கோரை களையில் கூட அதிக வருமானம் பெறலாம். எப்படி?…

** கோரை என்பது உலகெங்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு களை ஆகும். இது உலகின் “”மிகவும் மோசமான களை” என்று வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. உலகின் 92 நாடுகளில் இது மிகவும் பிரச்னைக்குரிய களையாகும். கரும்பு, நெல், காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிர்களை மிகவும் பாதிக்கிறது.

** ஆனால் கோரையின் கிழங்குகள் மருத்துவக் குணம் உடையதாகையால் மூலிகைக் கம்பெனிகளால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபார ரீதியாக கோரைக் கிழங்கு நாகர்மோதா என அழைக்கப்படுகிறது. கோரையின் தாயகம் ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் ஆகும்.

** இதனுடைய வேர் மற்றத் தாவரங்களைப் பாதிக்கும் வேதிப்பொருளை வெளியிடுகிறது. கோரையானது சங்கிலித் தொடர் போன்று கிழங்குகளைத் தோற்றுவிப்பதால் முழுமையாக நீக்கம் செய்வது கடினம்.

** களை நீக்கம் செய்யும் போதும் இதனுடைய உடைந்த வேர் பூமிக்குள் இருப்பதால் மீண்டும் வளரும். கிழங்குகள் வறட்சி மற்றும் பிற காரணிகளால் பாதிக்கப்படாது. களைக் கொல்லிகள் கோரையின் இலைப் பகுதியை மட்டுமே பாதிக்கும், கிழங்குகளையல்ல.

** எனவே இத்தகைய பிரச்னைக்குரிய களையின் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வழிகளைக் காண்போம்.

** இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள ஏராளமான மூலிகை சார்ந்த மருந்து கம்பெனிகள் கொள்முதல் செய்கின்றன. மேலும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இதனை கொள்முதல் செய்கின்றன.

** இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் 158, 864க்கு ஈ மதிப்பிலான கோரைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. மேலும் ஈரான், இலங்கை, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்கின்றன.

** தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்ட மூலிகை சேகரிப்போரால் தரிசு நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு மேற்கண்ட ஊர்களில் உள்ள மூலிகை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.

** கோரைக் கிழங்கானது ஈரம் மிகுந்த மற்றும் வறட்சியான தரிசு நிலங்களிலும் ஆண்டு முழுவதும் காணப்படும். எனினும் இதற்கான அறுவடைக் காலம் நவம்பர் – ஜனவரி ஆகும். கிழங்குகள் தோண்டப்பட்டு, கழுவி சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும்.

** குறைந்த பட்சம் 1 வாரம் வரை காய வைத்தல் அவசியம் ஆகும். அதன் பின்பு கிழங்கினை ஒட்டியுள்ள முடி போன்ற நீட்சிகள் நெருப்பினில் பொசுக்கி நீக்க வேண்டும். பின்பு விற்பனைக்கு அனுப்பலாம். சாக்குகளில் நிரப்பும் முன்பு மண் மற்றும் மெல்லிய வேர் போன்ற கழிவுகள் நீக்கப்பட வேண்டும்.

** கோரையில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவு கிழங்குகளை உற்பத்தி செய்யும் பலவித கோரைகள் உள்ளன. சிறிய கிழங்குகளை உடைக்கும் போது வெள்ளை நிறத்திலும், பெரிய கிழங்குகளின் உட்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

** மூலிகைக் கம்பெனிகள் பெரும்பாலும் சிறிய கிழங்குகளையே அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. எனவே கோரையும் வருமானம் தரும் களையேயாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories