இராகி சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்!

இராகி சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்!

இராகி சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்!

மானாவாரி சாகுபடியில் சிறுதானியப் பயிர்கள் முன்னிலை வகிக்கின்றன. பல்வேறு சூழல்களைத் தாங்கி வளரும் தன்மை, சிறுதானியப் பயிர்களில் இயல்பாகவே உள்ளது. இவ்வகையில், குறைந்த நீரில் நல்ல மகசூலைத் தருவது கேழ்வரகு. இதை, கேப்பை, இராகி, ஆரியம் எனவும் அழைப்பர். ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மழையளவு 450-500 மி.மீ. உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.

இராகியில் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தால் அதிக மகசூலைப் பெறலாம். முதல் கட்டமாக அதிக மகசூலைத் தரும், கோ.9, கோ.13, கோ.14 ஆகிய இரகங்களில் ஒன்றைத் தேர்வு செய்து நாற்று விட்டு நட வேண்டும்.

விதை நேர்த்தி

ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவை. இதில், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் எடுத்துக் கலந்து வைக்க வேண்டும். பிறகு மூன்று பொட்டலம் அசோஸ்பயிரில்லம், மூன்று பொட்டலம் பாஸ்போபாக்டீரியா அல்லது 40 கிராம் அசோபாசை எடுத்து ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். உயிர் உர விதை நேர்த்தியின் போது இரசாயனப் பொருள்களைச் சேர்க்கக் கூடாது.

நாற்றங்கால்

ஏக்கருக்கு 5 சென்ட் நாற்றங்கால் தேவை. ஒரு சென்ட்க்கு 3 கிலோ சூப்பர் பாஸ்பேட் வீதம் எடுத்து அடியுரமாக இட்டால் வேர்கள் நன்கு வளரும். 15 முதல் 17 நாள் நாற்றுகளை நட வேண்டும். இதைக் கடந்த நாற்றுகளை நட்டால், நாளொன்றுக்கு ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் மகசூல் குறையும்.

நிலம் தயாரிப்பு

அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். மேலும் 4 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா, அல்லது 4 பொட்டலம் அசோபாசை, 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து இட வேண்டும். அடுத்து, நடவுக்கு முன், 12 கிலோ தழைச்சத்தைத் தரும் 26 கிலோ யூரியா 12 கிலோ மணிச்சத்தைத் தரும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 20 கிலோ பொட்டாஷை இட வேண்டும்.

நடவு

பிறகு 15-17 நாள் நாற்றுகளை நட வேண்டும். நட்டு 20 ஆம் நாள் களையெடுத்து, பயிர் நன்கு வளரும் நிலையில் 12 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டுப் பாசனம் செய்ய வேண்டும். களையைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஒரு லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பென்டிமெத்தலின் என்னும் களைக்கொல்லியை, விதைத்த மூன்றாம் நாளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தவிர்ப்பது நல்லது 

பயிர்ப் பாதுகாப்பு

அசுவினியை அழிக்க, டைமித்தோயேட் 30 இ.சி. மருந்தை, ஏக்கருக்கு 20 மில்லி வீதம் தெளிக்கலாம். வேர் அசுவினி மற்றும் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, கார்பரில் 50 சத நனையும் தூள் 1 கிலோவைப் பயன்படுத்த வேண்டும். குலை நோயைத் தடுக்க, ஆரியோபனஜின் சால் 100 பிபிம் மருந்தை 50% எடுத்து, கதிர் வரும்போது தெளிக்க வேண்டும். அடுத்து, 400 கிராம் மேன்கோசெப் மருந்தை 10 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தேமல் நோய் தெரிந்தால், மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. மருந்தை ஏக்கருக்கு 200 மில்லி வீதம் தெளிக்க வேண்டும். மறுபடியும் தேவையானால் 20 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் ம.சித்ரா, வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் – 614 902.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories