இந்தியத் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் ஆண்டிற்கு 2-5 கிலோ தேன் பெறலாம்…

தென் மாவட்டங்களுக்கு ஏற்ற தேனீக்கள் “இந்தியத் தேனீக்களே”. தேனீக்களிடம் இருந்து தேன் மட்டுமன்றி அதைவிட விலை மதிப்புள்ள பொருள்களான மெழுகு, அரசக்கூழ், மகரந்தம் போன்றவையும் கிடைக்கின்றன.

தேனீக்களில் பல வகைகள் உள்ளன.

மலைத் தேனீ:

இவை உருவத்தில் மற்ற தேனீக்களான கொம்புத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீக்களை விட பெரியவை.

இவை திறந்த வெளியில் கூட்டினை உயர்ந்த மரக்கிளைகள், பாறைகள், அணைக்கட்டுகள் மற்றும் பெரிய கட்டடங்களில் கட்டுகின்றன. உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் ஒரே மரத்தில் பல தேன் கூடுகளைக் காணலாம்.

அடையின் மேற்பகுதியானது தேன் சேமிப்பிற்கும், அடிப்பகுதி புழு வளர்ப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றை தொந்தரவு செய்தால், கோபத்துடன் அதிக தூரம் துரத்திச் சென்று கொட்டும் தன்மை உடையது.

இவை திறந்த வெளியில் மட்டுமே வாழ விரும்புவதால் இவற்றை தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது. இவை அதிக விஷத்தன்மை கொண்டது.

மலைத்தேனீக்களால் அதிகளவு மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. ஒரு ஆண்டிற்கு மலைத்தேனீ அடையில் இருந்து 35 கிலோ தேன் கிடைக்கும். இது தவிர மெழுகும் அதிகளவில் கிடைக்கின்றன.

கொம்புத்தேனீ:

இவை உருவத்தில் சிறியவை. எனவே, இவை சிறு தேனீ என்றும் அழைக்கப்படுகின்றன. மலைத்தேனீக்களைப் போல அடையினை மரக்கிளைகளிலும், புதர்களிலும் திறந்த வெளியில் கட்டுகின்றன.

இவற்றையும் நாம் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது. இதன் அடையிலிருந்து ஆண்டுக்கு ஒரு கிலோவுக்கு குறைவாகவே தேன் கிடைக்கும்.

இந்தியத் தேனீ:

தமிழ்நாட்டின் தென்மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் அதிகளவில் பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுவது இந்தியத் தேனீயாகும்.

இவை தேனடைகளை அடுக்கு அடுக்காகக் கட்டுவதால் இவற்றிற்கு அடுக்குத் தேனீ என்ற பெயரும் உண்டு. இவை இருட்டில் மட்டுமே வாழும் இயல்புடையது.

இவை அடைகளை அடுக்கடுக்காக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், பாழடைந்த கிணற்றுச் சுவர்கள் போன்றவற்றில் கட்டுகின்றன.

இந்தத் தேனீக்களைக் கோபப்படுத்தினால் கூட்டை விட்டே ஓடிவிடும் இயல்பு உடையது. அதிக தொந்தரவுக்கு உள்ளாகும்போது கொட்டுகின்றன.

இவை தேனீ வளர்ப்புக்கு ஏற்ற ரகமாகும். இந்தியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 2 முதல் 5 கிலோ வரை தேன் கிடைக்கும்.

இத்தாலியத் தேனீ:

இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அதிக தேன் தரக்கூடிய அடுக்குத் தேனீ வகையைச் சேர்ந்தது இத்தாலியத் தேனீயாகும்.

இவை அடைகளை இருட்டில் அடுக்கடுக்காகக் கட்டக்கூடியது. இவை வட இந்திய மாநிலங்களில் அதிகளவில் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.

சாந்தமான குணம் உடையவை. 2 கி.மீ. தொலைவு வரை பறந்து சென்று மதுரம், மகரந்தம் மற்றும் பிசின் போன்றவற்றை சேகரிக்கின்றன.

மலர்கள் அதிகமுள்ள தோட்டங்களில் மட்டுமே இவற்றை வளர்க்க இயலும். இத்தாலியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 40 கிலோ வரை தேன் கிடைக்கும்.

கொசுத்தேனீ:

இவை கொசு போன்று உருவத்தில் மிகவும் சிறியவை. இவற்றால் கொட்ட முடியாது. ஏனெனில் இவற்றின் கொடுக்குகள் வளர்ச்சி குன்றியிருக்கும். மாறாக கடிக்கும் திறன் உடையவை.

இவைகள் மரப்பொந்துகள், கல் மற்றும் மண் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் இடுக்குகளில் மண், மரப்பிசின் மற்றும்மெழுகு கொண்டு கூடு கட்டுகின்றன. இவற்றின் அடைகள் சிறிய திராட்சைக் குலை போல் காணப்படும்.

இதன் தேனானது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கூட்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 100 கிராம் தேன் மட்டுமே கிடைக்கும்.

இவற்றை மூங்கில் குழாய்களிலும், சிறிய மண்பானைகளிலும் வளர்க்கலாம். பயிர்களின் மகரந்தச் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories