தென்னையில் நீர் பராமரிப்பு

தென்னையில் நீர் பராமரிப்பு

அறிமுகம்

தென்னை மணற்பாங்கான நிலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது. தென்னை நன்கு செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கவும், தென்னையின் கொண்டைப் பகுதியில் உள்ள மட்டைகள், தென்னங் குலைகள் திரட்சியாக இருக்கவும், இரசாயன மாற்றங்களுக்கும் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், ஒளிச் சேர்க்கை நடை பெறவும், தேவையான பயிர் உணவுகளை மண்ணிலிருந்து கரைந்த நிலையில் உள்வாங்கி கொள்ள கோடைக் காலத்தில், நீர்ப்பசானம் இன்றியமையாதது.

தண்ணிர் பற்றாக்குறை ஏற்பட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றி, விளைச்சல் பாதிப்புக்குள்ளாகும், மட்டைகள் வளைந்து தொங்குதல், அடிமட்டைகள் ஒடிந்து விழுதல், குரும்பை, முதிர்ச்சி அடையாத இளங்காய்கள் உதிர்வது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பெருமளவிற்கு விளைச்சல் இழப்பு ஏற்படும். அத்துடன் காய்கள் சிறுத்து கொய்பரையின் எடையும் குறைந்து விடும். இவ்வகை காரணங்களுக்கு தென்னை மரத்தின் வேர் அமைப்புகளை அறிந்து கொண்டு நீர்ப்பாசன முறைகளைக் கடைபிடித்து நீர் வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்தவம், நீர் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்கலாம்.

வேர்களின் அமைப்பு

தென்னைக்கு இடைவெளியாக வரிசையில் 7.5 மீட்டரும் மரத்திற்கு மரம் 7.5 மீட்டரும் இருக்கும் நிலையில் 56 சதுர மீட்டர் இடத்தினை அடைத்துக்கொள்கிறது. இருந்த போதிலும் மரத்தின் 90 விழுக்காடு வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள்ளேயே, அதாவது 12.5 சதுர மீட்டருக்குள் காணப்படுகிறது. தென்னை ஒரு விதை இலைத்தாவர இனத்தைச் சார்ந்தது. ஆகவே, சல்லி வேர்கள் மட்டும் மரத்தின் அடி மத்தளப்பகுதியிலிருந்து இரண்டு மீட்டர் ஆரத்திலும், 1.5 மீட்டர் ஆழத்திலும், சுமார் 4,000 முதல் 7,000 வேர்கள் சமமட்டத்திலும், பல்வேறு கோணங்களிலும் சாய்வாகவும், கீழ் நோக்கியும் அமைந்திருக்கும்.

தென்னைக்கு தேவையான நீர் மேலாண்மையை வேர் பகுதிகளுக்குள் செய்தல் அவசியமாகின்றது. தென்னையின் தண்ணிர் தேவையானது பருவநிலை, மண்ணின் தன்மை, மரத்தின் வயதினைப் பொறுத்துள்ளது. பொதுவாக, தென்னங்கன்று நட்ட முதல் ஆண்டு வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10 லிட்டர் தண்ணிரும், இரண்டு வயது முதல் மூன்று வயது இளம் மரங்களுக்கு வாரம் இரு முறை 40 லிட்டர் தண்ணிரும் அதன் பின் வாரம் ஒரு முறை 600 லிட்டர் நீரும் அவசியம்.

முறையற்ற நீர்ப்பாசனம்

தென்னையின் பெரும்பாலான உறிஞ்சி வேர்கள் 2 மீட்டர் ஆர வட்டப் பரப்பளவிற்குள்ளேயே அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்தல் போதுமானது. பரவல் நீர்ப்பாசனத்தால் தண்ணீர் அதிகளவில் விரையமாவதுடன், களைகள் முளைத்து மண்ணிலுள்ள ஈரத்தினையும், பயிர்ச்சத்துக்களையும் வெகு விரைவில் வெளியேற்றிவிடுகிறது.

இடப்படுகின்ற உரங்கள் கரைந்து மண்ணின் ஆழத்தில் வேர்களுக்கு அப்பாலும் சென்று விடுவதுடன், பயிர் உணவுகள் அதிக அளவில் நீரில் கரைந்து அடர்த்தி குறைந்து விடுகின்றன. மேலும், ஒரு மரம்விட்டு ஒரு மரத்திற்கு நோய்க்காரணிகள் பரவுவதற்கு ஏதுவாகிறது. பரவல் நீர்ப் பாசன முறையினைத் தென்னையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முறையற்ற நீர்ப்பாசன முறையை தொடர்ந்தால், நிலத்தடிநீரின் அளவு குறுகிய காலத்தில் குறைந்துவிடும். அதன் காரணமாக மேலும் மேலும் ஆழ்குழாய்களின் ஆழத்தை அதிகரித்து நீர் எடுப்பதன் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்பிட கடல் நீர் நிலத்தடியில் புகுந்திட ஏதுவாகும். பிற்காலங்களில் களர், உவர் மண்ணாக மாறிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நிலத்தடி நீரை நிலை நிறுத்திட முறையான பாசன முறைகளைக் கையாள வேண்டும்.

வட்டப்பாத்தி முறை

நீர் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க, தென்னை மரத்தை சுற்றி, 1.8 மீட்டர் ஆரத்தில் வட்டப் பாத்திகள் அமைத்து நீர் கட்டும் முறை சமதளம் உள்ள நிலங்களுக்கு ஏற்றது. இரண்டு தென்னை மர வரிசைக்கு இடையில் பாசன வாய்க்கால் அமைத்து, ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் உள்ள வட்டப்பாத்திகளில் தனித்தனியே தண்ணிர் கட்ட வேண்டும்.

இதனால் ஒவ்வொரு மரத்திற்கும் இடப்படுகின்ற உரங்கள் தண்ணிரால் அடித்துச் செல்லப்பட்டு வீணாவதை தடுப்பதுடன் உர பயன்பாட்டுத் திறனையும் கூட்டலாம். வட்டப்பாத்தியில் 6 செ.மீ. தண்ணிர் கட்டும் பொழுது 600 லிட்டர் தேவைப்படும். இவை சுமார் ஒரு வாரத்திற்கு போதுமானது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும், மண்வகைக்கு ஏற்பவும் இந்த நீர்ப்பாசன இடைவெளியை சிறிது மாற்றி நீர்ப்பாய்ச்சலாம்.

சொட்டுநீர்ப்பாசனம்

தென்னைக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஒரு சிறந்த முறையாகும். சரிவான நிலப்பகுதிகள் சமதள, மணற்பாங்கான நிலங்களில் இம்முறையில் பாசனம் செய்வதன் மூலம், இருக்கின்ற தண்ணிரை தேவையான அளவு கொடுத்து அதிக மரங்களை பராமாரிக்கலாம் .

தென்னை மரத்தின் நான்கு திசைகளிலும் ஒரு மீட்டர் துாரத்தில் 45 செமீ நீள, அகல, ஆழ குழிகளை எடுத்து அதில் சிறிதளவு மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது நெல் பதர் இவைகளை இட வேண்டும். அதில் 40 மீட்டர் விட்டம் 30 செ.மீ. நீளமுள்ள பிவிசி குழாயை செங்குத்தாக வைத்து அதில் சொட்டு நீர் பாசனக் குழாயை (டிரிப்பர்களை) 15 செ.மீ. ஆழத்தில் வைப்பதால் தண்ணிர் நேராக தென்னையின் வேர்ப் பகுதிக்கு கிடைக்கின்றது. சொட்டு நீர்ப்பாசனத்துடன் இட வேண்டிய உரங்களைக் கரைத்து வேர்ப்பகுதியில் சொட்டச் செய்யலாம்.

இதனால் களைகள் முளைப்பது குறைகின்றது உர பயன்பாட்டுத்திறன் மேம்படுகிறது. சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் 30 விழுக்காடு தண்ணிரை சேமிக்கலாம். ஆரம்ப காலத்தில் செலவு அதிகமானாலும், எளிதில் கையாளவும், பராமரிப்பு செலவு குறையவும், கோடைக்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது தொட்டிகளில் தண்ணிரை ஏற்றி வைத்திருந்து குறைவான அழுத்தத்திலேயே நீர் அளிப்பதைத் தொடரலாம். தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள் கரையக்கூடிய கலவையாக இப்போது கிடைக்கின்றன. இம்முறையில் நுண்ணுாட்டத்தையும் தேவையான அளவு அளிக்கலாம். இதனால் உர விரையம் தவிர்க்கப்படுவதுடன் இடுவதற்கான செலவையும் குறைக்கலாம்.

உரிமட்டைகள் முலம் நீர் பராமரிப்பு

தென்னந்தோப்புகளில் இரண்டு தென்னை மர வரிசைகளுக்கு மத்தியில் 2 மீட்டர் அகலமும், 50 செ.மீ. ஆழமும் கொண்ட நீண்ட பள்ளம் வெட்டி அதனுள் உரிமட்டைகளை நார்ப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு அடுக்கி அதன் மீது 5 செ.மீ. உயரத்திற்கு மண் இட்டு மூட வேண்டும். இதே போன்று மூன்று அடுக்குகள் வைக்க வேண்டும். மேலும் இதனால் பெய்கின்ற மழைநீர் வழிந்தோடிவிடாமல் உரிமட்டைகளால் உறிஞ்சப்படும். உரிமட்டைகள் அதன் எடையைய் போல் சுமார் ஆறு முதல் எட்டு மடங்கு நீரை உறிஞ்சி வைத்துக்கொண்டு, மண் அடியில் புதைக்கப்பட்டுள்ள நீர் தொட்டி போல் செயல்பட்டு ஈரத்தினை வேர்களுக்கு தொடர்ந்து கொடுப்பதுடன், மரங்களுக்கு இடப்படுகின்ற உரங்கள் நன்கு கரைந்து எளிதில் உறிஞ்சிட ஏதுவாகிறது. இவ்வாறு செய்வதற்கு மரம் ஒன்றுக்கு 250 முதல் 300 காய்களின் உரிமட்டைகள் தேவைப்படும். இதனால் ஐந்து மாதங்களுக்கு நீர்ப்பிடிப்பத் தன்மை இருக்கும், மேலும் உரிமட்டைகள் நாள்கள் ஆக ஆக துரிதமாக மக்கும் தன்மையை அடையும். இவ்வாறு மக்குவதால் 100 உரிமட்டைகள் 1 கிலோ பொட்டாஷ் உரத்திற்கு சமமான சாம்பல் சத்தினை கொடுக்கின்றது.

தென்னை நார்க்கழிவு முலம் மண் ஈரம் பராமரித்தல்

மரத்தைச் சுற்றிலும் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு 50 செ.மீ. அகலம், 50 செ.மீ. ஆழம் பள்ளம் வெட்டி அதில் தென்னை நார்க் கழிவுகளை மண் இட்டு மூடவும். இம்முறையில் 10 செ.மீ. அளவுக்கு பரப்பிட மரம் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ தென்னை நார் தேவைப்படும். தென்னை நார்க்கழிவினைத் தென்னைக்கு இடுவதால் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மையும், காற்றோட்டமும் மேம்பட்டு வேர்கள் எளிதில் சுவாசிக்க உதவுவதுடன் மண்ணின் குணங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தென்னை ஒலைகள் மழைக்காலம் முடியும் தருணத்தில் தென்னை மரத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் ஆர வட்டப் பாத்திக்குள் சுமார் பதினைந்து தென்னை ஒலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒன்றன் மீது ஒன்றாக மூன்று சென்டி மீட்டர் உயரத்திற்கு அடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தென்னைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதுடன் மண்ணின் நீர்பிடிப்பத் திறனையும் அதிகரிக்கலாம். மேலும், இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை நன்கு மக்கும் தருணத்தில் இயற்கை உரமாகவும் செயல்படுகிறது.

கூராஞ்சி / பாளைகள்

கூராஞ்சி, பாளைகள் சற்று கடினத் தன்மையைக் கொண்டதாகும் . இவற்றின் பயன்பாடு நீண்ட நாள்களுக்கு கிடைப்பதுடன் சிறந்த முறையில் அதிக அளவில் நீர்ப்பிடிப்புத் தன்மையைத் தென்னைக்கு கிடைக்கச் செய்கின்றது. இவற்றை தென்னை மரத்தை சுற்றிலும் சுமார் 3 செ.மீ. உயரத்திற்கு அடுக்கி மண் இட்டு மூடிவிடலாம் அல்லது மூடாமலும் விட்டு விடலாம். இம்முறைக்கு கூராஞ்சி 800 எண்ணிக்கையும், பாளை 300 எண்ணிக்கையும் தேவைப்படும். இதனால் களை கட்டுப்படுத்தப் படுகின்றது, மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை, தென்னையின் காய்ப்பிடிப்பத் தன்மை அதிகரிக்கின்றது. பசுந்தாள் பயிர்

பசுந்தாள் பயிர்களான கொளிஞ்சி, சணப்பு, தட்டை பயறு போன்றவற்றை மழைக் காலங்களில் தென்னந்தோப்புகளில் மரத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் ஆர வட்டப்பாத்தி அமைத்து வெட்டிக்கொண்டு அதனுள் சுமார் 40 முதல் 60 கிராம் எடை கொண்ட விதைகளை நன்கு மண்ணின் ஈரம் படும்படி தூவ வேண்டும். பின்னர் 45 நாள்கள் கழித்து, அதாவது பூக்கும் தருணத்தில் சிறுசிறு துண்டுகளாக மரத்தை சுற்றிலும் இட வேண்டும். இவ்வாறு செய்வதானல் மண்ணின் ஈரம் காக்கப் படுவதுடன், உரமாகவும் பயன்படுகிறது. இம்முறையை ஆண்டிற்கு 3 அல்லது 4 முறையாவது செய்தால் நல்ல பலன் கிடைப்பதுடன் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமைகின்றது.

பயன்கள்

மழைக்காலத்தின் தொடக்கத்தில் தோப்புகளை உழவு செய்ய வேண்டும். இதனால் பெய்கின்ற மழைநீர் வழிந்தோடி விடாமல் உறிஞ்சப்படுகின்றது. களைகள் முளைப்பதைக் கட்டுப்படுத்தப்படுகின்றது. மேலும், கோடையில் மழை பெய்யும் சமயம் நீர் நன்கு உறிஞ்சப்படும்.

மேலே கூறிய நீர்ப்பாசன முறை களாலும் இயற்கையான அதிக செலவில்லாத இந்த மண் ஈரப்பராமரிப்பு முறைகளாலும் தென்னையில் எப்பொழுதும் பசுமையான மட்டைகள் இருக்கவும், பாளைகளில் அதிக குரும்பைகள் உதிர்வது குறையவும், ஒல்லிக்காய்கள் குறைந்து அதிக விளைச்சல் பெறுவதற்கு இத்தகைய மண் ஈர பராமரிப்பு ஒரு எளிய வழிமுறையாகும்.

கேள்வி பதில்கள்

1. சொட்டு நீர் பாசனத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?

ஒரு மரத்திற்கு ரூ. 130-150 வரை ஆகும். (பம்பு செட் செலவு தவிர) ஒரு மரத்திற்கு 4 சொட்டிகள் என்ற கணக்கில், சொட்டு நீர் பாசனம் அமைக்க 1 எக்டருக்கு ரூ 23000-26000 வரை செலவு ஆகும்.

2. தென்னந்தோப்பில் எவ்வாறு கால்வாய்கள் போட வேண்டும்?

முதன்மை மற்றும் துணைக் கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சவும்.

3. தென்னந்தோப்பில், மண்ணில் ஈரப் பதத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்?

நிலப் போர்வை போட்டு மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

4. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன?

பாத்திப் பாசனத்தைவிட சொட்டு நீர் பாசனத்தில், 30-40% தண்ணீர் சேமிக்கப்பட்டு, 38-40% அதிக மகசூல் கிடைக்கிறது.  மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், களைகள்  கட்டுப்படுத்தப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கான போட்டி குறைகிறது.  சொட்டு நீர் பாசனம் மூலம் உரமிடுவதால் நீர் ஊட்டச்சத்துக்களை தென்னைமரம் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories