நிலக்கடலை நவீன தொழில்நுட்பங்கள்

நிலக்கடலை நவீன தொழில்நுட்பங்கள்

நிலக்கடலை

 

மானாவாரி நிலங்களில் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இதற்கு, பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழைப் பருவம், அதிக அளவு மண் அரிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாகும். சில நவீன யுக்திகளை கையாண்டு மானாவாரி சாகுபடியிலும் நல்ல மகசூல் பெறலாம்.

நிலக்கடலை சாகுபடி மிகவும் முக்கியமான மானாவாரி பயிராக விளங்குகிறது. சுமார் 80 சதவிகிதத்திற்கு மேல் நிலக்கடலை பயிரையே மானாவாரி நிலங்களில் பயிர் செய்கின்றனர். நம் நாட்டில் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளின் நிலம் மானாவாரி நிலமாகவே உள்ளது.

 

நிலக்கடலை உற்பத்தியில் நம் நாடு இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. இது தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு நல்ல தரம் வாய்ந்த புரதம் மற்றும் தேவையான அளவு சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளாக பயன்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை மானாவாரியாக சாகுபடி செய்யும் போது கீழ்க்கண்ட உத்திகளைக் கையாள வேண்டும்.

 

ரகங்கள்

வி.ஆர்.ஐ. 2, 3, டி.எம்.வி. 7, 12, கோ-1, 2, ஜே.எல்-24 ஆகிய ரகங்கள் ஏற்றவையாகும்.

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோ வரை நிலக்கடலைப் பருப்பு தேவைப்படும்.

விதை நேர்த்தி

மானாவாரி நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கை பராமரிக்காததே மகசூல் குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. தண்டழுகல் நோய், வேர் அழுகல் நோய் ஆகியவை தாக்குவதால் பயிரின் வேர், தண்டு, அழுகி, கருகி பயிர் எண்ணிக்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகிறது.

பூசணக்கொல்லி விதை நேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் உரம் 4 கிராம் (அல்லது) கார்பன்டாசிம் 2 கிராம் இதில் ஏதேனும் ஒன்றை கலந்து வைத்து அடுத்த நாள் விதைக்கலாம்.

உயிரியல் மருந்து விதை நேர்த்தி

டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் பூஞ்சாணத்தை விதைப்பதற்கு முன் விதையுடன் கலந்து அடுத்த நாள் விதைக்கலாம்.

நுண்ணுயிர் விதைநேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கான விதையுடன் 200 கிராம் ரைசோபியம் (ஒரு பொட்டலம்) மற்றும் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா (ஒரு பொட்டலம்) ஆகியவற்றை ஒரு லிட்டர் ஆறிய வடிகஞ்சியில் கொட்டி நன்கு கலக்க வேண்டும். விதைகளை சாக்கு பையின் மேல் பரப்பவேண்டும்.
  • கஞ்சியுடன் கலந்த நுண்ணுயிர் கலவையை விதைகளின் மேல் ஒரு இலைக்கொத்து கொண்டு நன்கு தெளிக்கவேண்டும். சாக்குப் பையின் மீது உள்ள விதைகளை மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர் நன்கு விதைகளின் மேல் படும்படி செய்யவேண்டும்.
  • 15 – 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணிநேரத்திற்குள் இதனை விதைக்கவேண்டும்.
  • அதாவது, முதலில் நோய்களிலிருந்து பாதுகாக்க பூஞ்சாண விதை நேர்த்தி செய்துவிட்டு, அடுத்ததாக உயிர் உர விதை நேர்த்தி செய்து அதன்பின் 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உரமிடுதல்

  • பெரும்பாலும், மானாவாரி நிலங்களில் உரமிடுதல் என்பது மிகவும் குறைவு என்றே சொல்லலாம். ஆனால், வேளாண் ஆராய்ச்சியில் மானாவாரியில் மகசூல் அதிகரிக்க உரமிடுதல் அவசியம் என்று தெளிவாகியுள்ளது. குறிப்பாக, நிலக்கடலையில் மேலுரமிடுவதைத் தவிர்த்துவிட்டு அடியுரமாகவே உரமிடல் வேண்டும். மானாவாரி நிலத்திற்கு ஊட்டமேற்றிய தொழு உரம் இடுதல் சாலச் சிறந்ததாகும்.
  • விதைப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டி (300 கிலோ) மட்கிய குப்பையுடன் 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் (அரை மூட்டை) 30 கிலோ பொட்டாஷ் (சுமார் அரை மூட்டை) ஆகியவற்றை நன்கு கலந்து, காற்றுப்புகாமல் களிமண் மூலம் மூடிவிட வேண்டும்.
  • விதைக்கும் போது இந்தக் குப்பை மற்றும் உரங்களுடன் யூரியா 9 கிலோவைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இவற்றை கடலைப் பருப்பு சால் விடும் போது, அந்தப் படைக்காலில் தூவவேண்டும். டிராக்டர் மூலம் பருப்பு விதைத்தால், கடைசி உழவின்போது ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டுவிடலாம். ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க இயலாத நிலையில் நேரடியாக 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து விதைப்பின் போது இடலாம்.

ஜிப்சம் இடுதல்

  • நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம். ஜிப்சத்தில் 23 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும், 18 சதவீதம் கந்தகச் சத்தும் அடங்கியுள்ளது. இதில் சுண்ணாம்புச் சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடை உடையதாக உருவாகவும் வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது.
  • ஒரு ஏக்கருக்கு 80 கிலோ (2 மூட்டை) ஜிப்சத்தை அடியுரமாகவே இடவேண்டும். அதன்பின்பு விதைத்த 40-45-ஆம் நாளில் பூப்பிடிக்கும் தருணத்தில் மீண்டும் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். இவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மானாவாரி நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
  • “மானாவாரி நிலங்களில் உரமிடுதல் என்பது மிகவும் குறைவு என்றே சொல்லலாம். ஆனால், வேளாண் ஆராய்ச்சியில் மானாவாரியில் மகசூல் அதிகரிக்க உரமிடுதல் அவசியம் என்று தெளிவாகியுள்ளது. குறிப்பாக, நிலக்கடலையில் மேலுரமிடுவதைத் தவிர்த்துவிட்டு அடியுரமாகவே உரமிடல் வேண்டும். மானாவாரி நிலத்திற்கு ஊட்டமேற்றிய தொழு உரம் இடுதல் சாலச் சிறந்ததாகும்.”

ஆதாரம் : வேளாண்மை உதவி மையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories