ஓட்ஸ் சாகுபடி

இரவு வெப்பம்
1000 கிலோ மகசூல்
எந்த ரகம்
3 ஆண்டு ஆராய்ச்சி

ஓட்ஸ் குளிர்காலத் தானியம். இதைத் தமிழகத்தில் சாகுபடி செய்யத் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறது. தட்பவெப்ப நிலை, மகசூல், பூச்சி – நோய் எதிர்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறோம். இந்த ஆராய்ச்சிக்கு 8 ரகங்களைப் பயன்படுத்துகிறோம்.

இரவு வெப்பம்

அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 4-ம் தேதிக்குள் ஓட்ஸை விதைக்க வேண்டும். பகலில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாக்குபிடிக்கும். இரவு வெப்பம் மிக முக்கியமானது. 16 டிகிரி முதல் 20 டிகிரிவரை இருக்கலாம். அதிகமானால், விளைச்சல் பாதிக்கப்படும்.

பயிர் விளைந்தாலும் மகசூல் குறைந்துவிடும். அதேநேரம் வறட்சியைத் தாங்கி வளரும் என்றாலும், இரவில் குளிர் இருப்பது அவசியம். 60 – 70 நாட்களில் கதிர் மலரும். ஓட்ஸ் முழு விளைச்சலைத் தர 120 – 125 நாட்கள் ஆகும்.

1000 கிலோ மகசூல்

எங்களது முதற்கட்ட முயற்சியில், தமிழகத்தில் ‘ஓட்ஸ் விளைச்சல்’ சாத்தியம் என்று தெரியவந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 800 – 1000 கிலோ மகசூல் செய்யலாம். ஆனால், அந்த மகசூல் விவசாயிகளுக்கு அதிக லாபம் தராது. நேர்த்தியாக விதைத்து ஒரு ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூலைக் கடப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சி தொடர்கிறது. சந்தைப்படுத்தும் முறை, பூச்சி தாக்குதல் எதிர்கொள்ளும் முறை, தானியத்தைப் பிரித்து அவல் தயாரிக்கும் கருவி, உரம் அளவீடு போன்றவற்றைக் குறித்தும் ஆராய்ந்துவருகிறோம்.

எந்த ரகம்

அத்தியந்தல், கோவை, பாப்பாரப்பட்டி, சந்தியூர், விரிஞ்சிபுரம், வெலிங்டன், பவானி சாகர் ஆகிய ஊர்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் ஓட்ஸ் சாகுபடி ஆராய்ச்சி பணி நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ரகங்களில், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ரகம், நன்றாக விளையும். எந்த இடத்தில் எந்த ரகம் நன்றாக மகசூல் கொடுக்கிறது என்றும் ஆராய்ந்துவருகிறோம். ஒரு கதிரில் தற்போது 15 – 20 மணிகள் விளைந்துள்ளன. அதன் எண்ணிக்கையை அதிகரிப்பது, எடையைக் கூட்டுவது போன்ற ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

3 ஆண்டு ஆராய்ச்சி

ஆராய்ச்சி பணி, 3 ஆண்டுகளுக்குத் தொடரும். அதன்பிறகு இறுதி வடிவம் கிடைக்கும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு நேர வெப்ப நிலை 16 – 18 டிகிரியாக உள்ளதால், அந்தப் பகுதிகளை ஓட்ஸ் சாகுபடிக்கு உகந்த இடங்களாகத் தேர்வு செய்துள்ளோம்.

ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குவதற்காக, ஓட்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது. முதன்முறையாக உணவுக்குப் பயன்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமே ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்- சிறுதானிய மகத்துவ மையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories