சாமை சாகுபடி குறிப்புகள்

சாமை சாகுபடி குறிப்புகள்

சமச்சீர் உணவில் சிறுதானிய, உணவு தானியப் பொருள்களின் பங்களிப்பு அதிகம். இன்றைய காலகட்டத்தில் சிறுதானியப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடமும் இவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மேலோங்கி உள்ளது.

சிறுதானியப் பயிரான சாமை சாகுபடியில் விவசாயிகள் நல்ல வருவாய் பெறலாம். பொதுவாக சாமை மானாவாரிப் பயிராக ஆடிப்பட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது வறட்சியைத் தாங்கும் பயிராகும். குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது.

சாமையில் மாவுச் சத்து, புரதம், தாதுக்கள், செரிமானத்துக்கு உதவும் நார்ச் சத்துகள், அதிகளவில் பாஸ்பரஸ், பிற நுண்ணூட்டச் சத்துகள் உள்ளன.

சாகுபடி பருவம்

மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் (ஜூன், ஜூலை மாதங்கள்) சாமை பயிரிடவும். அனைத்து வகையான நிலங்களிலும் பயிரிட ஏற்றது சாமை. ஆனாலும், செம்மண், இருமண் கலந்த நிலங்களில் சாமைப் பயிர் செய்ய உகந்தது.

ரகங்கள்

பையூர்-2 என்ற ரகமானது 85 நாள்கள் வரை வளரக் கூடியது. ஹெக்டேருக்கு 850 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கோ-4 என்ற ரகமானது 75 முதல் 80 நாள்கள் வளரக் கூடியது. ஹெக்டேருக்கு 1,500 முதல் 2,000 கிலோ மகசூல் கிடைக்கக் கூடியது.

உழவியல் நிர்வாகம்

சாமை விதைப்பதற்கு முன்பு நிலத்தைக் கலப்பையைக் கொண்டு இரண்டு முறை நன்கு உழுது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். விதையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால் முளைத்து வெளியே வருவதற்கு 5 முதல் 7 நாள்கள் ஆகும். நிலத்தை நல்ல முறையில் தயார் செய்தால்தான் களைகளின் பாதிப்புகள் குறைந்து மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். அப்போதுதான் விதைகள் நன்கு முளைத்து வரும்.

விதைக்கும் முறை

சாமைப் பயிரானது கை விதைப்பு முறையில் பரவலாகத் தூவப்படுகிறது. இந்த முறையில் விதைப்பதற்கு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். கொர்ரு அல்லது விதைப்பான் கொண்டு வரிசையில் விதைக்க ஏக்கருக்கு சுமார் 4 கிலோ விதை தேவைப்படும். விதையை விதைக்கும்போது 2.5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டுóம். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். மேலும், நாற்றுக்கு நாற்று 7.5 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உர நிர்வாகம்

ஓர் ஏக்கர் நிலத்தில் 2 டன் நன்கு மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவின்போது பரப்பி, பின்னர் உழ வேண்டும். பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் பரிந்துரைக்கப்பட்ட அளவான தழை, மணி, சாம்பல் சத்துகளை ஏக்கருக்கு முறையாக 16:8:8 என்ற விகிதாசாரத்தில் (கிலோ) இடவேண்டும்.

விதைக்கும் போது அடியுரமாக மணி, சாம்பல் சத்துகளை அதாவது பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை முழுமையாக இட வேண்டும். தழைச்சத்தை அளிக்கவல்ல யூரியா உரத்தைச் சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக விதைக்க 25-30-ஆவது நாளில் ஒரு தடவையும், 40-45-ஆவது நாளில் மறு முறையும் இட வேண்டும். பருவ மழை சரியாக இல்லாத காலத்தில் மீதம் உள்ள தழைச்சத்து அளிக்கவல்ல யூரியா 50 சதத்தையும் ஒரே தடவை மண் ஈரத் தன்மைக்கு ஏற்ப மேலுரமாக இட வேண்டும்.

களை நிர்வாகம்

இருபதாம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

பயிர் களைதல்

களை எடுத்தவுடன் பயிரில் வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., நாற்றுக்கு நாற்று 7.5 செ.மீ. இடைவெளியில் பயிர்களைக் களைக்க வேண்டும். களைத்த பயிர்களைக் கொண்டு பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்யவும்.

நீர் நிர்வாகம்

சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு தேவைப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு நீர், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் கட்டாயம் மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

அறுவடை

கதிர்கள் நன்கு முற்றி, காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின்னர் கதிர்களைக் களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பிறகு, தானியத்தை நன்கு காய வைத்து சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories