வாய்ப்புகையிலை அறுவடைக்குத் தயார் என்று கண்டுப்பிடிப்பது எப்படி?…

ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் இரண்டு அல்லது மூன்று உழவுக்குப் பின் இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் மூலம் மண்ணை உழுவது நல்லது.

கடைசி உழவுக்கு முன் எக்டேருக்கு 25 டன் தொழு உரம் அல்லது சணப்பு ஒரு எக்டருக்கு 70-75 கிலோ விதை விதைத்து, முளைத்த 45-50 நாட்களில் ரோட்டவேட்டர் அல்லது டிராக்டர் மூலம் உழுவதால் மண்ணிற்கு அங்கக உரம் சேர்க்கப்படுகிறது.

மேலும் நடவு செய்யும்போது நாற்று நடும் இடங்களில் சிறு குழிகள் பறித்து அவற்றில் எக்டேருக்கு 310 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 4 பங்கு சலித்த சாணி உரம் கலந்து இடவேண்டும்.

ஒரு செடிக்கு 17.5 கிராம் சூப்பர் பாஸ்பேட்டும் 70கிராம் சலித்த சாணி உரமும் தேவைப்படும். தரமான நாற்றுக்களை தேர்வு செய்து மாலை நேரத்தில் வெயில் தாழ்ந்ததும் 90 x 75 செ.மீ. இடைவெளியில் எக்டேருக்கு 14,815 அல்லது ஏக்கருக்கு 5926 செடிகள் வருமாறு நாற்றுக்களை நடவு செய்யலாம். பாழ் நாற்றுக்கள் நட்ட 10 நாட்களுக்குள் நட்டு முடித்துவிட வேண்டும்.

நடவு செய்த மறுநாள் கங்குத்தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம். இளம் பருவத்தில் அதாவது பார் கொத்தி இழுத்துக் கட்டும் வரை குறைந்த அளவு நீர் அடிக்கடி (12 மி.மீ.) 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சினால் போதுமானது. வளர்ச்சிப் பருவத்தில் மண்வெட்டியால் பார் கொத்தி இழுத்துக்கட்டியபின், அதிக நீர் (36 மி.மீ) பாய்ச்ச வேண்டும்.

இலை முதிர்ச்சிப் பருவத்தில் அதாவது நட்ட 90 நாட்களுக்குப் பின் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. வாய்ப்புகையிலைக்கு 25 முதல் 30 முறை தண்ணீர் கட்டப்படுகிறது. புகையிலைக்கு சொட்டுநீர் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதன் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

நடவு செய்த 3 வாரங்கள் கழித்து களைக்கொத்து மூலம் களை எடுக்க வேண்டும். நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நாற்று நடும் வயலில் நீர் பாய்ச்சி கரைகளின் மேல் ஒரு எக்டேருக்கு புளூக்குளோரலின் ஒரு லிட்டர் அல்லது ஆக்சிபுளோரோபென் அரை லிட்டர் களைக்கொல்லி மருந்தை 750 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து களைகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

நட்ட 6-7 வாரங்களுக்குப் பின் (45 நாட்கள் கழித்து) பார்களை மண்வெட்டியால் கொத்தி, பின்பு அதிக நீர் கொள்ளுமாறு ஆழமாக பார் இழுத்துக் கட்ட வேண்டும். வாய்ப்புகையிலைக்கு மேலுரமாக எக்டேருக்கு 125 கிலோ தழைச்சத்து இட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை இரு சம பகுதிகளாகப் பிரித்து நட்ட 45வது மற்றும் 60வது நாளில் 310 கிலோ அம்மோனியம் சல்பேட் அல்லது 140 கிலோ யூரியாவாக கொடுக்கப்படுகிறது. இதில் முதல் பகுதியை மண்ணிலும் இரண்டாவது பகுதியை 2 சதவீத யூரியா கரைசலாகவும் (200 கிராம் யூரியா, 10 லிட்டர் தண்ணீர் – 150 செடிகளுக்கு) நட்ட 70, 80, 90வது நாட்களில் தெளிப்பதால் 10% கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அடிக்கடி நீர் பாய்ச்சுவதன் விளைவாக ஏற்படும் உர இழப்பு தவிர்க்கப்படுகிறது. வாய்ப்புகையிலைக்கு எக்டேருக்கு 50 கிலோ சாம்பல் சத்து, மியூரியேட் ஆப் பொட்டாஷாக (85 கிலோ) இட சிபாரிசு செய்யப்படுகிறது.

கொழுந்து ஒடித்தால்:

கொழுந்து ஒடிப்பதால் புகையிலையின் தரம் உயர்ந்து மகசூலும் அதிகம் கிடைக்கிறது. நடவு செய்த 60 முதல் 70 நாட்களில் பூ விடும் தருணத்தில் செடியின் அடியிலிருந்து 10 முதல் 12 இலைகள் விட்டு (பழுப்பு இலைகளுடன் சேர்த்து) தண்டு வெளியில் நீட்டிக் கொண்டிராதபடி மேல் இலையை ஒட்டியே கொழுந்து ஒடித்தல் வேண்டும். விட்டுப்போன செடிகளை அடுத்த ஒரு வாரத்திற்குள் கொழுந்து ஒடித்து முடித்துவிட வேண்டும். அப்பொழுதுதான் எல்லா செடிகளும் ஒரே சமயத்தில் சீராக முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு வரும். இலைகளின் இடுக்குகளில் சிம்பு வளராமல் தடுத்து கட்டுப்படுத்த டெக்கனால் அல்லது ராயல்டன் அல்லது பவர்-10 ஆகிய சிம்புக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 6.0% கரைசலை உபயோகிப்பது மிகவும் சிறந்தது. சிம்புக்கொல்லி மருந்து கிடைக்காத பட்சத்தில் சிம்புகளை 7-10 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துவிட வேண்டும்.

அறுவடை:

வாய்ப்புகையிலை நட்ட 120-130 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இலைகள் நன்றாக முதிர்ந்து சொரசொரவென்று கெட்டியாக எண்ணெய்ப்பிசுக்குடன் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்பட்டால் அவை அறுவடைக்குத் தயார் என்று தெரிந்து கொள்ளலாம். இலையின் நடுநரம்பைத் தொட்டு லேசாக அழுத்தினால் உடைவது போல் இருப்பதும் ஒரு அறிகுறி.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories