கூன் வண்டுகளிடமிருந்து தென்னையை காக்கும் முறைகள்

கூன் வண்டுகளிடமிருந்து தென்னையை காக்கும் முறைகள்

நோய் தாக்கம்

தென்னை மரத்தில் சிவப்புக் கூன் வண்டுகளின் தாக்குதலிலிருந்து மரங்களை பாதுகாத்து பராமரிப்பு செய்யவும், மகசூலை அதிகரிக்கவும் கீழ்க்காணும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிப்பது அவசியம்.

மழைக்காலத்தில் அதிக சேதத்தை விளைவிப்பது சிவப்புக் கூன் வண்டாகும். வளர்ச்சியடைந்த வண்டுகளால் நேரடி பாதிப்பு இல்லை. ஆனால், இதன் புழுக்களால் ஏற்படும் சேதம் மிக அதிகமாகும். பொதுவாக 5 முதல் 15 வயதுக்குள் இருக்கும் தென்னை மரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குருத்தழுகல், இலை அழுகல் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய இளம் தென்னை மரங்களை சிகப்பு கூன் வண்டு அதிகம் தாக்குகிறது. இந்த கூன் வண்டு குருத்து வழியாகவும், மர உச்சியிலுள்ள தண்டுப்பகுதி மற்றும் மரத்தின் அடித்தண்டுப் பகுதிகளில் சிறிய துவாரங்களை ஏற்படுத்தி முட்டைகளை இடுகின்றன.

முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், குருத்து மற்றும் வளரும் தண்டுப் பகுதியில் உள்ள மிருதுவான திசுக்களை தின்று பாதிக்கும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத போது மரங்கள் சாய்ந்து இறந்துவிடும். இந்தக் கூன்வண்டின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டறிவது சிறிது கடினமானது இருப்பினும் தாக்குதலின் அறிகுறிகளை முழுவதும் அறிந்தால் ஆரம்ப நிலை சேதத்தை தவிர்க்க முடியும்.

அறிகுறிகள்

மஞ்சள் நிறத்துடன் உள் மற்றும் நடு இலையடுக்குகளில் உள்ள இலைகள் வாடியது போன்று காணப்படும். மட்டைகளின் அடிப்பாகத்தில் நீள வெடிப்புகள் காணப்படும். மரங்களின் நுனிப்பகுதி அழுகி ஒரு வித துர்நாற்றம் வீசும். தண்டு மற்றும் மரத்தின் அடிப்பாகத்தில் சிறிய துவாரங்கள் காணப்படும்.

துவாரங்களின் வழியாக புழுக்கள் தின்று துப்பும் தென்னை நார்கள் வெளிப்படும். துவாரத்திலிருந்து பழுப்பு நிற திரவம் வெளிவரும். மரத்தின் அடியிலும், மட்டையின் அடியிலும் கூட்டுப்புழுவின் கூடு அல்லது முழு வளர்ச்சியடைந்த வண்டு அல்லது தாக்கப்பட்ட நார்கள் காணப்படும். முழு வளர்ச்சியடைந்த கூன்வண்டு சிவப்பு கலந்த பழுப்பு நிறமாகவும் இதன் மேற்பகுதியில் 6 கரும்புள்ளிகளுடன் இருக்கும்.

இதன் வாய் பாகம் தும்பிக்கை போல நீண்டு வளைந்திருக்கும். இதன்மீது ஆண் வண்டுகளுக்கு ரோமங்கள் அடர்த்தியாக காணப்படும். கூன் வண்டுகள் முழு வாழ்க்கைப் பருவம் 3 – 6 மாதங்களாகும்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

  1. மரங்களின் நுனிப் பகுதியை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
  2. தாக்கப்பட்ட இறந்த மரங்களை உடனே வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். இதனால் கூன்வண்டுகள் மீண்டும் பரவுவதை தடுக்கலாம்.
  3. மரங்களின் தண்டுப் பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
  4. மேலும், துவாரங்கள் இருப்பின் சிமண்ட் களிமண் பூசி அடைக்க வேண்டும்.
  5. மரங்களின் தண்டுப் பகுதியின் மீது படிக்கட்டு போன்ற அமைப்பை செதுக்கக் கூடாது.
  6. பச்சை மட்டைகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் தண்டிலிருந்து 120 செ.மீ. தள்ளி வெட்ட வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறை

  • நுனி நடுக்குருத்து மற்றும் இலை மட்டை இடுக்குகளில் வேப்பங்கொட்டை தூள் 5 கிராம் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரண்டு முறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூன் வண்டு முட்டையிடுவதை தடுக்கலாம் (அல்லது) முதல் மூன்று இலை இடுக்குகளில் மூன்று பூச்சி உருண்டைகளை மூன்று (துளையுடள் உள்ள) பாக்கெட்டுகளில் 6 மாத இடைவெளியில் இரண்டு முறை வைக்கவும்.
  • மரங்களின் தண்டுப்பகுதியில் உள்ள தாக்கப்பட்ட துளைகளில் 5 மி.லி. மோனோகுரோட்டோ பாஸ் 35 எஸ்.எல்., 5 மி.லி. டைக்குளோர் வாஸ் 76 டபியு சி மருந்தை கலந்து ஊற்றி துளைகளை சிமென்ட் அல்லது களிமண் பூசி அடைத்து விடுதல் வேண்டும்.
  • அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களில் வேரின் மூலம் 10 மிலி  மேனோகுரோட்டோபாஸ் 36 எஸ் எல் மருந்தை 10 மி.லி. தண்ணீருடன் கலந்து 45 நாள்கள் இடைவெளியில் மூன்று தடவை தொடர்ந்து செலுத்தவும். வேர் மூலம் மருந்து செலுத்துவதற்கு முன் காய்களை அறுவடை செய்து விட வேண்டும். மருந்து செலுத்திய பிறகு 45 நாள்கள் கழித்துதான் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
  • குருத்தழுகல், இலையழுகல் காண்டமிருக வண்டுகளால் தாக்கப்பட்ட மரங்களில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாவதால் மரங்களை முதலில் பூஞ்சாணக் கொல்லி மற்றம் பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி அழிக்க வேண்டும். 25 கிலோ கரும்புச் சாற்றுடன் (கோழை) ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் மற்றும் அசிட்டிக் அமிலம் 5 மில்லி கலந்து நீள வாக்கில் வெட்டப்பட்ட இலை மட்டை துண்டுகளை பானைகளில் போட்டு ஏக்கருக்கு 30 வீதம் தென்னந் தோப்பில் வைத்து கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.

 

 

தகவல் : வேளாண்மைத்துறை அலுவலகம், புதுச்சேரி

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories