடியில் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.

இயல்பான முறையில் முதல் வருடம் மட்டுமே ஊடு பயிர்கள் சாகுபடி செய்ய முடியும்.

மகசூலும் ஏக்கருக்கு 40 முதல் 50 டன் வரை மட்டுமே கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு, உரச்செலவு மற்றும் இதர செலவினங்கள் என ரூ.60 முதல் 65 ஆயிரம் வரை செலவாகும். இதனால் ஏக்கருக்கு நிகர லாபம் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரையே கிடைக்கிறது.

நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி:

ஆனால், நீடித்த-நிலையான கரும்பு சாகுபடியை பொருத்தவரை விதைக் கரணைகளுக்குப் பதில் தரமான விதைக் கரும்பில் இருந்து ஒரு பருவ கரணைகள் எடுக்கப்பட்டு குழித் தட்டுகளில் நடப்பட்டு நிழல் வலைக் கூடாரங்களில் வளர்க்கப்படுகின்றன.

ஆலைகளே வழங்கும் தரமானக் கன்றுகள்: தரமான கன்றுகளை உற்பத்தி செய்து சர்க்கரை ஆலைகளே விவசாயிகளுக்கு வழங்குகின்றன. 25 முதல் 35 நாள் வயதுடைய தரமான நாற்றுகள் நன்கு உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் பாருக்கு பார் 5 அடி மற்றும் செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் நடப்படுகிறது.

குறைந்த நீர்ப் பாசனம்:

அடி உரமாக ஏக்கருக்கு ஜிப்சம் 200 முதல் 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ மற்றும் சிங்க் பாஸ்பேட் 15 கிலோ இட வேண்டும். நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நாள் ஒன்றுக்கு மண்ணின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 4 மணி நேரம் பாய்ச்சினால் போதுமானது.

நீராதாரம் பாதுகாப்பு:

இந்த சாகுபடி முறைகளைக் கையாளுவதால் 40 முதல் 50 சதவீதம் வரை நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் சீரான பாசனம் கிடைப்பதால் ஏக்கருக்கு 70 முதல் 80 மெட்ரிக் டன் மகசூல் கிடைப்பதோடு ஊடு பயிரிலும் கூடுதல் வருவாயாக, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது.

இதில், இயந்திர அறுவடை செய்வதால் பெரும் பலன் கிடைக்கும். பெருமளவு வேளாண் தொழிலாளர்கள் பிரச்சினை குறைந்திடும்.

தற்போதைய சிறப்புப் பருவத்தில் பயிரிடலாம்: தற்சமயம் சிறப்புப் பருவத்தில் ஜூன் – ஜூலை மாதங்களில் கரும்பு நடவு செய்திடும் விவசாயிகள் நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

தமிழக அரசு ஊக்குவிப்பு மானியம்:

கரும்பில் அதிக இலாபம் தரும் வகையில், தமிழக அரசு நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி திட்டம் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி வேளாண் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த வகை சாகுபடியை ஊக்குவித்திட தமிழக அரசு வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்க்கரை ஆலைகள் மூலம் தரமான கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கு ஏதுவாக நிழல் வலைக் கூடங்கள் நிறுவி உள்ளது.

சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட அதிகபட்சம் எக்டேருக்கு ரூ.55 ஆயிரத்து 828 என்ற அளவில் மானியம் வழங்கப்படுகிறது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories