ஆந்திராவில் விலை வீழ்ச்சி காரணமாக கிலோ 4ரூ விற்றதால் வெங்காய மூட்டைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி!

ஆந்திராவில் விலை வீழ்ச்சி காரணமாக கிலோ 4ரூ விற்றதால் வெங்காய மூட்டைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி!

விளைப்பொருட்களின் விலை வீழ்ச்சி என்பது, பல காலமாகவே,வெறும் கடந்து செல்ல கூடிய செய்தியாகவே, பார்க்கப்படுகின்றது.

ஆனால், விளைப்பொருள் விலையேற்றம் என்பது, ஆளும் ஆட்சியையே, மாற்றி, தேர்ந்தெடுக்கவல்ல, வல்லமை வாய்ந்த, பெரும் சக்தியாக மக்களின் அதிகாரத்தில் கோலேச்சுகின்றது.
இது என்னவொரு மனநிலையின் வெளிப்பாடாக இருக்கும் என வியக்கிறேன்…

விளைபொருள் விலைவீழ்ச்சி எனில், பாதிக்கப்படுபவர், விவசாய நாடு என உலக அரங்கில் அடையாளப்படுத்தப்படும், பெரும்பான்மையோர் எனப்படும்,ஆனால் நடைமுறையில் சிறுபான்மையாய் நிராகரிக்கப்படும் விவசாயி ஆவார்.

ஒவ்வோர் ஆண்டும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல் தீவைப்பு, சாலையில் கொட்டுதல் , பறித்தால் கூலிக்கும் காணாது என ,விளைந்த வயலில் மாடுகளை விட்டு மேய்த்தல், வயலை பராமரிக்காது, பயிரை அழித்தல் போன்ற விவசாயிகளின், தற்கொலைக்கு ஈடான நிகழ்வுகளுக்கு ,இந்திய நாட்டின் மக்களான நாம், வெறும் கடந்துசெல்ல கூடிய செய்தியாக தான் வினையாற்றி கொண்டிருக்கிறோம்.

விளைப்பொருள் ஏற்றம் என்றால் மட்டும், இந்த மக்களின் சக்தி எப்படி சர்வ வல்லமை கொண்டதாய் விஸ்வரூபம் எடுக்கின்றது?

தற்போதய தக்காளியின் விலையேற்றத்திற்கு, எத்தனை பொருமல்கள், நாங்கள் எப்படி வாழ்வது என எத்தனை கூப்பாடுகள், சமூக ஊடகங்களில் எத்துனை எள்ளி நகையாடல்கள்…

இத்துனை ஆர்பாட்டங்களுக்கும், ஆர்பரிப்புகளுக்கும், ஆளும் அரசாங்கமே, பசுமை பண்ணை திட்டத்தின் மூலம் தக்காளியை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க விரைந்து நடவடிக்ககை எடுக்க செய்தது.

வரலாறு காணா வெங்காய விலையேற்றம், ஒன்றிய அரசு நிர்வாகத்தில், ஆட்சி மாற்றம் காண செய்ததின், கடந்த கால வரலாற்று நிகழ்வின் மக்கள் வலிமையை மக்கள்பிரதிநிதிகள் நன்கு உணர்ந்துள்ளதால் தான், இத்துனை அவசர கால நடவடிக்கையாக, விலையேற்றத்தை, கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

இத்துனை மாபெரும் வல்லமை படைத்த மக்கள் சக்தியே, இந்த விலைவீழ்ச்சிக்கு, விளைவித்த விவசாயிக்கு துணையாய் நிற்பாயோ?

வாங்கும் நுகர்வோர், விலையேற்த்தால் எப்படி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது என கூக்குரலிட்டபோது, விளைவித்த விவசாயிக்கு மட்டும், விலைவீழ்ச்சியினால், அவர்குடும்பம் எப்படி வாழும் என்பதனை ஒரு கணமாவது சிந்தித்திருப்பீரா..

விலையில்லா விளைப்பொருளை விளைவித்து, கடனில்,தன்னுயிரை விட்டு மாண்டு போன விவசாயியின் துயர நிலை, கண்ணுர கண்டும் கடந்து சென்றது ஏனோ?

உயிரை வளர்க்க ,நமக்கு உணவு வேண்டும் நித்தமும், ஆனால் அதை விளைவித்து தரும் விவசாயி மட்டும் ஏனோ வேற்றுகிரகவாசியாய், நம் எண்ணத்தில் பரிணமித்தது எதனால் என சிந்தித்ததுண்டா நுகர்வோரே…

சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து ,இந்தியா விவசாய நாடு, விவசாயம் இந்நாட்டின் முதுகெலும்பு என்கிற அடையாளத்துடன், சுதந்திர இந்தியாவின் மக்காளாட்சி நிர்வாக முறைகள் ,விவசாயம் சார்ந்தே வரையறுக்கப்பட்டன.

தொண்னூறுகளின் உலகமயமாக்கல் கொள்கை, விவசாயத்தை புறந்தள்ளி, தொழில்துறை சார்ந்து மட்டுமே, நிர்வாக திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, தற்போது வரை தொடர்கின்றது, எவ்வித கட்சி வேறுபாடும் இன்றி..

நாட்டின் நிர்வாகத்திற்கான, நிதிநிலை அறிக்கைகள்,அந்நிய தொழில் உற்பத்தி மற்றும் வளர்ச்சி சார்ந்தே சமர்ப்பிக்கப்படுகின்றன. இதில், நாட்டின் முதுகெலும்பு, கவனிப்பாறின்றி முறிந்து முடங்கி வருகின்றது, ஒவ்வோர் ஆண்டும்.

நசிந்து போன தொழிற்பேட்டைகளுக்கெல்லாம்,புதுஇரத்தம் பாய்ச்ச துடிக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கு, நொடி ப்பொழுதும் சிறிதுசிறிதாய் தன் பலத்தை இழந்து, உயிர்மூச்சை விட காத்திருக்கும் விவசாயத்திற்கு மட்டும் பாராமுகம் ஏனோ?

அரசு இயந்திரம் சுழல, விவசாயி என்ன வரியா கட்ட போகிறார் என்கிற அலட்சியமா…

விளைப்பொருள் விலைபேற்றத்தால் நுகர்வோராகிய மக்கள் பாதிக்கபடக்கூடாது, ஆனால் விலைவீழ்ச்சியால் விவசாயி உயிரையும் விடலாம், இது என்னவொரு கொடூர மனப்பாங்கு..

நுகர்வோர் மக்களின் வாக்கு பெரும்பான்மை ,விளைவிக்கும் விவசாயியின் வாக்கு சிறுபான்மையா?, விளங்கவில்லையே..

விவசாய இந்திய நாட்டில் ,விவசாயியும் பெரும்பான்மை தானே ,அப்படியிருந்தும், விவசாயியின் வாழ்வாதாரம் குறித்த தீர்வான நிலைப்பாடுகளை முன்னெடுக்க, அரசு ஏன் மெத்தனமாகவே செயல்படுகின்றது..

விலையேற்த்தை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் அரசாங்கம், விலைவீழ்ச்சியையும் கட்டுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆக்கபூர்வமானதாகும்.

விலைவீழ்ச்சி ஏற்படாத வன்னம், விவசாயிகளை ஒருங்கிணைத்து, உற்பத்தி பெருக்கத்தை கட்டுபடுத்த ஒரே வகையான பயிர் சாகுபடியை விடுத்து, சந்தை தேவைக்கேற்ப விளைப்பொருள் உற்பத்திக்கான நெறிகாட்டு வழிமுறைகளை செயல்படுத்துதல், மிதமிஞ்சிய உற்பத்தியை வீணாக்காது, மதிப்புகூட்டு தொழில்நுட்பத்தை ,தொழிலாக அரசு நிர்வாகம் மூலம் நடைமுறைப்படுத்துதல், உற்பத்தி பெருக்கத்தின்போது, அப்பொருள் தேவையுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் போன்ற செயல்முறைகள் மூலம் விவசாயிகளின் விளைப்பொருள் வீழ்ச்சியை தடுத்திட செய்யலாம்.

அரசாங்கத்திற்கு எவ்வளவோ பணிகள் இருக்க, இதனையெல்லாம் அரசு துறைகள் மூலம் செய்திட இயலுமா என்கிற விவாதங்கள் எழலாம்.
அரசு துறைகளையே, அரசால்பராமரிக்க இயலாது, தனியாரிடம் விற்கும் நடைமுறையில், விவசாயியை, விவசாயத்தை பாதுகாக்க இவற்றையெல்லாம் செய்திட தான் வேண்டுமா..

கட்டாயம் செய்திடல் வேண்டும், ஏனெனில், மற்ற வளர்ந்த நாடுகளை போல் ,இந்தியாவில் விவசாயம் பெரும் நிலக்கிழாரிடம் தொழிலாக இல்லை, மாறாக, விவசாயம் எளிய மக்களிடம் கால் காணி, அரைக்காணி என்கிற அளவில் வாழ்வியலாக உள்ளது.
அனைத்திற்கும் வளர்ந்தநாடுகளின் நிர்வாக நடைமுறைகளை காப்பியடிக்கும் மற்றும் முன்மாதிரியாக மேற்கோள் காட்டப்படும் அரசு மற்றும் அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கும் பொருளியல் வல்லுநர்கள், விவசாயத்திலும் இந்த நடைமுறைகளை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

இந்தியா, உழைக்கும் எளிய மக்களின் அணிக்கோர்வை.
இங்கு பெருமுதலாளித்துவத்தை நிர்மாணித்திட இயலாது, என்பதே விவசாயிகளின் ஓராண்டை கடந்த தின்னமான புரட்சி, போராட்டம் எடுத்துரைக்கின்றது.
உழைக்கும் இவ்எளிய மக்களே, இந்திய மக்களாட்சி மற்றும் மாநிலங்களின் கூட்டாச்சி தத்துவத்தின் உறுதியான ,அடிப்படை அமைப்பு.
கோடிக்கணக்கான, இந்த எளிய விவசாயிகள், கோடிக்கணக்கில், இம்மண்ணில் பரவி இருப்பதினால் தான், இவர்களை முறையாக ஒருங்கிணைத்து ,இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு காண இயலவில்லை.

இந்தியாவை நிர்வகிக்கும், ஒவ்வோர் மாநில அரசும் ,உலகமயமாக்கல் கொள்கையின் தாத்பரியமான தொழில்துறைக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, இந்தியநாட்டின் தற்சார்பு நிலையை பறைசாற்றும் விவசாயத்தை, ஆகப்பெரும் தொழில்துறையாக வடிவமைத்திடும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பதே, கடந்த கால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளின் வரலாற்று பிழைகளுக்கு, ஆகச்சிறந்த திருத்தியமைக்கப்பட்ட, சீரான, இந்திய மக்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கும் உத்திரவாதமளிக்கும் செயல் வழிமுறையாகும் .

விலையேற்றத்திற்கு வினையாற்றும் இந்திய மக்களாகிய நாம், விலைவீழ்ச்சிக்கும் பொறுப்பேற்று கொள்வோம் என்கிற நிலைப்பாட்டினை நினைவில் கொண்டு, விலைவீழ்ச்சியை வெறும் செய்தியாக கடந்திட வேண்டாம்🙏

உழத்தி செல்விஜெய்குமார்
அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories