சனப்பு தெளிக்கச் சரியான நேரம்: தழைச்சத்துக்கு ஊட்டம் கிடைக்கும் :

தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் நெல், கரும்பு, வாழை, மற்றத் தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளன பயிர்களுக்குத் தேவையான சத்துகளை மண் வழங்கினாலும்கூட, மண்ணுக்குத் தழைச்சத்து என்பது மிகவும் முக்கியமானது. காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்பெல்லாம் எருக்கஞ்செடி, ஆனைத்தலை, நொச்சி இலை எனப் பல இலைகளைத் தண்ணீர் கட்டிய வயலில் நான்கைந்து நாட்களுக்கு ஊறவைத்துப் பின்னர் அப்படியே மடக்கி ஏர்பூட்டி உழுதால் வயலுக்குத் தேவையான தழைச்சத்து கிடைத்து வந்தது. தழைச்சத்துக்கு மாற்று : தற்போது இந்த இலைகளைத் தேடிப்பிடித்துப் பறித்துக் கொண்டுவந்து வயலில் உரமாக்க விவசாயிகளுக்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. தேடினாலும் வயலுக்குப் போதுமான அளவுக்குத் தழைகளும் கிடைப்பதில்லை. இதனால்தான் வேளாண்மைத் துறை தற்போது சனப்புச் செடிகளைத் தழைச்சத்துக்குப் பரிந்துரை செய்கிறது. இந்தச் சனப்பு செடிகளைத் தெளித்து 45 நாட்களில் பூத்துக் குலுங்கிய பின், அப்படியே தண்ணீர்விட்டு மடக்கி ஏர் பூட்டி உழுவதால் வயலுக்குத் தேவையான தழைச்சத்து கிடைத்துவிடுகிறது. கிலோ ரூ. 55 : இது குறித்துக் கும்பகோணம் கோட்ட வேளாண் உதவி இயக்குநர் லெட்சுமிகாந்தன் பகிர்ந்துகொண்டது: “சனப்பு எனப்படும் தழைச்சத்துத் தாவரம், வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்ற உரமாகும். இதில் நுண்ணூட்ட சத்துகள் அதிகம் அடங்கியுள்ளன. பசுந்தாள் உரமான சனப்புத் தாவர விதையை ஒவ்வொரு வயலிலும் தெளித்துச் சிறிது தண்ணீர் விட்டால்போதும். குறைந்தபட்சம் இரண்டரை அடி முதல் நான்கு அடிவரை வளரும். இந்தச் செடிகளை வளர்த்து 45 நாட்கள் கழித்துத் தண்ணீர் விட்டு மக்கிப் போகும் அளவுக்கு உழவு செய்ய வேண்டும். இந்தச் சனப்பு விதை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. சனப்பு விதை ஒரு கிலோ ரூ. 55. தற்போது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. விதையாகவும் விற்கலாம் : மே மாதத்தில் பம்பு செட் வைத்திருப்பவர்களும், கோடை மழையைப் பயன்படுத்த நினைக்கும் விவசாயிகளும் இதை வயலில் தெளிக்கலாம். மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலர்ந்தவுடன் ஜூன் மாதத்தில் சனப்புச் செடிகளை உழவு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், இந்தச் சனப்பை விதையாக எடுப்பதற்கு 110 நாள் வயலில் வளர்த்தால், சனப்பு விதை கிடைக்கும். இந்த விதையை வெளியில் ரூ.60-க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories