தென்னைக் கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

தென்னைக் கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

அறிமுகம்

இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20-25 நரட்கள் உயிர் வாழும். ஒரு தாய் ஒட்டுண்ணி சுமார் 100 முதல் 125 முட்டைகள் இடும். புழுக்களின் உடலின் வெளிப்புறத்தில் முட்டைகளை வைக்கும். முட்டைகளின் எண்ணிக்கை புழுவின் உடல் நீள அளவிற்கும் பருமனுக்கும் தக்கவாறு வேறுபடும். பிரக்கோனிட் முட்டைப்பருவம் ஒரு நாள் ஆகும். புழுப்பருவத்தை 4-6 நாட்களிலும், கூட்டுப்புழு பருவத்தை 3-4 நாட்களிலும் முடிக்கின்றன. இதன் மொத்த வாழ்க்கைப்பருவம் 8-10 நாட்கள் ஆகும்.

ஆய்வுக்கூடங்களில் பிரக்கான் பிரிவிகார்னிஸ் ஒட்டுண்ணியை நெல் அந்துப்பூச்சியின் புழுப்பருவம் அல்லது தென்னை கருந்தலைப்புழு இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம்.

உற்பத்தி முறை

ஒரு சிறிய கண்ணாடி குழாயில் (6”x1”) 50 சதம் தேன் கலவியினை பஞ்சில் நனைத்து சோதனை குழாய் உட்புறம் ஒட்டி வைத்து முழு வளர்ச்சி அடைந்த பிரக்கோனிட் ஆண், பெண் ஒட்டுண்ணிகளை சம எண்ணிக்கையில் இருக்குமாறு விட்டு இரண்டு நாட்கள் இனச்சேர்க்கை நடைபெற அனுமதிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து ஆண் ஒட்டுண்ணிகளைத் தனியாகப் பிரித்து எடுத்து விட வேண்டும்.

ஒட்டுண்ணி உற்பத்தி  முறை

 • நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கின் கண்ணாடிச் சிம்னியினை நன்றாக சுத்தம் செய்யவும்.
 • அரிக்கேன் விளக்குக் கண்ணாடியின் இரண்டு பக்கங்களும் திறந்து இருப்பதைக் காணலாம். கண்ணாடிச் சிம்னியைத் தலைகீழாக திருப்பி பிடித்தால் அகன்ற வாய்ப்பகுதி மேல்புறமாகவும், குறுகிய வாய் பகுதி மேல் ஒரு மெல்லிய மஸ்லின் அல்லது வாயில் துணி அல்லது மெல்லிய திசுக்காகிதம் ஒன்றினை (10×10 செ.மீ.) வைத்து இரப்பர் நாடாவினால் இறுக்கி விடவும். அதன் மேல் நெல் அந்திப்பூச்சியின் புழுப்பருவத்தினை ஒரு புழுப்பருவத்தினை ஒரு பெண் பிரக்கோனிட்டிற்கு 2 புழு என்ற விகிதத்தில் வைக்கவும்.
 • நெல் அந்திப்பூச்சி புழுக்கள் 20 நாள் வயது உடையதாகவும் 1.5 செ.மீ. நீளமுள்ளதாகவும், மிருதுவான மற்றும் ஆரோக்கியமான புழுக்களாகவும் இருக்கும் படி தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மற்றுமொரு மெல்லிய துணியை புழுக்களின் மேல் வைத்து இரப்பர் நாடா கொண்டு இறுக்கவும்.
 • தற்பொழுது இரண்டு மெல்லிய துணிகளுக்கிடையே புழுக்கள் வைக்கப்படுகின்றன. ஆதலின் இம்முறையை ‘சாண்ட்விச்’ அல்லது இடைப்படுத்துதல் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
 • கண்ணாடிச் சிம்னியின் குறுகிய வாய்ப்பகுதி வழியாக பிரக்கோனிட் தாய் ஒட்டுண்ணிகளை இரண்டு புழுவிற்கு ஒரு பெண் ஒட்டுண்ணி என்ற விகிதத்தில் உள்ளே செலுத்த வேண்டும்.
 • பின்னர் சிம்னியின் குறுகிய கீழ்வாய் பகுதியினையும் ஒரு துணி கொண்டு மூடி இரப்பர் நாடா இட்டு கட்டிக்கொள்ள வேண்டும்.  ஒட்டுண்ணிகளுக்கு உணவாக 50 சதம் தேன் கலவையினை பொட்டு பொட்டாக ஒரு மெழுகு தாளில் வைத்து சிம்னியின் உள் வைக்க வேண்டும்.
 • ஒட்டுண்ணிகள் சிம்னியின் அகன்ற வாய்ப்பகுதி பக்கம் சென்று மெல்லிய துணியினைத் துளைத்து  தன் முட்டையிடும் உறுப்பு மூலமாக புழுக்களை முதலில் குத்தி செயலிழக்க செய்த பின்னர் அவற்றின் மீது முட்டைகளை இடுகின்றன.
 • ஒரிரு நாட்களுக்குப் பின்னர் தாய் ஒட்டுண்ணிகளை குறுகிய வாய்ப்பகுதியின் வழியாக வெளியேறி புதிய புழுக்களை ஒட்டுண்ணுதற்கு பயன்படுத்தலாம்.
 • நான்கு நாட்கள் கழித்து கண்ணாடி சிம்னியின் அகன்ற வாய்ப்பகுதியில் கட்டப்பட்ட இரப்பர் நாடாவை அகற்றி மேல் பகுதியில் உள்ள இரண்டு துணிகளையும் எடுத்துப் பிரித்துப் பார்த்தால் ஒட்டுண்ணி தாக்கப்பட்ட நெல் அந்திப்பூச்சி புழுக்களைப் பார்க்கலாம்.
 • ஒட்டுண்ணிகளின் புழுக்கள் வளர்ந்து ஓம்புயிரி புழுவை அழித்த பின் அருகாமையிலேயே துணியின் மீது கூடுகட்டி கூட்டுப்புழுக்களாக மாறும். இறந்த ஓம்புயிரி புழுக்களை மட்டும் ஒரு சிறிய இடுக்கி அல்லது சாமனத்தின் உதவியால் அகற்றி விட வேண்டும். ஏனெனில் இறந்த புழுக்கள் உடல் மீது வேறு பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் பெருகி துர்நாற்றம் வீச வாய்ப்புண்டு. ஒட்டுண்ணியின் கூட்டுப்புழுக்களுடன் கூடிய துணியினை வேறு ஒரு அட்டைப்பெட்டி அல்லது நெகிழி(பிளாஸ்டிக்) கொள்கலன்களில் சிறிது காற்றோட்டத்துடன் வைத்திருந்தால் முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் வெளிவரும் நாட்களில் அவற்றைச் சேகரிக்கலாம்.
 • ஒட்டுண்ணிகள் கூட்டுப்புழு பருவ நிலையில் குளிர் சாதன பெட்டிகளில் 10 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் சுமார் 20 நாட்கள் சேமிக்கலாம். முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளை குளிர் சாதனப்பெட்டியில் வைத்து சேமிக்க முடியாது.

தேவையான அளவு

தென்னைக் கருந்தலைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒரு முறை மரத்திற்கு 10 பிரக்கோனிட் ஒட்டுண்ணிகள் தேவை. ஏக்கருக்கு ஒரு முறை 800 ஒட்டுண்ணிகள் வீதம் தேவை. இது போன்று கருந்தலைப்புழு பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை பிரக்கோனிட் ஒட்டுண்ணி விட்டு நல்ல பலன் பெறலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories