கிருஷ்ணகிரியில், ஒரு நிமிடத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில், ‘உயிர் ஆயிரம்’ மற்றும் ‘மைடி ஆப்’ அமைப்பு ஆகியவை இணைந்து, ஆன்லைன் மூலம், தன்னார்வலர்களை இணைத்து, ஒரு நிமிடத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
1000 மரக்கன்றுகள்:
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஏ.எஸ்.பி., கவுதம்கோயல், ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், உதவி வன பாதுகாவலர் கார்த்திகாயினி தலைமை வகித்தனர். 19 இடங்களில் ஆன்லைன் மூலம், ஒரே நிமிடத்தில், 536 தன்னார்வலர்கள், 1,072 மரக்கன்றுகளை (Saplings) நட்டனர். இந்நிகழ்ச்சியை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (International Book of Records) அமைப்பு, உலக சாதனையாக (World Record) பதிவு செய்துள்ளது. தன்னார்வலர்களுக்கு, பசுமை பங்காளர் சான்றிதழ்கள் (Green Partner Certificates) கிடைத்தது.
நீரின் தேவை:
மரங்களை நடுவது மட்டுமின்றி, தன்னார்வலருக்கு நீர் தேவை குறித்து, மைடி ஆப் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனக்கு உயிர் கொடுத்த நபருக்கு, அந்த செடி நன்றி சொல்லவும், பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாகவும், அந்த குறிப்பிட்ட செடியை, அந்த நபரோடு இணைக்க உதவுகிறது என்று உயிர் ஆயிரம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நடும் தன்னார்வலர்களின் பணி சிறப்பு வாய்ந்தது. மனிதர்கள் இல்லாமல் மரம் வாழ முடியும்; மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. மரம் நம் வாழ்வில் இன்றியமையாதது. ஒவ்வொருவரும் சமூக அக்கறையுடன் இயற்கையை பாதுகாக்க மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; மனித உயிர்களை பாதுகாப்போம்.