களைகள் பரவும் விதம் கட்டுப்படுத்தும் முறைகள்
களைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றி செழிப்பாக வளரும் தன்மை உடையவை.
ஒவ்வொரு வருடமும் களைகள் ஏராளமான விதைகளை உற்பத்தி செய்கின்றன.
களைகளின் விதைகள், பயிர் விதைகளைவிட மிகவும் சிறியதாக உள்ளன களைகளின் விதைகளில் இறகுகள் போன்ற அமைப்பு இருப்பதால் காற்றில் வெகுதூரம் அடித்துச் செல்லப்படுகின்றன.
களைகளின் விதைகள் விலங்குகளின் உடலில் ஒட்டிக் கொண்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பயிர் அறுவடையாகும்போது களைகளின் விதைகள் தானியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சந்ததியைப் பெருக்குகின்றன.
பெரும்பாலான களைகள் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வேகமாகப் பெருகுகின்றன.
களைகள் எல்லா மண்ணிலும் செழிப்பாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை கிரகித்து விடும் தன்மை உடையவை.
வாழ்க்கைச் சுழற்சியை அடிப்படையாக கொண்டு : ஓராண்டுக் களைகள், ஈராண்டுக் களைகள்,
பல்லாண்டுக் களைகள்
ஓராண்டுக் களைகள்
ஒரு களையானது தனது வாழ்நாளை ஒரு பருவம் அல்லது ஒரு வருட காலத்திற்குள் வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிலைகளை அடைந்து மடிந்து விடுமானால் அதற்கு ஓராண்டுக் களை என்று பெயர். உ.ம். குப்பைமேனி, பார்த்தீனியம், கீழாநெல்லி.
ஈராண்டுக் களைகள்
ஒரு களை தனது வாழ்நாளின் முதல் பருவம் அல்லது வருடத்தில் வளர்ச்சி நிலையையும், இரண்டாவது பருவம் அல்லது வருடத்தில் உற்பத்தி நிலையையும் அடைந்து மடியுமானால் அதற்கு ஈராண்டுக் களை என்று பெயர். உ.ம். காட்டுத்துளசி, தொட்டாச்சுருங்கி, ஊமத்தை, விஷ முள்ளங்கி.
பல்லாண்டுக் களைகள்
சில களைகள் தொடர்ந்து எல்லாத் தட்பவெப்ப நிலையையும் தாங்கி பல வருடங்கள் வரை வாழ்கின்றன. இவற்றிற்கு பல்லாண்டுக் களைகள் என்று பெயர். உ.ம். அருகு, கோரை, துத்தி
நன்மை தரும் களைகள் (Beneficial Weeds)
களைகளை நிலத்தோடு சேர்த்து உழுவதால் நிலத்திற்கு தழைச்சத்து (Nitrogen) கிடைக்கிறது. உம். பயறு வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பசுந்தாள் உரப்பயிர்கள் ஏக்கருக்கு 20 முதல் 30 கிலோ தழைச்சத்தினை மண்ணில் சேமித்து வைக்கின்றன.
சில களைகள் களர் நிலங்களைச் சீர்திருத்தும் குணமுடையவை. களைகளை எரிப்பதால் சாம்பல் சத்து (Potash) கிடைக்கிறது. களைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் (Fodder) பயன்படுகின்றன.
மருத்துவ குணமுடைய களைகள் (Medicated weeds) மனிதர் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
உ.ம். கீழாநெல்லி, பிரண்டை பண்படுத்தாத நிலங்களில் காணப்படும்
களைகள் மண் அரிமானத்தைத் (Soil Erosion) தடை செய்கின்றன. உ.ம். அருகு, கோரை சில களைகள் மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
உ.ம். கீரை வகைகள் சில களைகளின் கிழங்குகள் (கோரை) அகர்பத்திகள் தயாரிக்கவும், சில களைகள் (எலுமிச்சை புல்) வாசனை எண்ணெய் தயாரிப்பிலும் உதவுகின்றன.
களைகளால் ஏற்படும் பாதிப்புகள் (LOSS Due to Weeds)
பயிர்களோடு போட்டியிட்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி மற்றும் நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து கொண்டு பயிர் மகசூலைக் குறைக்கிறது. பல்லாண்டுக் களைகள் நிலத்தின் மதிப்பைக் குறைக்கின்றன.
களை விதைகள் கலப்பதால் விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்பு குறைகிறது. களைகள் பூச்சி மற்றும் நோய்களுக்கு மாற்று ஊன் வழங்கிகளாக இருப்பதால், தொடர்ந்து பயிர் பாதுகாப்பு மேற்கொள்வதால் உற்பத்தி செலவு கூடுகிறது.
களைகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மையால் மனிதன் மற்றும் கால்நடைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நீர் நிலைகளில் வாழும் களைகள் பாசன வழிகளை அடைப்பதுடன் தண்ணீரையும் விரயமாக்குகிறது. களைகள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்வதால் மண்ணின் ஊட்டத்திறன் குறைகிறது.
களைகள் பரவும் முறைகள் (Dissemination of Weeds)
தரமற்ற விதைகள் மூலம் பரவுதல்
விதைப்பதற்கு வாங்கும் பயிர் விதைகளில் களை விதைகள் கலப்பு இருப்பின் நடவு வயலில் களைகள் தோன்றுகின்றன. எனவே சான்றிதழ் பெற்ற விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
களை விதைகள் பரவுகின்றன.
தொழு உரம் மூலமாக பரவுதல்
நன்கு மட்காத தொழுஉரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால் களைகள் பரவுகின்றன.
விதை உறக்கம் மூலமாக பரவுதல்
சாகுபடி நிலத்தில் தோன்றும் களைகளை பூக்கும் தருணத்திற்கு முன்பாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், களை விதைகள் மண்ணில் சேர்ந்து உறக்க நிலையில் இருந்து பல்லாண்டுகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
விலங்குகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுதல்
ஒட்டும் தன்மையுடைய களை விதைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது ஒட்டிக்கொண்டு வேறு இடங்களுக்கு பரவுகின்றன.
ஒருங்கிணைந்த களை நிர்வாக முறையின் நோக்கமாகும்.
ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு (Integrated Weed Management – IWM)
சாகுபடி, இயந்திரம், வேதியியல் மற்றும் உயிரியல் முறைகளைக் கையாண்டு பயிர்களை தாக்கும் களைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முறைக்கு ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு என்று பெயர்.
ஒருங்கிணைந்த களைக்கட்டுப்பாடு முறைகள் (Methods of Integrated Weed Management)
சாகுபடி முறை (Cultivation Method)
கோடை உழவு
கோடை மழை பெய்தவுடன் உழவை மேற்கொண்டு பல்லாண்டுக் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இதனால் களைகளின் வேர்கள் மற்றும் கிழங்குகள் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய ஒளி பட்டு அழிந்துவிடும். மண்ணின் நீர் பிடிப்புத்திறனும் மேம்படுத்தப்படுகிறது.
பயிர் இடைவெளி பராமரித்தல்
சிபாரிசு செய்யப்பட்ட பயிர் இடைவெளியை பராமரிப்பதால், களைகளின் தாக்கம் குறையும் என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
பயிர் சுழற்சி
ஒரு பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதால் சில களைகள் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி விளைச்சலைக் குறைக்கும். எனவே, பயிர் சுழற்சியை பின்பற்றி களைகளின் தொடர் பாதிப்பினை குறைக்கலாம்.
ஊடுபயிர் சாகுபடி
அதிக பயிர் இடைவெளியுள்ள பயிர்களில் வரிசைகளுக்கு இடையே ஊடுபயிர் பயிரிட்டு களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
நிலமூடாக்கு
பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் பயிர்களின் கழிவுகள் அல்லது பிளாஸ்டிக் காகிதங்கள் ஆகியவற்றை கொண்டு நிலமூடாக்கு செய்வதால் சூரிய ஒளி இல்லாமல் களை விதைகள் முளைப்பது தடைபடுகிறது.
இயந்திரமுறை (Mechanical Method)
உழவு முறைகள்
உழவுக் கருவிகளைப் பயன்படுத்தும்பொழுது களை விதைகளின் முளைப்பு மற்றும் வளர்ச்சி தடைபடுகிறது.
கருவிகள் மூலம் அகற்றுதல்
களைகொத்து, மண்வெட்டி, உந்தும் உருளை வடிவக் களைக்கருவி (Rotary weeder) மற்றும் ஜீனியர் கலப்பை ஆகிய ஊடுசாகுபடிக் கருவிகளை பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.
எரித்தல்
காய்ந்த நிலையில் உள்ள களைகள், களை விதைகள் மற்றும் சாகுபடி செய்யமுடியாத இடங்களில் உள்ள களைகள் ஆகியவற்றை எரித்து அழிக்கலாம்.
நீர் தேக்குதல்
நிலத்தில் நீரினைத் தேக்கி களை மற்றும் களை விதைகளின் சுவாசத்தைத் தடை செய்து களைகளை கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் முறை (Biological Method)
பூச்சிகள்
சப்பாத்திக் கள்ளியை அழிக்க டேக்டிலோபியஸ் டொமண்டோசஸ் என்னும் மாவுப்பூச்சியையும், பார்த்தீனியம் களையை அழிக்க சைகோகிரம்மா பைகலரேட்டா என்னும் வண்டையும் பயன்படுத்தலாம்.
.
இரசாயன முறை (Chemical Method)
களைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய இரசாயனக் கூட்டுப்பொருள்களுக்கு களைக்கொல்லிகள் என்று பெயர்.
களைக்கொல்லிகளை தெளிக்கும் தருணம் (Time of Application)
• விதைக்கும் முன்பு தெளித்தல்
• விதைத்த பிறகு,
• முளைக்கும் முன்பு தெளித்தல்
• முளைத்த பிறகு தெளித்தல்
விதைக்கும் முன்பு தெளித்தல் (Pre-sowing Application)
பயிரிடுவதற்கு முன் வயலில் இருக்கும் களைகளைக் கட்டுப்படுத்தவும், களைகளின் விதைகளை முளைக்கும் திறனற்றதாகச் செய்யவும் இக்களைக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. உ.ம். அட்ரசின், கிரமக்சோன்
விதைத்த பிறகு, முளைக்கும் முன்பு தெளித்தல் (Pre-emergence Application)
நிலத்தைப் பண்படுத்தி அதில் விதைகளை விதைத்த பிறகு, அவ்விதைகள் முளைப்பதற்கு முன்பே களைகளின் விதைகள் முளைத்துவிடும். இவ்வாறு களை விதைகள் முளைப்பதற்கு முன்பு இவ்வகைக் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உ.ம். அட்ரசின், அலாக்குளோர்
முளைத்த பிறகு தெளித்தல் (Post-emergence Application)
இம்முறையில் பயிர்களும், களைகளும் முளைத்து வளரும் போது களைக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. உ.ம். கிளைபோசேட், பெர்னாக்சோன்,