ஈரி பட்டுப்புழு வளர்ப்பு!

ஈரி பட்டுப்புழு வளர்ப்பு!

 

ஈரி பட்டுப்புழு வளர்ப்பு!

சாமியா என்னும் ஈரி பட்டுப்புழு வளர்ப்பு, வன்யா பட்டுப்புழு வகைகளில் ஒன்றாகும். ஈரி பட்டுப்புழு வளர்ப்பு வீட்டில் நடக்கிறது. வன்யா பட்டுப்புழு வளர்ப்பு இந்தியாவில் 60-65% அளவில் உள்ளது. அசாம், ஆந்திரம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஈரி பட்டு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டானது கம்பளிப் பட்டு, அகிம்சா பட்டு எனவும் அழைக்கப்படும். ஏனெனில், இது பட்டுப் புழுக்களைக் கொல்லாமல் எடுக்கப்படும் பட்டு நூலாகும்.

பட்டுப்புழு வளர்ப்பு மனை

பட்டுப்புழு வளர்ப்பு மனையானது, போதுமான இடவசதி, காற்றோட்ட வசதி, சன்னல்கள் மற்றும் நைலான் வலை ஆகிய வசதிகளுடன் இருக்க வேண்டும். இதில் சிறப்பான அறுவடையைப் பெற, சாதகமான தட்பவெப்ப நிலையுடன், முறையான மருந்தடிப்பும் அவசியம்.

முட்டை அடைகாப்பு

குளிர்ச்சியான காலை அல்லது மாலை நேரத்தில் முட்டைகளை, ஈரப்பதமான துணிப்பை அல்லது வாழை இலையில் சுற்றிப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இவற்றை 25-26 டிகிரி வெப்பநிலை மற்றும் 80-85% ஈரப்பதமுள்ள சுத்தமான இருட்டறையில் கறுப்பு அட்டை அல்லது கறுப்புத் துணியால் மூடி வைக்க வேண்டும். காலை 6-7 மணிளவில் மறைமுக சூரியவொளியில் முட்டைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

முட்டைப் பொரிப்பு

முட்டைகள் அனைத்தும் பொரித்து 80% புழுக்கள் வெளிவந்ததும், இளம் ஆமணக்குத் தளிர்களை உணவாகக் கொடுக்க வேண்டும். பொரித்து இரண்டு நாட்களான புழுக்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்.

இளம்புழு வளர்ப்பு

இளம் புழுக்களைத் தட்டுகளில் வளர்க்க வேண்டும். இந்தப் புழுக்களுக்கு மிகவும் சத்தான மற்றும் சுத்தமான ஆமணக்கு இலைகளை உணவாகக் கொடுக்க வேண்டும். மேலும், மனையின் வெப்பநிலை 28 டிகிரியும், ஈரப்பதம் 80-85 சதமும் இருக்க வேண்டும்.

முதிர் புழு வளர்ப்பு

முதிர் பருவப் பட்டுப்புழுக்கள் வளரும் மனையின் வெப்பநிலை 23 டிகிரி இருக்க வேண்டும். வெப்பநிலை அதிகமானால் புழு வளர்ப்பில் பாதிப்பு ஏற்படும். அத்துடன் இதற்குக் கீழே வெப்பநிலை குறையாமலும் மனையைப் பராமரிக்க வேண்டும். இந்தப் பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு இலைகளைக் கொத்தாக இடலாம். அல்லது இரும்புக் கம்பியால் படுக்கை வசதியை அளிக்கலாம். மூங்கில் தட்டு, மரத்தட்டு, பிளாஸ்டிக் தட்டுகளில் வளர்த்தால் புழுக்கள் கீழே விழாமல் இருக்கும்.

கூடு கட்டும் பருவம்

கூடு கட்டும் நிலையை அடைந்த புழுக்கள், பிளாஸ்டிக் அல்லது மூங்கில் சந்திரிகைகள் மற்றும் உலர்ந்த இலைகளில் கூடுகளைக் கட்டும். கூடு கட்டி முடிய மூன்று நாட்களாகும். கூடு கட்டும் பருவத்தில் 25 டிகிரி  தட்பவெப்ப நிலை தேவை.

சிறப்புக் கூறுகள்

ஈரிப்பட்டு பலவகை மதிப்புகளையும் இயல்புகளையும் கொண்டது. வன்யா பட்டுப் புழுக்களில் ஈரிப் பட்டுப்புழுக்கள் மட்டுமே வீட்டில் வளர்க்கப்படுபவை. வடமாநிலங்களில் 2.73 இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. பெண்களை அதிகளவில் ஈடுபடுத்தி வருமானத்தைத் தருவதுடன், அவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கும் தொழிலாகவும் உள்ளது.

ஒரு கிலோ ஈரிப் பட்டுக்கூடுகளின் விலை 300-350 ரூபாய். ஒரு கிலோ கூட்டுப் புழுக்களின் விலை 30 ரூபாய். ஓராண்டில் ஏக்கருக்கு 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையில் வருமானம் கிடைக்கும். புழுக்களை வளர்க்கவும், விதைகளை எடுக்கவும் ஆமணக்கு உதவுகிறது.

த.ஏழுமலை, ஆய்வு மாணவர், பட்டுப்புழுவியல் துறை, வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் – 641 301.

முனைவர் செ.அறிவரசன், ஜெ.எஸ்.ஏ.வேளாண்மைக் கல்லூரி, மா.பொடையூர், கடலூர் மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories