கூடுதல் விளைச்சல் கொடுத்த தென்னை… பஞ்சகவ்யாவின் பலே பயன்கள்!

கூடுதல் விளைச்சல் கொடுத்த தென்னை… பஞ்சகவ்யாவின் பலே பயன்கள்!

ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் தன்னுடைய பஞ்சகவ்யா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சேத்துமடைப் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நா.சண்முகசுந்தரம்.

“எனக்குப் பூர்விகம் திருப்பூர். வக்கீலுக்குப் படிச்சிருந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்து மேலதான் ஆர்வம் அதிகம். திருப்பூர்ல எனக்குச் சொந்தமா ஏக்கர் கணக்குல தோட்டம் இருக்கு. ஆனா, அங்க விவசாயம் செய்யக்கூடிய சூழல் இல்லை. அதனால 30 வருஷத்துக்கு முன்னாடியே, திருப்பூர்ல இருந்து பல மைல் தள்ளி, இங்க வந்து இந்த 30 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். தென்னை, மா, ஜாதிக்காய்னு மூணு பயிர்கள்தான் பிரதானம்.

நான் பொறந்து வளர்ந்த ஊர்ல நடந்த இயற்கைச் சீரழிவுகளைக் கண்ணால பார்த்து வளர்ந்தவன்ங்கிறதால இயற்கையைச் சீரழிக்காம விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆரம்பத்துல முறையா இயற்கை விவசாயம் செய்யத் தெரியாம குழப்பத்துல இருந்த போதுதான் முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் மூலமா, டாக்டர் நடராஜனின் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட பஞ்சகவ்யா குறித்துத் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் நம்மாழ்வார் ஐயா நடத்தின களப்பயிற்சிகள்லயும் கலந்துகிட்டதுல இயற்கை விவசாயம் குறித்துத் தெளிவு கிடைச்சது. அதுல குறிப்பா சொல்லப்போனா, பஞ்சகவ்யா கரைசல் குறித்த தெளிவு நல்லா கிடைச்சது” என்ற சண்முகசுந்தரம் தொடர்ந்தார்.

“அதுக்கப்புறம் 10 வருஷமா பஞ்சகவ்யா பயன்படுத்தி ட்டிருக்கேன். 15 நாட்களுக்கு ஒரு தடவை எல்லா பயிர்களுக்கும் பஞ்சகவ்யா கொடுத்திடுவேன். மா, ஜாதிக்காய் ரெண்டுக்கும் தெளிப்பு மூலமாவும் பஞ்சகவ்யா கொடுக்கிறேன். தென்னைக்குச் சொட்டுநீர்ப் பாசனத்துல கலந்து விட்டுடுவேன். பஞ்சகவ்யாவுக்கு மாறினதுக்கப்புறம் நான் அடைஞ்ச பலன்கள் ரொம்ப அதிகம்.

இந்தச் சேத்துமடைப் பகுதி, ரொம்பச் செழிப்பான பகுதி. தென்மேற்குப் பருவமழை பட்டம் தவறாமல் கிடைக்கிற பூமி. நாடெல்லாம் வறட்சி ஏற்பட்டாலும், எங்க பகுதி வளம் குறையாமல் இருக்கும். ஆனா, அப்படியான இடத்துல இந்த வருஷம் கடுமையான வறட்சி. பருவமழை கிடைக்கவே இல்லை. அக்கம் பக்கத்துல பல ஏக்கர்ல தென்னை மரங்கள்ல எல்லாம் மட்டைகள் காய்ஞ்சு விழுந்து மொட்டையாயிடுச்சு. ஆனா, என்னோட தோட்டத்துல இருக்கிற தென்னை, மா, ஜாதிக்காய் மூணுமே கடுமையான வறட்சியிலும் வாடாம உயிர்ப்போடு இருக்கு. அதுக்கு முழுக்காரணம் பஞ்சகவ்யாதான். இதைக் கொடுக்கிறப்போ மண்புழுக்கள் பெருகி மண்ணைப் பொலபொலப்பாக்கிடுது. அதனால பாசன நீர் சுலபமா மண்ணுக்குள் இறங்கி நிலத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கு. அதனாலதான் அவ்வளவு வறட்சியிலயும் மரங்கள் வாடாம இருந்துச்சு. மரப்பயிர்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கிறவங்க, வறட்சியைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை” என்ற சண்முகசுந்தரம், தான் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தும் விதம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“தென்னை மரங்களுக்கு 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாங்கிற அளவுல கலந்து 15 நாளுக்கு ஒருமுறை சொட்டு நீர்க் குழாய்கள் வழியா கொடுத்திடுவேன். அதனால, தென்னை மரங்கள்ல காய்ப்பு அதிகரிச்சிருக்கு. குரும்பை உதிர்றதும் குறைஞ்சிடுச்சு. அதேமாதிரி ஈரியோபைட் தாக்குதலும் படிப்படியா குறைஞ்சிடுச்சு. இப்போ என்னோட தோப்புல தென்னை மரங்கள் ஆரோக்கியமா இருக்கிறதுக்குக் காரணம் பஞ்சகவ்யாதான்.

500 மாமரங்களுக்கும் ஊடுபயிரா இருக்கும் ஜாதிக்காய் செடிகளுக்கும் பூ, பிஞ்சு, காய்னு மூணு பருவங்கள்லயும் பஞ்சகவ்யா தெளிச்சுடுவேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பாசனத்துலயும் கலந்து விட்டிடுவேன். அதனால பூக்கள் அதிகம் உதிர்றதில்லை. பிஞ்சுகள் ஊட்டமாக வளர்ந்து நல்ல வடிவத்துல காய்களாக மாறிடுது. மாம்பழங்கள் நல்ல எடையோட ருசியாவும் இருக்கு ஜாதிக்காயும் அதிகம் விளையுது.

ஆரம்பத்துல பசு மாட்டுச் சாணம், பசு மாட்டுச் சிறுநீர், பால், தயிர், நெய்னு அஞ்சு பொருட்களைத்தான் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிச்சாங்க. காலப்போக்கில் நிறைய விவசாயிகள் ஆராய்ச்சி செஞ்சு, அதுல கொஞ்சம் கொஞ்சமா வேற பொருட்களையும் சேர்த்து இப்போ பத்துப் பொருட்கள் வரை சேர்த்துத் தயாரிக்கிறாங்க. நான், 9 பொருட்களைச் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன் (5 கிலோ பசுஞ்சாணம், 2 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர், 2 லிட்டர் பசும்பால், 2 லிட்டர் புளித்த தயிர், அரைக்கிலோ நெய், 3 லிட்டர் இளநீர், 3 லிட்டர் கரும்புச்சாறு, 12 கனிந்த வாழைப்பழங்கள், 2 லிட்டர் சுத்தமான கள்). பஞ்சகவ்யாவுல கள்ளைச் சேர்க்கிறதால நொதிப்புத்தன்மை அதிகரிச்சு பலன் கூடுது. இங்க கள் இறக்க தடை இருக்குறதால, நான் கேரளாவில் இருந்து வாங்கிட்டு வந்து தயாரிக்கிறேன். என் தோட்டத்துல இருந்து அரை மணி நேரத்துல, கேரளா போயிட முடியும். இப்படி கள் வாங்க சாத்தியமில்லாத விவசாயிகள், இளநீரைப் புளிக்க வெச்சு பயன்படுத்துறாங்க. அதுவும் ஓரளவு நல்லாவே பலன் கொடுக்குது” என்ற சண்முகசுந்தரம் நிறைவாக,

“பஞ்சகவ்யா, கால்நடைகளோட பல நோய்களுக்கு மருந்தா பயன்படுது. நாமும்கூட அதைக் குடிச்சு பல நோய்களை அண்ட விடாம தடுக்க முடியும். அதனால மனிதர்கள் குடிக்கிற விதத்துல ‘அமிர்த சஞ்சீவி’ங்கிற பெயர்ல பஞ்சகவ்யாவை மேம்படுத்தியிருக்கேன். நான் எல்லார்கிட்டயுமே பயிருக்கும் உயிருக்கும் பாதுகாவலன், பஞ்சகவ்யான்னுதான் சொல்லிட்டு இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,நா.சண்முக சுந்தரம், செல்போன்: 98422 42936

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories