பாகற்காய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்க வழிகள்……

பாகற்காய் சாகுபடி பொதுவாகவே விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும்.

இவ்வகை பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது. வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை. களை குறைவான பயிர். அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள்.

இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். விருந்துக்கு உதவாத காய் மருந்துக்கு உதவும் என்பார்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் தாய்மார்களுக்கும் சிறந்த சத்தான காய். விலை மலிவான காய் என்றுகூட சொல்லிவிடலாம்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம். பாகல் சாகுபடி செய்ய நல்ல புழுதி உழவும், தொழு உரமும் அவசியம் தேவை. ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகிக்கும் போது மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். காய்களின் பசுமைத் தன்மை மூன்று நாட்கள்தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் கீப்பிங் குவாலிட்டி என்று சொல்வார்கள்.

ரகங்கள்:

சங்ரோ விவேக், செமினிஸ், அபிஷேக், நுண்கம்ஸ், அம்மன்ஜி, மஹிக்கோ, வென்சுரா, எம்ஏஎச்101, அங்கூர் பராக் போன்ற ரகங்கள் பாகல் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. பாகல் வயது 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஆகும்.

விதை ஏக்கருக்கு 300 கிராம் தேவைப்படுகிறது. விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தான் நடவுசெய்ய வேண்டும். ஏனெனில் இதன் சதைப்பற்று கடினமாக இருக்கும். இதனால் விதை மேலேயே நின்றுவிடும்.

விதைகள் ஈரப்பதம் கிடைக்காமல் முளைப்புத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலே இருந்தால் எலிகள், அணில்கள் தோண்டி எடுத்து வீணாக்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு சுமார் 30 மணி நேரம் ஊறவைத்த விதைகள் நடவு செய்யும்போது விதைகள் வீணாவது குறைவு. ஒரு விதை ஒரு ரூபாய் ஆகின்றது. இதனால் இந்த எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். நடவுமுறை:பொதுவாக தனி பயிர்தான் பாகல் சாகுபடியில் உள்ளது. வரிசை முறையில் 7 அடி து 7 அடி இடைவெளிவிட்டு வாய்க்கால் அமைத்து அந்த கரை மீதுதான் விதை நடவு செய்வார்கள்.

தண்ணீர் வசதி மண்வளத்திற்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். இதில் முன்னோடி விவசாயிகள் உளுந்தை வரிசையில் வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்து 70 நாட்களில் 200 கிலோ வரை மகசூல் எடுத்து சாதனை படைத்த விவசாயிகள் உள்ளனர்.

திண்டிவனம் அருகில் உள்ள ஊரல் கிராமத்தில் குப்புசாமி உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் எடுத்துள்ளார்.

இதில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் போது அசுவணி பூச்சி பாகலில் குறைவாக உள்ளது. இது நமக்கு நல்ல வாய்ப்பு. 70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்தபின்னர்தான் பாகல் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும்.

அப்போது விவசாயிகளின் வசதியை ஒட்டி சவுக்கு மிலார் பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல் நடவு செய்து சாகுபடி செய்வார்கள். மேற்கண்ட பந்தல்கள் சுமார் ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு:

இதில் பழ அழுகல் நோய்தான் அதிகம் காணப்படுகின்றது. இதற்கு கார்பன்டை ஆசிம் என்ற நோய் மருந்தை அவ்வப்போது உரிய பரிந்துரைபடி மேற்கொண்டால் போதுமானது.

மற்றபடி பவர் தெளிப்பான் கொண்டு பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்துவதற்கு பதில் குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளை திம்மெட் 10% கார்போ பியூரிடான் 3% போன்ற பூச்சிக்கொல்லிகளை ரசாயன உரங்கள் வைக்கும்போது சேர்த்து வைப்பதால் வேலை ஆட்களின் செலவை குறைக்கலாம்.

பவர் தெளிப்பானுக்கு தேவையான பெட்ரோல் செலவை குறைப்பதோடு வேர் வழியாக பூச்சிக்கொல்லிகள் செல்வதால் சீரான வளர்ச்சியுடன் செடிகள் வளருகின்றன.

பாகல் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்க வழிகள்:

காய்கறிகளை சந்தைப்படுத்துதல்: வீரிய ரகங்கள் அனைத்தும் பலாப்பழத்தில் எப்படி மேல்பகுதி முழுவதும் முள் போன்று உள்ளதோ அதுபோன்று முட்கள் பகுதி பாகலில் உள்ளது.

கோணியில் பேக்கிங் செய்து கோணியில் அடுக்கி அனுப்பும்போது இந்த முட்கள் போன்ற பகுதி உடையாதவண்ணம் அனுப்பினால்தான் பார்ப்பதற்கு காய்கள் பசுமையாக இருக்கும். இல்லையேல் தரம் இரண்டு என்று விலை குறைய வாய்ப்பு உள்ளது.

வேன்களில் செல்லும்போது மூடைகள் அதிக உயரம் அடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கவனிப்பு நம்முடைய உற்பத்தி பொருள் கூடுதல் விலை கிடைப்பதற்கான வழிகளாகும்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories