சிம்ரன் கத்திரிக்காய் மூலம் ரூ.70 ஆயிரம் வரை லாபம் பெறலாம்.

கத்திரிக்காயில், பச்சை கத்தரிக்காய், பிகாம் கத்தரிக்காய், ‘சிம்ரன் கத்தரிக்காய்’ என ஏழுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.

இதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிம்ரன் கத்தரி’ என்ற ரகம் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே புளிகுத்தி, குச்சனூர், வீரபாண்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தனது 90 சென்ட் நிலத்தில் ‘சிம்ரன் கத்தரி’ ரகத்தைச் சாகுபடி செய்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறார் அழகர்.

தன்னுடைய விவசாயப் பணியைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது:

“கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பச்சை மிளகாய், அவரைக் காய் சாகுபடி செய்துவருகிறேன். போதிய வருவாய் கிடைத்தாலும் சில நேரம் விலை குறைந்து நஷ்டமும் ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ‘சிம்ரன் கத்தரிக்காய்’ அறிமுகம் செய்யப்பட்டது. வேளாண் துறையினரின் பரிந்துரையின்பேரில் இதைச் சாகுபடி செய்யத் தொடங்கினேன்.

மற்ற ரகக் கத்தரிக்காய்களைவிட, இது மிகவும் ருசியாக இருப்பதால் பொதுமக்கள் அதிக ஆர்வமாக வாங்கிச் சென்றனர். லாபம் அதிகமாகக் கிடைத்ததால் தொடர்ந்து இதைச் சாகுபடி செய்துவருகிறேன்.

இந்தக் கத்தரிக்காய் ரகம் சரளை, வண்டல்மண், செம்மண் என எந்த நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது. ஆனால், செம்மண்ணில் சாகுபடி செய்தால் காய் உற்பத்தி அதிகமாக இருக்கும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் பாய்ச்சினால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

இயற்கை உரம் இட்டால் மகசூல் பல மடங்கு அதிகரிக்கும். சாகுபடி செய்யக் கோடை, குளிர், மழை என எந்தக் காலமும் கணக்கு இல்லை எப்போது வேண்டுமென்றாலும் சாகுபடி செய்யலாம்.

அதிக மழை பெய்தால், செடியில் புழு தாக்குதல் ஏற்படும். அந்த நேரத்தில் வேளாண் துறையினரிடம் ஆலோசனை பெற்று இயற்கை முறையில் புழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம். முடிந்தவரை வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லியைத் தெளிக்கக் கூடாது.

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் காய் பறிக்கும் வகையில் சாகுபடி செய்தால், சாம்பார், பொரியல், கூட்டு என அய்யப்பன் கோயில் சீசன் காலத்தில் பக்தர்கள் கத்தரிக்காயை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்தக் காலத்தில் கத்தரி விலை பல மடங்கு உயரும். கத்தரி பயிரிட்ட விவசாயிகளுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் ‘சிம்ரன் கத்தரி’ ரகத்தைச் சாகுபடி செய்ய விதை, உழவு, உரம், தொழிலாளர்கள் கூலி என ரூ. 50 ஆயிரம்வரை செலவு ஏற்படும். கத்தரிக்காய் விதை போட்டு நாற்றங்கால் நடவு செய்த 60 நாட்களில் இருந்து 150 நாட்கள்வரை தினந்தோறும் காய் பறிக்கலாம்.

ஐந்தரை முதல் ஆறு டன்வரை விளைச்சல் கிடைக்கும். தற்போது கிலோ சராசரியாக ரூ. 18 வரை விலை போகிறது. முகூர்த்தக் காலங்கள், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கிலோ ரூ. 100 வரை விலை உயர வாய்ப்புள்ளது. செலவு போக எப்படிப் பார்த்தாலும் ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும்”..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories